அங்கேயே காத்திருந்த ‘தலை’கள்.. ‘டாட்டா’ காட்டிய மோடி.. போச்சே! மீண்டும் முட்டி மோதும் ஓபிஎஸ் ஈபிஎஸ்!
மதுரை : தமிழகம் வந்த பிரதமர் மோடி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருடனும் தனியாகச் சந்தித்துப் பேசாமலேயே விசாகப்பட்டினம் கிளம்பிச் சென்றார்.
பிரதமர் மோடியை சந்தித்துப் பேச ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே நேரம் கேட்டிருந்தனர். இருவருமே மதுரை விமான நிலையத்தில் வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி, இருவரும் ஒரே நேரத்தில் இணைந்து நின்று பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்களுடன் தனிப்பட்ட முறையில் எதுவும் பேசாமலேயே திண்டுக்கல் புறப்பட்டுச் சென்றார் மோடி.
பின்னர் அங்கிருந்து காரிலேயே மதுரை திரும்பிய பிரதமர் மோடி உடனடியாக தனி விமானத்தில் விசாகப்பட்டினம் கிளம்பினார். இதையடுத்து, மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஏமாற்றத்தோடு திரும்பியுள்ளனர்.

பிரதமரை சந்திக்க போட்டி
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என ஓபிஎஸ் விரும்புகிறார். எடப்பாடி பழனிசாமியும், பாஜக தலைமையின் ஆதரவு தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஓபிஎஸ், இரட்டை தலைமையே தொடரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். பாஜக தலைமையும் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புவதாகவே தெரிகிறது. ஆனால், அதிமுகவில் ஓபிஎஸ்ஸுக்கு இடம் இல்லை என்பதில் ஈபிஎஸ் உறுதியாக உள்ளார். இதனால் சிக்கல் 5 மாதங்கள் கடந்தும் இன்னும் தீர்ந்தபாடில்லை.

காத்திருந்த தலைமைகள்
இந்நிலையில் தான் இன்று தமிழகம் வந்த பிரதமர் மோடியைச் சந்திக்க இருவருமே தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முன்னரே, அப்பாயின்மெண்ட் கேட்டிருந்தும், பதில் எதுவும் கிடைக்காத நிலையில், மோடியை விமான நிலையத்தில் வரவேற்கலாம் என இருவருக்கும் ஒரே நேரத்தில் ஓகே சிக்னல் கிடைத்தது. பிரதமர் மோடி திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இன்று வந்த பிரதமரை வரவேற்க மதுரை விமான நிலையத்தின் உள்ளே எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காத்திருந்தனர்.

2 டீம்
எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியைச் சேர்ந்த ராஜன் செல்லப்பா, ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் 5 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரும் ஒன்றாக நின்று பிரதமர் மோடியை வரவேற்றனர். அவர்கள் அருகருகே நிற்காமல் அதிகாரிகள் சிலர் இடையே நின்றனர். விமான நிலையத்திலும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் நேருக்கு நேர் முகம் பார்த்துக் கொள்ளவில்லை. தனித்தனியாக நின்ற இருவரையும் அருகே வருமாறு அழைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர் மோடி.

காரில் ரிட்டர்ன்
அதன் பிறகு ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் புறப்பட்டார் பிரதமர் மோடி. திண்டுக்கல் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை ஹெலிபேடில் இறங்கிய பிரதமர் மோடி, அங்கிருந்து காரில் பயணித்து காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திண்டுக்கல்லில் இருந்து கிளம்பிய பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாகவே மதுரைக்குப் புறப்பட்டார். மோசமான வானிலை காரணமாக காரில் செல்லும் முடிவு செயல்படுத்தப்பட்டது.

மீண்டும் மதுரையில்
காரில் மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். பிரதமர் மோடி விமானம் மூலமாக மோடி விசாகப்பட்டினம் சென்றார்.

ஏமாற்றம்
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்ப ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் மதுரை விமான நிலையத்தில் ஈபிஎஸ் தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ தனியாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல் மோடி விமானத்தில் ஏறிச் சென்றார். வரவேற்கவும், வழியனுப்பவும் காத்திருந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஏன் பேசவில்லை?
பிரதமர் மோடி யாரை தனியாகச் சந்தித்துப் பேசினாலும், அதில் அரசியல் சாயம் பூசப்படும் என்பதாலும் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் வெளிப்படையாகத் தலையிடுவதை விரும்பவில்லை என்பதாலும் பிரதமர் மோடி ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை தனியாகச் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பிரதமரின் இந்தப் பயணம் வெறும் சில மணி நேரங்கள் மட்டுமே கொண்ட டைட்டான ஷெட்யூல் என்பதால் தான் அவர்களிடம் தனியாகப் பேசவில்லை என்றும் ஒரு தகவல் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அமித்ஷாவோடு சந்திப்பு
மோடியுடன் பேச முடியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று இரவு 11 மணிக்கு சென்னை வருவதால், அவரைச் சந்திக்க உடனடியாக விமானத்தில் சென்னை திரும்பி உள்ளனராம். சென்னை வரும் அமித்ஷா, பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அமித்ஷாவை சந்தித்துப் பேசுவதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே நேரம் கேட்டுள்ளனராம். அமித்ஷா தங்கியிருக்கும் ஹோட்டலில் இருவருமே தனித்தனியாகச் சந்தித்து அதிமுக விவகாரம் குறித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications