ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்!
அமராவதி: நாட்டிலேயே அதிகம் தக்காளி விவசாயம் செய்யப்படும் ஆந்திராவிலேயே ஒரு கிலோ காய்கறி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மாதத் தொடக்கத்தில் 40 ரூபாய் இருந்த தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே தக்காளி அதிகம் விவசாயம் செய்யப்படுவது ஆந்திர மாநிலத்தில்தான். சுமார் 58,000 ஹெக்டர் பரப்பளவில் தக்காளி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 26.67 மெட்ரிக் டன் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திற்குட்பட்ட மதனப்பள்ளி என்ற பகுதிதான் தக்காளி விற்பனையில் மிகப் பெரிய சந்தை ஆகும்.

கனமழையால் தட்டுப்பாடு
ஆனால் இந்த ஆண்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெள்ளம் காரணமாக காய்கறிகள் ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக தென்னிந்தியாவில் ஒருகிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே தற்போது மகாராஷ்டிராவின் சோலாபூரில் இருந்தும் கர்நாடகாவின் சிக்புல்லாபூரில் இருந்து தக்காளிகள் தமிழகத்திற்கு வரவழைக்கப்படுகின்றன.

காய்கறிகள் பதுக்கல்
பொதுவாக குளிர்காலத்தில் வரத்து அதிகம் காரணமாக காய்கறிகள் விலை சரிந்து அதிகபட்சம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால் தற்போது நிலைமை வேறு. இது ஒருபுறம் இருக்க அதிக லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக தக்காளியை பதுக்கி அதிகவிலைக்கு ஆன்லைனில் விற்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் புகார்
மோடி ஆட்சியில் சமையலைறைக்குள் தக்காளி, வெங்காயம் பயன்படுத்த 144 தடை என கேலியாக விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா ஒரு கிலோ குடமிளகாய் 120 ரூபாய் வரையிலும், வெங்காயம் 50 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். டீசல் மற்றும் விவசாய உபகரணங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி விதித்துள்ள நிலையில் சாமானியர்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதை அரசாங்கம் மதிப்பீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

இனி ரேஷன் கடைகள் கிடையாது
மேலும் நவம்பர் மாத இறுதியில் ரேஷன் மூலம் பொருட்கள் வழங்குவதை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, கொரோனா வந்த பிறகு எந்த ஒரு வளர்ச்சித்திட்டத்தையும் கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications