காலிஸ்தான் அமைப்புடன் ஜூம் மீட்.. பெண் வழக்கறிஞர் எஸ்கேப்.. தலை சுற்றும் 'டூல்கிட்' வழக்கு
மும்பை: டூல்கிட் வழக்கில், திஷா ரவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஆர்வலருமான நிகிதா ஜேக்கப் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடிக்க, காலிஸ்தான் ஆதரவாளர்களால் தான் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, ட்விட்டரில் உலவிய டூல்கிட்டை இதற்கு ஆதாரமாக தெரிவித்தனர்.
வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் என்ன மாதிரியான ஹேஷ்டேக் உருவாக்க வேண்டும், எப்படிப்பட்ட கேள்விகளை கேட்க வேண்டும், போராடும் விவசாயிகளுக்கு ஏன் ஆதரவு அளிக்க வேண்டும்? என நீண்ட விவரங்கள் அடங்கியதுதான் டூல்கிட். அந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.
இந்த டூல்கிட்டை பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழலியல் ஆர்வலர் திஷா ரவி என்பவர் சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்ததால், அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து திஷா ரவியை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு நேற்று முன்தினம் (பிப்.14) பெங்களூருவில் வைத்து கைது செய்தது. டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தற்போது 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

வழக்கறிஞர் நிகிதா ஜோசப்
திஷா கைது குறித்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்தத் தலைவர்களான ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, நடிகர் சித்தார்த் என பலரும் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர். இந்நிலையில், திஷா கைதைத் தொடர்ந்து, டெல்லி காவல்துறை திங்களன்று மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப் மற்றும் அவரது உதவியாளர் ஷாந்தனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கூகுள் டூல்கிட்டை உருவாக்கியவர்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டு.

இங்கிலாந்து தொண்டு நிறுவனம்
ஜேக்கப் மற்றும் சாந்தனு மும்பையில் உள்ள அவர்களது வீடுகளில் காணவில்லை. இருவரும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்காக Extinction Rebellion (XR) வேலை செய்கிறார்கள்.

திருத்தப்பட்ட ஆவணம்
இது குறித்து ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், "திஷாவுக்கு கிரெட்டாவுடன் தொடர்பு இருந்தது. ஆகையால் திஷாவை இந்த டூல்கிட் விவகாரத்தில் இணையும்படி நிகிதாவும் சாந்தானுவும் கேட்டுக் கொண்டனர். அவர்களின் நோக்கம், இந்த பிரச்சனையை உலகளவில் கொண்டுச் செல்வதாக இருந்தது. இந்த டூல்கிட்டை அவர்கள் சீக்ரெட்டாக கையாள எண்ணினர். ஆனால் கிரெட்டா அதை ட்விட்டரில் வெளியிட்டார். பின்னர் அவர்கள் அதை நீக்கும்படி கேட்ட பிறகு, அதனை அவர் நீக்கினார். பின்னர், திஷா அந்த ஆவணத்தைத் திருத்தி, அது மீண்டும் பதிவேற்றப்பட்டது" என்றார்.

ஐந்து எடிட்டர்
நிகிதா மற்றும் சாந்தனு ஆகியோர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். மேலும் மும்பையில் உள்ள அவர்களது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அவர்களது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை ஸ்கேன் செய்தபின், டூல்கிட்டில் ஐந்து எடிட்டர்கள் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இவர்களில் நிகிதா, அவரது உதவியாளரான சாந்தனு, திஷா ரவி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இரண்டு பேர் இடம் பெற்றுள்ளனர் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.