காங்கிரஸ் அழிவுக்கு அவங்களேதான் காரணம்... வேறு யாரும் கிடையாது... புதுவை பாஜக தலைவர் பேச்சு!
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அதிருப்தியால் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலக தயாராக உள்ளனர் என்று புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
உச்சநீதி மன்ற தீர்ப்பில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம் என்றும் அவர் கூறினார்.
புதுவையில் ஆட்சி அமைப்பது கோருவது தொடர்பாக பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்றும் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசியல் குழப்பம்
இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெரும் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அடுத்தடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் புதுவை காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவார்கள் என்று புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலகல்
இது தொடர்பாக பாஜக அலுவலகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- வருகிற 25-ம் தேதி புதுவையில் பாஜக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அதிருப்தியால் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விலக தயாராக உள்ளனர். பல மாநிலங்களில் காங்கிரஸ் அழிவிற்கு காங்கிரஸ்தான் காரணம். நாராயணசாமியின் ஆட்சி "ஒன் மேன்" ஆட்சியாக உள்ளதால் நாராயணசாமி பதவி விலக வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் விருப்பமாக உள்ளது.

பாஜக தலைமை முடிவு செய்யும்
புதுச்சேரி வரலாற்றின் கடைசி காங்கிரஸ் முதல்வராக நாராயணசாமி இருப்பார். உச்சநீதி மன்ற தீர்ப்பில் நியமன எம்.எல்.ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதாக தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்போம். ஆட்சி அமைப்பது கோருவது தொடர்பாக பாஜக தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மக்களை முட்டாளாக்கி வருகிறார்
இதனைதொடர்ந்து சமீபத்தில் காங்கிரஸ் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:- கட்சி தலைவரை பொதுமக்கள் மத்தியில் முட்டாள் ஆக்க நினைத்தவர்தான் நாராயணசாமி. அவர் தற்போது மக்களையும் முட்டாள் ஆக்கி வருகிறார். உச்சநீதி மன்ற தீர்ப்பை முதல்வர் எதிர்க்கிறாரா? கடந்த ஆண்டுகளில் கட்சி சார்ந்தவர்களையே நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

ஆட்சியை கலைத்துள்ளது
நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தன்னுடைய கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தக்கவைத்து கொள்ள திறமையில்லாத முதல்வர் நாராயணசாமி எதிர்கட்சியினர் மீதும் துணைநிலை ஆளுநர் மீதும் குறை சொல்லி வருகிறார். பல மாநிலங்களில் 356 சட்ட விதிமுறையை பின்பற்றி காங்கிரஸ் தான் ஆட்சியை கலைத்துள்ளது என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.