அக்னிபாத்தால் கலைந்த கனவு! கவலையில் 2 பேர் தற்கொலை! துக்கத்திலும் உறுப்பு தான முயற்சி- நெகிழ்ச்சி
பாட்னா: அக்னிபாத் திட்டத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்ட நிலையில் ஒடிசா, ஹரியானாவில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த துக்கத்திலும் கூட உடல் உறுப்பு தானம் செய்ய பெற்றோர் கோரிக்கை வைத்தது நெகிழ வைத்துள்ளது
இந்திய பாதுகாப்பு துறையில் அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் முப்படைகளுக்கும் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் வரை ஒருவர் பாதுகாப்பு படையில் பணி செய்ய முடியும்.
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. இது வன்முறையானது. ரயில்கள் தீவைக்கப்பட்ட நிலையில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தால் 2 பேர் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:

ஒடிசா இளைஞர்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சோரோ பிளாக் அருகே தயானிநிதிபூர் கிராமத்தை சேர்ந்தவர் தனஞ்செய் மொகந்தி. இவருக்கு சிறுவயது முதலே ராணுவ பணியில் சேர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இதற்கான பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்றார். மருத்துவம் மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தார்.

தூக்கிட்டு தற்கொலை
இதனால் எழுத்து தேர்வு மட்டும் மீதம் இருந்தது. எப்படியாவது எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று பணியை கைப்பற்றி விடுவேன் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தால் எழுத்து தேர்வு ரத்தானது. இதனால் அவர் மிகவும் மனம் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். மேலும் இனி ராணுவத்தில் தன்னால் சேர முடியாது என அவர் சோர்வடைந்தார். இதனால் மனம் உடைந்த அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உறுப்பு தான கோரிக்கை
முன்னதாக தனஞ்செய் தனது சகோதரரிடம் ‛சாரி' கேட்டதோடு, தனது போன்பே அக்கவுண்ட் விபரங்களையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் இந்த சோகத்திலும் பெற்றோர் ராஜனிகாந்த்-சுமதி தம்பதி தனஞ்செயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர். தனஞ்செயின் கிட்னி மற்றும் கண்களை தானமாக எடுத்து கொள்ளும்படி அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

ஹரியானாவிலும் தற்கொலை
இதேபோல் ஹரியானா மாநிலம் ரோத்தாக் அருகே ஜின்ட் லாஜ்வானா கிராமத்தை சேர்ந்தவர் சச்சின் (வயது 23). இவருக்கு 4 சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் சச்சின் ரோடடோக் தேவ் காலனியில் உள்ள பிஜியில் தங்கி ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அவர் தற்போது பிஜியில் தற்கொலை செய்து கொண்டார்.

நண்பர் கூறியது என்ன?
இதுபற்றி அவரது நண்பர் பிஜேந்தர் குமார் கூறுகையில், ‛‛சச்சின் சுமார் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு நடந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் உடல்தகுதி மற்றும் மருத்துவ சோதனையில் பங்கேற்றார். அதன்பிறகு அந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்'' என்றார்.

போலீஸ் கூறுவது என்ன?
இதுபற்றி சச்சினின் உறவினர் அணில்குமார் கூறுகையில், ‛‛கொரோனா காலத்தில் வீட்டுக்கு வராமல் ராணுவத்தில் சேரும் நோக்கத்தில் படித்து வந்தார். என் தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் புதன்கிழமை சச்சினிடம் பேசி ஆறுதல் கூறினார். ஆனாலும் மனம் உடைந்து காணப்பட்ட நிலையில் தற்கொலை செய்து உள்ளார். இதுபற்றி ரோடாக் எஸ்பி மகேஷ் குமார் கூறுகையில், ‛‛குடும்பத்தினரிடம் விசாரித்தோம். வேலையில்லாததால் அவர் வருத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்கொலை தொடர்பாக கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications