காதில் இருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்.. இவங்க ஆண்ட பத்தாதா? நாகையில் திமுக மீது பாய்ந்த விஜய்

Subscribe to Oneindia Tamil

நாகை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் இன்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.. முன்னதாக, நாகையில் புத்தூர் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்களை கூறி அந்த இடத்தில் போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.. எனவே அதற்கு பதிலாக, அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், இங்கு இன்று உரை நிகழ்த்தியிருக்கிறார்..

வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வது என்று விஜய் முடிவு செய்துள்ளார்.. அந்தவகையில், கடந்த வாரம் திருச்சியில் முதல் பிரச்சாரத்தை துவங்கினார்.. ஆனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதால், அங்கு விஜய்யால் உரை நிகழ்த்த முடியவில்லை.

nagapattinam thiruvarur Vijay

பிறகு, பெரம்பலூரில் நடத்தவிருந்த மக்கள் சந்திப்பையும் நேரமின்மை காரணமாக விஜய் ரத்து செய்தார். அதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் தனியார் சொத்துக்களை தவெக தொண்டர்கள் சேதப்படுத்தியதாக, மாவட்ட நிர்வாகிகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையும் எடுத்துள்ளது.

இதனிடையே, விஜய் அப்போது மேற்கொண்டிருந்த சுற்றுபயணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த தவெக தலைமை, கோர்ட்டுக்கு சென்றது.. இதுதொடர்பான வழக்கு விசாரணையில் அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விதிகள் வகுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

நாகையில் பிரச்சாரம்

முன்னதாக, இன்றைய தினம் செப்டம்பர் 20ம்தேதி சனிக்கிழமை, நாகையில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள முடிவானது.. இதற்காக எந்தெந்த பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வது? என்றும் தவெகவினர் ஆலோசித்தனர்..

அதன்படி, கீழ்வேளூர் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன.. புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி ஸ்டேடியம், நாகூர் புதிய பஸ் ஸ்டாண்ட், வேளாங்கண்ணி ஆர்ச் ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள நாகை போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ரவுண்டானா கேன்சல்

ஆனால், வரவேற்பு கொடுக்க உள்ள வாஞ்சூர் ரவுண்டானா பகுதி தமிழக-புதுச்சேரி எல்லை என்பதால் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று கூறிய காவல்துறை, ரவுண்டா பகுதியில் பிரச்சாரத்துக்கு அனுமதி தரவில்லை.

இதையடுத்து, நாகையில் பிரச்சாரம் செய்யும் இடத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது.. அதன்படி பொதுமக்களின் போக்குவரத்துக்கு தொந்தரவு வராதபடி, புத்தூர் ரவுண்டானாவிற்கு பதிலாக அண்ணா சிலை அருகே விஜய் உரையாற்ற போலீசார் அனுமதி தந்தனர்.. குறிப்பாக நண்பகல் 12.25 மணி முதல் 1 மணி வரை 35 நிமிடங்கள் மட்டுமே அவர் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் போலீசார் கட்டுப்பாடுகளை விதித்தனர்.

எனவே, நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் மதியம் 12.30 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்ற உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

போலீஸ் விதித்த 20 கண்டிஷன்கள்

முன்னதாக, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக் கூடாது. பொதுச் சொத்திற்கு சேதம் விளைவிக்கக் கூடாது, கட்சியின் தொண்டர்களை கட்டுக்கோப்பான முறையில் தலைவர் வழிநடத்த வேண்டும் என்றெல்லாம் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அதாவது காவல்துறை சார்பில் விதிக்கப்பட்ட 20 நிபந்தனைகளை விதிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக, விஜய் செல்லும் கேரவன் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. அந்த வாகனத்தின் முன்பாகவோ பின்பாகவோ இரு சக்கர வாகனம் கார் அல்லது நடந்தோ செல்லக்கூடாது. விஜய்யின் வாகனத்தை யாரும் பின் தொடரக்கூடாது என்றும் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

கட்சியினர் கண்டிஷன்

அதேபோல தவெக தரப்பிலும் பல முக்கிய அறிவுறுத்தல்கள் தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன.. அதேபோல, தவெக தலைவர் விஜயின் பிரச்சாரத்தையொட்டி நாகையில் அவர் செல்லும் இடங்களில் முன்கூட்டியே மின்தடை செய்யப்பட்டுள்ளது.

நாகை வாஞ்சூர் ரவுண்டனா முதல் புத்தூர் அண்ணா சிலை வரை நடிகர் விஜய் செல்லும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி வாஞ்சூர், நாகூர், காடம்பாடி, செல்லூர், புத்தூர், புத்தூர் ரவுண்டானா, புத்தூர் அண்ணா சிலை வரை மின்தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடியே, நடிகர் விஜய் காலை 11 மணிக்கு நாகையில் பிரசாரத்தை திறந்த வாகனத்தில் தொடங்கினார்.. விஜய்யை நேரில் பார்ப்பதற்காக ஏராளமான தவெக தொண்டர்கள் முன்கூட்டியே கூடியிருந்தனர்.

காதிலிருந்து ரத்தம்

தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய விஜய், "மீன் பதப்படுத்தும் நவீன வசதிகளுடன் கூடிய தொழிற்சாலைகள் இங்கில்லை.. அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகளும் இல்லை.. அதிக குடிசைப்பகுதி கொண்ட ஊர், இந்த நாகப்பட்டினம்தான்.. இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அடுக்கு மொழியில் பேசிப்பேசியே, இதை கேட்டு கேட்டு, காதிலிருந்து ரத்தம் வந்ததுதான் மிச்சம்..

இவங்க ஆண்டது பத்தாதா? தவியாய் தவிக்கிறார்களே மக்கள் என்று பேச்சை துவங்கிய விஜய், கபடநாடக திமுகஅரசு, பாசிச பாஜக அரசு என்றெல்லாம் பேசிய விஜய், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், மீன் தொழிற்சாலைகள் நாகையில் இல்லாதது குறித்தும் சாடி பேசினார்.

இந்த நாகை பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு, மதியம் 3 முதல் 5 மணி வரை திருவாரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.. நாகை, திருவாரர் இரு இடங்களிலும் பிரச்சாரம் முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கு, தனி விமானத்தில் சென்னை திரும்ப உள்ளதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+