தமிழிசை VS நாஞ்சில் சம்பத்...அறந்தாங்கியில் திமுகவினருடன் மோதல் - மருத்துவமனையில் பாஜகவினர் அட்மிட்
புதுக்கோட்டை: ஆளுநர் தமிழிசை குறித்து ஒருமையில் பேசியதாக கூறி அறந்தாங்கியில் நாஞ்சில் சம்பத் தங்கியிருக்கும் விடுதியின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினருக்கு திமுகவினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனை ஒருமையில் பேசியதாக சர்ச்சை கிளம்பியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

பல்கலைக்கழக மேடையில் நாஞ்சில் சம்பத் பற்றி பேச்சு
அப்போது மேடையில் மாணவர்கள் முன்பாக அவர் உரையாற்றியபோது இரண்டு மாநிலங்களுக்கு ஒருவர் ஆளுநராக இருப்பது எவ்வளவு கடினம் எனக்கூறினார்.
தமிழச்சி ஒருவர் அவ்வாறு இருப்பதை கண்டு ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். நாஞ்சில் சம்பத் தன்னை ஒருமையில் பேசியதை சுட்டிக்காட்டிய அவர், யார் தன்னை திட்டுவதாக இருந்தாலும்கூட மரியாதையாக திட்டுங்கள், அழகு தமிழில் திட்டுங்கள் என கேட்டுக்கொண்டார்.

நாஞ்சில் சம்பத் மீது புகார்
இதற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நாஞ்சில் சம்பத் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகாரளிக்கப்பட்டது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாஞ்சில் சம்பத், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மேடையை தன்னை விமர்சிக்க தமிழிசை பயன்படுத்தலாமா எனக்கேள்வி எழுப்பினார்.

பாரதியார் மீது வழக்கு தொடர்வார்களா?
ஒருமையில் பேசுவது தமிழ் இலக்கிய மரபு. நான் தமிழ் இலக்கியம் படித்தவன். பாரதியாரே பராசக்தியை ஒருமையில் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு தொடர்வார்களா எனக்கேள்வி எழுப்பினார். "தமிழிசை சவுந்திரராஜன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் குறித்துதான் பேசி இருக்க வேண்டும். என்னை அதில் விமர்சித்து அத்துமீறி இருக்கிறார். கருத்துரிமை மீது அறிவிக்கப்படாத போரை அவர் தொடுத்துள்ளார்.

உயிரே போனால் வருத்தம் தெரிவிக்க மாட்டேன்
தவறாக பேசினால்தானே மன்னிப்பு கேட்கலாம். நான்தான் தவறாகவே பேசவில்லையே? ஆண்டவனே விமர்சனத்துக்கு உட்பட்டவன்தான். ஆளுநர் என்ன அப்பாற்பட்டவரா? உயிரே போனாலும் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். அண்ணா விருது பெற்ற நான் அண்ணா விருதுக்கு தகுதிபெற்றவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." எனக்கூறினார்.

பாஜக - திமுக இடையே மோதல்
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிக்கு சென்ற நாஞ்சில் சம்பத் தனியார் விடுதியில் தங்கி இருப்பதாக பாஜகவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விடுதியின் எதிரில் கருப்புக்கொடி காட்டி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து அங்கு திரண்ட திமுகவினருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இரு கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்கிக் கொண்டனர்.

பாஜக பெண் நிர்வாகிக்கு காயம்
இதில் பாஜக மாவட்ட மகளிரணி செயலாளர் உமா மகேஸ்வரிக்கு கண் புருவத்தில் அடிபட்டு அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். இதனை தொடர்ந்து பாஜகவினர் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 20க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications