சர்க்கரை என நினைத்து.. எலி மருந்தை பாலில் கலந்ததால் பரிதாபம்.. 2 குழந்தைகள் உயிரிழப்பு!
புதுச்சேரி: காரைக்காலில் சர்க்கரை என்று நினைத்து எலி மருந்தை பாலில் கலந்து சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் தாய் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த சேத்தூர் காமாட்சி நகர் பகுதியில் பாலமுருகன் (33) பிரியா (26) என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். பாலமுருகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

2 குழந்தைகள்
இவர்களுக்கு ஜெய்காந்த்(4), ஜெய்விஷ்னு(3) என இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். பிரியா தனது குழந்தைகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மாலை, பிரியா, பாலில் கவனக்குறைவாக சீனிக்கு பதிலாக எலி மருந்தை போட்டு, தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். மிச்ச பாலை அவர் குடித்தாக கூறப்படுகிறது.

மயங்கி விழுந்தனர்
ஆனால் அன்று இரவு குழந்தைகள் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர். தொடர்ந்து, பிரியாவும் மயங்கி விழுந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், 3 பேரையும் காரைக்கால் அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, போதிய வசதிகள் இல்லாத காரணத்தால், திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு 2 குழந்தைகளும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்கள்.

தாய் கவலைக்கிடம்
பிரியா கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து திருநள்ளாறு காவல் ஆய்வாளர் லெனின்பாரதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக, பிரியாவே எலி மருந்தை பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் விசாரணை
மேலும் கவனக்குறைவாக இந்த சம்பவம் நடந்ததா? என்ற பல்வேறு கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு குழந்தைகள் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications