மதுரை ரயில் நிலையத்தில் தொலைந்து போன தம்பி, தங்கை - 8 ஆண்டுகளுக்குப் பின் மீட்ட அண்ணன்
தொலைந்து போன தம்பி தங்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டுள்ளார் பாசக்கார அண்ணன். மதுரையில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மதுரை: ரயில் நிலையத்தில் அண்ணன் தண்ணீர் பிடிக்க போகும் போது ரயில் கிளம்பி விடும் தம்பி, தங்கைகள் ரயிலில் சென்று விடுவார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் கஷ்டப்பட்டு குடும்ப பாடல் எல்லாம் பாடி தேடி கண்டுபிடிப்பார். திரைப்படங்களில் மட்டுமே காணப்பட்ட இதுபோன்ற காட்சி மதுரையில் நிஜமாகவே நிகழ்ந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன தனது தம்பி தங்கையைக் கண்டு பிடித்துள்ளார் திருச்சியை சேர்ந்த பாசக்கார அண்ணன் ஒருவர்.
திருச்சியைச் சேர்ந்த சண்முகம், பார்வதி தம்பதியினர் ஊர் ஊராக போய் ஜோதிடம் பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு சென்ற போது தனது 2 வயது மகனையும் மகளையும் தவற விட்டு விட்டனர்.

சண்முகமும், பார்வதியும் மறைந்து போகவே, தொலைந்து போன தனது சகோதரன், சகோதரியே தேடும் பணியில் அவரது மூத்த அண்ணன் குமார் ஈடுபட்டார். கடந்த ஆண்டு திண்டுக்கல் அருகே ஒரு குழந்தைகள் காப்பகத்தில் சகோதரி மேரி இருப்பதை கண்டு பிடித்து மீட்டார்.
கடச்சனேந்தல் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்து வந்த விஜய் என்ற சிறுவனை இன்று சகோதரர் கண்டுபிடித்து மீட்டுள்ளார். தனது தம்பி, தங்கையை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்ட அண்ணன் குமார் மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் வராமல் தவிக்கிறார். தனது தம்பி, தங்கையை மீட்க உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பெற்றோரை தவற விட்டு தவித்த இரண்டு குழந்தைகளையும் மீட்ட ரயில்வே போலீசார், பெண் குழந்தையை திண்டுக்கல் அருகே காந்தி கிராமம் அருகே உள்ள ஆசிரமத்திலும் சிறுவனை மதுரையில் உள்ள காப்பகத்திலும் சேர்த்துள்ளனர்.
பல ஆண்டுகள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, உறவினர்கள் மூலம் கிடைத்த தகவல்கள் மூலம் குழந்தைகள் நல அமைப்பினர் உதவியுடன் சகோதரர் குமார் மீட்டுள்ளார்.
தமிழ் சினிமாக்களில் சகோதரனை தொலைத்த சகோதரி பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஒன்றாக இணைவார்கள். தற்போது நிஜமாகவே தன்னுடன் பிறந்த சகோதரர் சகோதரியை நீண்ட தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications