அடுத்து புதுச்சேரியில் திமுக ஆட்சி.. 'கொள்கைன்னு வந்துட்டா பதவியாவது..’ புள்ளி வைத்த திருச்சி சிவா!
புதுச்சேரி : தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் திமுக ஆளும் கட்சியாக வரப்போகிறது என திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி பேசியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக எம்.பி திருச்சி சிவா, கொள்கை என்று வரும்போது களத்தில் முன்னணியில் நிற்கும் கட்சியாக திமுக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பதவி நாற்காலியில் ஒட்டிக்கொண்டு இருப்பதை முக்கியமாக கருதாத இயக்கம் திமுக என திருச்சி சிவா பேசியுள்ளார்.

புதுச்சேரியில் திமுக பாசறை
புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. புதுச்சேரி மாநில மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையிலும், மாநில இளைஞர் அணி அமைப்பாளர் காந்தி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த பாசறையில், சிறப்பு விருந்தினர்களாக திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா எம்.பி, எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ஆளும் கட்சியாக வரப்போகிறது
இந்த பயிற்சிப் பாசறையில், திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா பேசுகையில், "தமிழகத்தில் தி.மு.க ஆளும் கட்சியாக உள்ளது. புதுச்சேரியில் ஆளும் கட்சியாக வரப்போகிறது. ஆனால் கொள்கை என்று வரும்போது களத்தில் முன்னணியில் நிற்கும் கட்சியாக தி.மு.க இருக்குமே தவிர, பதவி நாற்காலியில் ஒட்டிக்கொண்டு இருப்பதை முக்கியமாக கருதாது. இது களம்காணும் இயக்கம். கொள்கை வழிநிற்கும் இயக்கம்.

21 வயதில் சிறை
21 வயதில் ஓராண்டு சிறையில் இருந்தவன்தான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். சாதாரணமாக யாரும் கட்சியில் பொறுப்புக்கு வரவில்லை. கட்சியில் சேர்ந்ததும் பதவிக்கு ஆசைப்படக்கூடாது. போராட்டங்களில் பங்கேற்று அனுபவம் பெற வேண்டும். பதவி தேடி வரும். எங்களுக்கெல்லாம் பெருமிதமாக இருக்கிறது. இந்த நாட்டில் பெரிய பணக்காரர்களாக இருப்பவர்களை விட, திமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிற பெருமிதமே ரொம்பப் பெரியது.

லட்சியத்தில் தெளிவு
இளைஞர்களை வெறும் அரசியல்வாதிகளாக வைத்துக்கொள்ளாமல் லட்சியவாதிகளாக மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பயிற்சி பாசறை வகுப்பு நடத்தப்படுகிறது. திமுக கொள்கையில் உறுதி உண்டு. லட்சியம் எது என்ற தெளிவு உண்டு. வழிநடத்துவதற்கு ஆற்றல்மிக்க நல்ல தலைமை உண்டு. செயலாற்றுவதற்கு திறன்மிக்க தொண்டர்கள் உண்டு. எங்களுக்கு அரசியல்வாதிகள், பணக்காரர்கள் தேவையில்லை போராளிகள் தான் தேவை.

ராணுவக் கூடாரம்
வீரர்களும், வீராங்கனையும் நிரம்பிய மிகப்பெரிய ராணுவக்கூடாரம் தி.மு.க. தி.மு.கழகத்தின் முக்கிய கொள்கை மாநில சுயாட்சி. மாநிலங்கள் அதிகாரங்கள் இன்றி வலிமை குறைந்து செயல்படும் அவலநிலை மாறவேண்டும். தமிழ் மொழியை எந்தவித பின்னனியும் இல்லாத இன்னொரு மொழியால் வீழ்த்த முடியாது என்ற உறுதி ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். வரலாற்றை மறந்த இனத்துக்கு எதிர்காலம் கிடையாது" என உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications