எங்கள் கோரிக்கையை புறக்கணிக்கிறார் பிடிஆர்.. அடுத்தடுத்து மூன்று போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ!
மதுரை: பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அடுத்தடுத்து மூன்று போராட்டங்களை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளார். அதேபோல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புறக்கணிப்பதாகவும், தமிழக நிதித்துறை கார்ப்பரேட் முதலாளித்துவ சிந்தனையுடன் இருப்பதால் தங்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதியம் திட்டம் ரத்து, அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்தகட்ட போராட்ட நடவடிக்கைகள் குறித்து மதுரையிலுள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அடுத்தடுத்து போராட்டம்
இதனையடுத்து ஜாக்டோ ஜியோவின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பு குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மு.அன்பரசு, பொன்.செல்வராஜ் உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்த உள்ளோம்.

எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து மார்ச் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதன் பின்னர் மார்ச் 24ம் தேதியன்று வட்டார, மாவட்ட தலைநகரங்களில் 20 ஆயிரம் கிலோ மீட்டர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த 3 கட்ட போராட்டத்திற்குப் பின்னரும் எங்களின் கோரிக்கைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்று தெரிவித்தனர்.

அரசுக்கும் அதிகாரிகளுக்கும் இடைவெளி
தொடர்ந்து, அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே இடைவெளி உள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்கள் எங்களது உரிமையைப் பறித்து வருகிறார்கள். தற்போதைய திமுக ஆட்சி இரட்டை தன்மை ஆட்சியாக இருக்கிறது. தமிழக நிதித்துறை கார்ப்பரேட் சிந்தனையுடன் செயல்படுகிறது. எங்களது கோரிக்கைகள் தொடர்பான நிதியமைச்சக கோப்புகளை நிதியமைச்சர் புறக்கணிக்கிறார்.

நிதியமைச்சர் மீது குற்றச்சாட்டு
ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் சிந்தனை கொள்கைக்கு எதிரான போராட்டத்தை நடத்தவுள்ளோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிதியமைச்சர் அரசு ஊழியர்கள் குறித்துப் பேச மறுக்கிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படியை சமூக அநீதி என்று நிதியமைச்சர் கூறுகிறார். தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த பின், 20 மாதங்களாக பொறுத்துவிட்டோம் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications