"ரியல் இந்துத்துவவாதி ஜின்னாவை கொன்றிருப்பார்.. காந்தியை இல்லை.." சிவசேனா பரபர கருத்து
மும்பை: சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி சஞ்சய் ராவத், காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே கண்டிப்பாக உண்மையான இந்துத்துவவாதி இருக்க முடியாது என்று சாடியுள்ளார்.
நாட்டின் தேச தந்தையாகக் கருதப்படும் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக நாட்டில் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸின் ராகுல் காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று தனது ட்வட்டரில் ஒரு இந்துத்துவவாதி மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றார் என்றும் ஆனால் உண்மை இருக்கும் அனைத்து இடங்களிலும் காந்தி இன்றும் உயிருடன் இருக்கிறார் என்றும் ட்வீட் செய்துள்ளார். ராகுல் காந்தி நடைபெறும் 5 மாநில தேர்தல் இந்துக்களுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் இடையேயான தேர்தல் என்பதை முன்னிறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் ராகுல் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

காந்தி இல்லை ஜின்னா
இந்தச் சூழலில் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான எம்பி சஞ்சய் ராவத், உண்மையான இந்துத்துவவாதி என்றும் காந்தியைச் சுட்டுக் கொலை செய்திருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "பாகிஸ்தானுக்கான கோரிக்கை ஜின்னா உடையது. பிரிவினையைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளுக்கு அவர்தான் காரணம். கொலையாளிகள் (மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே உள்ளிட்டோர்] முதுகெலும்பு உள்ளவர்கள் என்றால், அவர்கள் ஜின்னாவை சுட்டுக் கொன்றிருப்பார்கள், காந்தியை அல்ல.

உண்மையான இந்துத்துவவாதி
அது தான் தேசபக்தியின் செயலாக இருந்திருக்கும். ஆனால் காந்தியைச் சுட்டுக் கொன்றதன் மூலம், ஒட்டுமொத்த உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. இன்றும் கூட காந்தி நினைவு கூறப்படுகிறார்" என்று தெரிவித்தார். மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமையலாம் என்று தகவல் வெளியாகி வரும் நிலையில், சஞ்சய் ராவத்தின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த காலம்
மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள போதிலும் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. அங்கு முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் சிவசேனாவிடம் இருந்து இதுபோன்ற ஒரு கருத்து வந்ததில்லை. குறிப்பாக பாஜக சிவசேனா கூட்டணி இருந்த போது, கடந்த 1991இல் புனேவில் நடைபெற்ற பேரணியில் நாதுராம் கோட்சேவின் செயலை பால் தாக்கரே பாராட்டிப் பேசியிருந்தார்.

சிவசேனா - காங்கிரஸ்
கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் கெரி சம்பவத்திற்குப் பிறகு சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான உறவு நெருக்கமாகி வரும் நிலையில், சஞ்சய் ராவத் இப்படித் தெரிவித்துள்ளார். அதேபோல கூட்டணி அரசு அமைந்தது முதல் பாஜக இந்துத்துவ கொள்கைகளில் இருந்து விலகி விட்டதாக சிவசேனா தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா தேர்தல்
கடந்த 2019இல் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டசபையில் பாஜக 105 தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் பாஜக மற்றும் சிவசேனா இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து பாஜக - சிவசேனா இடையேயான 25 ஆண்டுக்கால கூட்டணி முடிவுக்கு வந்தது. பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்த போதிலும், சிவசேனா (56), என்சிபி (54) மற்றும் காங்கிரஸ் (44) கூட்டணி ஆட்சியை அமைத்தது.












Click it and Unblock the Notifications