கொரோனா அதிகரிப்பு: பார்வையாளர்கள் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த முடிவு
கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை: கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மதுரையில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டுப்போட்டிகள் கண்டிப்பாக நடைபெறும் என்றும் சூழ்நிலைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார்.
ஓமிக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
கடந்த 2017ஆம் ஆண்டு மாநிலம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த போராட்டங்கள் வெடித்தன. மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடி போராடினர். அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. மதுரை, கோவையிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்காரணமாக தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்றப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு 2017ஆம் ஆண்டு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கியதில் இருந்து இதுவரை 22 காளைகள் மற்றும் 69 மனிதர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 4,696 பேர் காயமடைந்துள்ளதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியத்தே கடிதம் எழுதி உள்ளார்.
தற்போது ஓமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் உள்ளது. கொடிய வைரஸ் தொற்றுடன் நாடே போராடி வரும் சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு போன்ற அத்தியாவசியமற்ற போட்டிகளுக்கு இடம் அளிக்க கூடாது. எனவே மருத்துவர்களின் தொழில்முறை கருத்துகளுக்கு செவிசாய்த்து, பொதுமக்களை ஆபத்தான நோயில் இருந்து காக்கவும், காளைகளை கொடுமைகளில் இருந்து காக்கவும் ஜல்லிக்கட்டு போட்டியை கைவிடவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடத்தப்படும் என மதுரையில் அமைச்சர் மூர்த்தி உறுதிப்படுத்தினார். மதுரையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்றும் சூழ்நிலைக்கேற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் நேற்று கூறியிருந்தார்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொங்கல் பண்டிகை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications