“காங்கிரஸ் கட்சி 60 சீட் கேட்குது.. தேர்தல் வருவதால் விஜய்க்கு சப்போர்ட்”.. செல்லூர் ராஜு அட்டாக்!
மதுரை: தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது என்றும், திமுகவிடம் 60 சீட் வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பரவை பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில், "தேர்தலை ஒட்டி திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக ஒரு நாடகத்தை அறிவிக்கும்.

பொதுமக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அரசு ஊழியர்களுக்கும் அல்வா கொடுத்த அரசு இந்த அரசு. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக கூறி தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகாலம் சும்மா இருந்துவிட்டு ஆட்சி முடிய போகும் தருணத்தில் புதிதாக ஒரு பெயரை சொல்லி திட்டம் என திமுக அறிவிக்கிறது. ஆனால் அரசு ஊழியர்களோ தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்கட்சியாக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என சொன்னார். தற்போது ரூ.3 ஆயிரம் கொடுத்துள்ளார். மக்கள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டனர். நிச்சயம் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது பற்றிய கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, "நடிகர் ஜீவா தனது ஜிப்சி படத்திலேயே சென்சார் போர்டு 48 இடத்தில் கட் செய்து விட்டதாக கூறினார். முதலில் பாதிக்கப்பட்டவர் நடிகர் ஜீவா தான். அப்போது அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை. இன்று அதே சென்சார் போர்டு குறித்து குரல் கொடுக்கின்றனர். எல்லாம் தேர்தலை மனதில் வைத்தே நடக்கிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே தற்போது சென்சார் போர்டை எதிர்த்து விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது, ஆதரவாக உள்ளது. திமுகவிடம் 60 சீட் வேண்டும் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய செல்லூர் ராஜு, "ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்தது திமுக அரசு, அதன்பின் தன்னெழுச்சியாக போராட்டம் ஏற்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த எடப்பாடியார் பிரதமரிடம் நிலவரத்தை கூறி ஜல்லிக்கட்டு நடத்த காரணமாக இருந்தார். அதன் பின்னர் ஜல்லிகட்டு தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக கிராம மக்கள் தான் நடத்த வேண்டும். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் திமுக அமைச்சர் பி.முர்த்தி தலையீடு காரணமாக கட்சிக்காரர்களுக்கே முன்னுரிமை தரப்படுவதாக கூறி அவனியாபுரம் மக்கள், காளை வளர்ப்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு ரூ.1,000 தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இன்றளவும் தரவில்லை. எனவே, தற்போது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வரும் முதல்வர் மற்றும் துணை முதல்வரை காளை வளர்ப்பவர்கள் பராமரிப்பு தொகை ஆயிரம் தரவேண்டும் எனக் கேட்க உள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications