கண்கள் கலங்குதே.. 84 ஆண்டுகளாக கடித நட்பு.. 100வது வயதில் முதல் முறையாக வீடியோ கால்! வாவ் "பெஸ்டீஸ்"
நியூயார்க்: ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் அல்ல.. மொத்தம் 84 ஆண்டுகளாக வெறும் கடிதங்கள் மூலமாகவே பேசி வந்த ஆண் - பெண் இருவரும் தங்கள் 100-வது வயதில் முதன்முறையாக வீடியோ காலில் சந்தித்துக் கொண்ட உணர்ச்சிகரமான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் என தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த காலக்கட்டத்தில் கூட பழைய நண்பர்களுடன் பேச விரும்பாத இன்றைய தலைமுறையினருக்கு, உண்மையான நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை புரிய வைத்திருக்கிறார்கள்.
5000 மைல்களுக்கு அப்பால் வசித்த இவர்களுக்கு இடையே இந்த அற்புதமான நட்பு எப்படி மலர்ந்தது, எத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் நட்பை பழுதடையாமல் கொண்டு சென்றனர் என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
என்னய்யா.. மாமனும் மச்சானும் ஒண்ணும் தெரியாதமாதிரி பேசிக்கிறீங்க.. சக அமைச்சரை கலாய்த்த கே.என்.நேரு!

கல்லூரி காலத்தில் மலர்ந்த நட்பு
பிரிட்டனின் டேவோனில் உள்ள ஹோனிடனைச் சேர்ந்தவர் ஜெஃப் பேங்க்ஸ். 1922-ம் ஆண்டு பிறந்தவரான இவர், அங்குள்ள ஒரு பள்ளியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார். அந்த சமயத்தில், அதாவது 1938-ம் ஆண்டு அவர் படிக்கும் பள்ளியில் 'கல்ச்சுரல்ஸ்' (Culturals) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கும் வேலைகளை ஜெஃப் பேங்ஸ் செய்து வந்தார். அப்போது, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு பள்ளிக்கு இவர் கடிதம் எழுதினார். இந்தக் கடிதமானது அந்தப் பள்ளியின் மாணவர் தலைவியாக (Pupil's Leader) இருந்த செலஸ்ட்டா பைரனுக்கு கிடைக்கிறது. அன்றுதான் இவர்களுக்கு இடையேயான முதல் அறிமுகம் நடைபெற்றுள்ளது. அப்போது அவர்களுக்கு வயது 16.

உலகப்போரிலும் தொடர்ந்த நட்பு
அதன் பின்னர், தங்கள் கல்லூரியால் இப்போதைக்கு பிரிட்டன் வர முடியாது என்பதை செலஸ்ட்டா, மற்றொரு கடிதம் வாயிலாக ஜெஃப் பேங்ஸுக்கு தெரிவிக்க, இருவருக்கும் இடையே ஒரு இனம் புரியாத நட்புணர்வு ஏற்பட்டது. அன்று முதல், இருவரும் அவரவர் வீட்டு முகவரிக்கே பரஸ்பரம் கடிதங்களை அனுப்ப தொடங்கினர். இவ்வாறு அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து 5000 மைல் தொலைவில் இருந்த இருவரும் கடிதங்கள் மூலமாகவே உரையாடத் தொடங்கினர். ஆனால், அடுத்த ஆண்டு, அதாவது 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டதால் இவர்களுக்கு இடையேயான தொடர்பு அறுந்தது. ஆனால், நிலைமை சீரான பிறகு மீண்டும் அவர்கள் கடிதங்களின் மூலம் தங்கள் அன்பை பரிமாறி வந்தனர்.

களங்கப்படாத நட்பு
நாட்கள் உருண்டோடின. ஜெஃப் பேங்ஸ் பிரிட்டன் விமானப்படையில் மெக்கானிக்காக பணிக்கு சேர்ந்தார். அவருக்கு திருமணமும் முடிந்தது. இதேபோல, மறுபுறம் செலஸ்ட்டா வங்கி அதிகாரியாக பணியில் அமர, அவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனாலும், அவர்களுக்கு இடையேயான நட்பை திருமண பந்தம் உடைக்கவில்லை. ஆணும், பெண்ணும் நட்பாக பழகுவதை இன்று கூட சந்தேகக் கண்ணால் பார்க்கும் இந்த சமூகம், அன்றைக்கு எப்படி இருந்திருக்கும்? இவர்கள் நட்பு மீதும் முதலில் அவரவர் இணையருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், காலங்கள் செல்ல செல்ல, இது உண்மையிலேயே ஆத்மார்த்தமான நட்பு என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

உணர்ச்சிகரமான முதல் வீடியோ கால்
இவ்வாறு தங்கள் 20-வது வயதில் ஏற்பட்ட நட்பை, எந்தக் களங்கமும் இல்லாமல் அவர்கள் 100-வது வயது வரை கொண்டு சென்றிருக்கிறார்கள். இப்போது அவர்கள் இருவரும் பேரனுக்கே பேரன்களை பார்த்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக அவர்களுக்கு இடையே வாரத்துக்கு ஒரு முறையாவது கடிதப் போக்குவரத்து நடந்துவிடும். இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக கடிதப் போக்குவரத்தை நிறுத்திய அவர்கள் இ-மெயில் மூலம் உரையாடி வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் ஜெஃப் பேங்ஸ்சின் 100-வது பிறந்த நாளன்று அவரது பேரன்கள், அவருக்கு ஒரு ஸ்மார்ட்ஃபோனை பரிசளித்து, அவரது தோழி செலஸ்டாவுடன் வீடியோ காலில் பேச வைத்தனர். கடிதம் மூலமே நீண்டகாலம் பேசி வந்த அவர்கள், முதன்முறையாக வீடியோ காலில் பார்த்த போது உணர்ச்சிமிகுதியில் கண் கலங்கிவிட்டனர்.

இளமையின் வேகம்.. முதுமையின் பக்குவம்..
இதுகுறித்து ஜெஃப் பேங்ஸ் கூறும்போது, "எங்கள் இருவருக்கும் இடையேயான கடித உரையாடல் பக்கத்து வீட்டுக்காரருடன் பேசுவதை போன்றே இருந்திருக்கிறது. எங்கள் வாழ்க்கையில் 16-வது வயதில் 100-வது வரை நடந்த அத்தனை விஷயங்களையும் நாங்கள் பகிர்ந்திருக்கிறோம். நெருக்கடியான காலக்கட்டங்களில் செலஸ்ட்டாவிடம் வரும் கடிதங்கள் எனக்கு மிகவும் ஆறுதலாகவும், உத்வேகமாகவும் இருந்திருக்கிறது. அதுபோல அவருக்கும் இருந்திருக்கும் என நம்புகிறேன். தினம் தினம் எங்கள் குடும்பத்தில் நடப்பதை கூட அவருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தி இருக்கிறேன். முதன்முதலில் 2002-ம் ஆண்டு எங்களின் 80-வது வயதில் நாங்கள் சந்தித்தோம். அதன் பிறகு, இப்போதுதான் செலஸ்ட்டாவை வீடியோ காலில் பார்க்கிறேன். அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் அனைத்தையும் நான் சேமித்து வைத்திருக்கிறேன். என்றாவது அவற்றை எடுத்து படிப்பேன். அதை படிக்கும் போது ஆரம்பத்தில் எங்களிடம் இருந்த இளமையின் வேகமும், இப்போது எங்களிடம் உள்ள முதுமையின் பக்குவமும் நன்றாக தெரிகிறது. எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டே இருக்கும்" இவ்வாறு ஜெஃப் பேங்க் கூறினார்.