ஊர்ந்து, ஊர்ந்து பதவியை வாங்கியது யார்னு ஊருக்கே தெரியும்.. எடப்பாடியை விட்டு விளாசிய ஓபிஎஸ்
மதுரை: ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர் யார்? நம்பிக்கை துரோகம் செய்தவர் யார்? என்று மக்களுக்கே நன்றாக தெரியும் என எடப்பாடி பழனிச்சாமியை, ஓ பன்னீர் செல்வம் கடுமையாக தாக்கி பேசினார்.
அதிமுகவில் உள்கட்சி பூசல் உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு கட்சியில் இரட்டை தலைமை உருவானது.
ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். கட்சி சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இருவரின் கையெழுத்துடன் வெளியாகி வந்தன.

அதிமுகவில் மோதல்
இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் ஒற்றை தலைமை பிரச்சனை எழுந்தது. பொதுக்குழு கூட்டத்தின் மூலம் கட்சியில் ஒற்றை தலைமையை முன்வைத்து ஓ பன்னீர் செல்வத்தை விட்டுவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக கொண்டு வரும் முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தற்போது வரை இருவருக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

ஓபிஎஸ்-இபிஎஸ் வார்த்தை போர்
தற்போதைய நிலவரப்படி நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறார். ஓ பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது நிலுவையில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

ஓபிஎஸ் பேட்டி
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கடுமையாக எடப்பாடி பழனிச்சாமியை தாக்கி பேசினார். இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: அதிமுக தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் இயக்கமாக தான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். ஜெயலலிலதா 30 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்து பல தியாகம் செய்து கட்சியை வளர்த்தார்.

ஏற்புடையது அல்ல
தற்போது கட்சியின் 50 ஆண்டு நிறைவு விழாவில் மக்கள், தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் இந்த தருணத்தில் விரும்பதகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினார்கள்? என்பது நாட்டு மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றாகவே தெரியும். இவ்வளவு பெரிய பாவத்தை செய்துவிட்டு அடுத்தவர்கள் மீது பழிபோடுவது என்பது ஏற்புடையது அல்ல.

ஊர்ந்து ஊர்ந்து பதவி
மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் செய்தவர்கள் யார்? என்பதும், நம்பிக்கை துரோகம் செய்தவர்கள் யார் என்றும் நல்லவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும், அரசியல் நன்றாக தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். என்னை பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும். தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். உரிய நேரத்தில் நான் தொண்டர்களை சந்தித்து அணுகுவேன்'' என்றார். இறுதியாக அதிமுக கட்சி ஒன்றாக இணையுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛உறுதியாக'' என கூறிவிட்டு சென்றார்.

அரசியலை விட்டு ஒதுங்க தயாரா?
முன்னதாக ஓ பன்னீர் செல்வம் அதிமுகவை அழிக்கும் நோக்கத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அரைமணிநேரம் பேசியதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த ஓ பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும், இல்லாவிட்டால் எடப்பாடி பழனிச்சாமி ஒதுங்க வேண்டும் எனவும் இந்த பேட்டியின்போது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications