புதுவை: ஒரே நாளில் அதிகரிக்கும் கேஸ்கள்.. மூன்றாவது அலைக்கான முன்னோட்டமா?.. அச்சத்தில் மக்கள்!
புதுச்சேரி: புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 25 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 8 பேர் மாஹேவை சேர்ந்தவர்களாவர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் பலியாகிவிட்டார்.
இந்தியாவில் கொரோனாவின் 3-ஆவது அலை அக்டோபர், நவம்பர் மாதத்தில் அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து வருகிறார்கள். இதனால் அனைவரும் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 2ஆவது அலையின் போது கேஸ்கள் அதிகரித்ததால் மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமலும் ஆக்ஸிஜன் படுக்கை இல்லாமலும் பலர் உயிரிழக்க நேரிட்டது.

ஒவ்வொரு மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை யூனியன் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தமாக 88 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதில் புதுவையில் 55 பேரும், காரைக்காலில் 25 பேரும், மாஹேவில் 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதுவரை புதுவையில் 811 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மாஹேவில் ஒருவர் பலியானதை அடுத்து கொரோனாவால் பலி எண்ணிக்கை 1839 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை புதுவையில் 1,23,565 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு குணமாகி வீடு திரும்பியுள்ளனர். அது போல் 1,26,215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் புதுவையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பானது 30 பேருக்கு மேல்தான் இருந்தது.
ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் 88 பேராக உயர்ந்துள்ளது புதுவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் மாதம் தொடங்க இன்னமும் 3 தினங்களே உள்ள நிலையில் இந்த பாதிப்பு அதிகரிப்பை கட்டுப்படுத்துவதும் மக்களுக்கு தடுப்பூசியை போடுவதும் சுகாதாரத் துறையினருக்கு சற்று சவால்கள் நிறைந்ததாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications