மதுரை வடக்கு தொகுதி.. திமுகவின் தளபதியை எதிர்த்து போட்டியிடும் சரவணன்.. எடப்பாடி கொடுத்த சிக்னல்!
மதுரை: மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரவணன் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மதுரை வடக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அதற்கான முழு ஏற்பாடுகளை சரவணன் மேற்கொண்டிருந்தார். இதனால் திமுகவின் கோ.தளபதிக்கு எதிராக மீண்டும் சரவணன் களமிறக்கப்படலாம் என்று பேச்சுகள் அதிகரித்துள்ளன.
மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் நாளில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 2வது நாளான நேற்று தொழிலதிபர்கள், சிறு குறு தொழில் நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்தார். இதன்பின் மதுரை வடக்கு மற்றும் மேலூர் தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்காக மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைத்து சென்றனர். இதனிடையே மதுரை வடக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டத்தின் முக்கிய அதிமுக நிர்வாகியான சரவணன் செய்திருக்கிறார்.
எங்கு திரும்பினாலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அமைச்சர்களுடன் தனது புகைப்படத்தை பேனராக சரவணன் வைத்திருக்கிறார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியை அதிமுக பாஜகவுக்கு ஒதுக்கியது. 2 முறை அதிமுக மதுரை வடக்கு தொகுதியில் வென்ற போதும், பாஜகவுக்கு கொடுத்தது. அப்போது பாஜக சார்பாக சரவணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
திமுக சார்பாக மாவட்டச் செயலாளர் கோ.தளபதி நிறுத்தப்பட்டார். இவர் சுமார் 23 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுரை வடக்கு தொகுதியை பொறுத்தவரை ரிசர்வ் லைன், டிஆர்ஓ காலணி, பிபி குளம், அண்ணா நகர், கோமதிபுரம், புதூர், நரிமேடு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். இங்கு முக்குலத்தோர், யாதவர், செளராஷ்டிரா, ஆதி திராவிடர் உள்ளிட்ட சமூகங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
அதிகளவில் வணிகர்கள் தொழில் செய்து வருகின்றனர். அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால், மதுரையின் மிக முக்கிய தொகுதியாக மதுரை வடக்கு தொகுதி அமைந்துள்ளது. இந்த முறையும் திமுக சார்பாக கோ.தளபதிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜனவரி மாதம் கோ.தளபதி ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர் மூலமாக உறுதி செய்தனர்.
இந்த நிலையில் இம்முறையும் கோ.தளபதியை எதிர்த்து மீண்டும் சரவணன் களமிறங்க உள்ளது உறுதியாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது. மதுரை சரவணன் பல்வேறு கட்சிகளில் இருந்திருந்தாலும், தற்போது அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலின் போதே அதிமுகவின் உட்கட்சி பூசல் காரணமாக சரவணன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இம்முறை சரவணன் அதனை சரி செய்தால் மட்டுமே மதுரை வடக்கு தொகுதியில் வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்க முடியும். ஏற்கனவே செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா ஆகியோருக்கும் சரவணன் தரப்புக்கும் நல்ல நட்பு இல்லை என்று அதிமுக வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன. இதனால் தேர்தல் பணிகள் சரவணனுக்கு கை கொடுத்தால், மதுரை வடக்கை அதிமுக கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது.












Click it and Unblock the Notifications