சுத்து போடுறாங்களே! பாகிஸ்தான், சவுதி, அமெரிக்கா.. அடுத்தடுத்து நடந்த சம்பவம்! இந்தியா சுதாரிக்கணும்
நியூயார்க்: அமெரிக்கா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கிய நாடுகள் அடுத்தடுத்து இந்தியாவிற்கு எதிராக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நாடுகளின் நடவடிக்கை இந்தியாவிற்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்ற விவாதம் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பு
இந்தியாவின் மீது பொருளாதார தடைகள் விதிப்பதற்கு ஏற்ற சூழல்கள் நிலவி வருகிறது. இதை சரி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது, பேச்சுவார்த்தைகள் மூலம் இதை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்தியா மீது இன்னும் ஆக்சன் எடுக்க வேண்டி இருக்கும், என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் அமெரிக்கா-இந்தியா உறவுகளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் மிகப்பெரிய எரிசக்தி தேவைகளைப் புரிந்துகொண்டாலும், சலுகை விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது மாஸ்கோவின் போர் முயற்சிகளுக்கு உதவுகிறது. ரஷ்யா நடத்தும் போருக்கு இந்தியாவின் பணம் உதவுகிறது. இதை இந்தியா நிறுத்த வேண்டும். . நாங்கள் ஒரு நல்ல நட்பு நாடுகள் என்றாலும், எல்லாவற்றிலும் 100% ஒத்துப் போவதில்லை. குறிப்பாக எரிசக்தி விஷயத்தில். பிற சப்ளையர்களும் உள்ளனர். இந்தச் சிக்கலைத் தீர்ப்போம் என நம்புகிறேன்.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவது அபத்தமானது.. இந்தியா மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளும் எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்க அமெரிக்காவை ஐரோப்பா வலியுறுத்தும் அதே வேளையில், ஐரோப்பா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.. ஐரோப்பா இப்போதும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குகிறது. அதை தடுக்க வேண்டும்.
நாங்கள் ஏற்கனவே இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மேலும், அதிக நடவடிக்கைகளை எடுக்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது. அவர் அதை பரிசீலித்து வருகிறார், என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா உடன் பாகிஸ்தான் ஒப்பந்தம்
இதற்கு இடையே சவுதி அரேபியா உடன் பாகிஸ்தான் மேற்கொண்டு உள்ள ஒப்பந்தம் இந்தியாவிற்கு பெரிய சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்படும் பட்சத்தில், அது மற்ற நாட்டின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சவுதி தாக்கப்பட்டால் பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். பாகிஸ்தான் தாக்கப்பட்டால் சவுதி பாகிஸ்தான் உடன் நிற்கும்.
சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் ஆகியோர் ரியாத்தில் சமீபத்தில் சந்திப்பு நடத்தினர். இந்த நிகழ்வுக்குப் பிறகு, இரு நாடுகளுக்குமிடையே எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் கூட்டாகப் பதிலளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா, இந்த நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாக்கவும், அனைத்துத் துறைகளிலும் விரிவான தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் அறிவித்தது.
அமெரிக்கா பாகிஸ்தான் நெருக்கம்
ஏற்கனவே அமெரிக்கா பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து வெற்றி பெறுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்கா-பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் வலியுறுத்தின. இது போக நேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோரை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இரு தலைவர்களையும் சிறந்த தலைவர்கள் என டிரம்ப் புகழ்ந்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானின் எண்ணெய் வளங்களை அமெரிக்க முதலீட்டிற்கு திறந்து விடுவதையும், பாகிஸ்தானுக்கு வரிச் சலுகைகளை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. இது சிறப்பான ஒப்பந்தம்.. பாகிஸ்தானின் செயல்பாடுகளை பாராட்டுகிறோம் என்று டிரம்ப் புகழ்ந்து உள்ளார்.
இப்படி வரிசையாக முக்கியமான நாடுகள் இந்தியாவிற்கு எதிராக செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக இந்த நாடுகள் பாகிஸ்தான் உடன் நெருக்கமாகி வருவது இந்தியாவிற்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications