ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டி..டிடிவி தினகரன் உறுதி..நாளை வேட்பாளர் அறிவிக்க வாய்ப்பு!
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக அத்தொகுதியில் அமமுக போட்டியிடுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதியாக கூறினார். இந்நிலையில் தான் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது என்பதால் நாளைய அறிவிப்பு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பங்கேற்று பேசினார்.
இந்த கூட்டத்தில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சி குறித்தும், ஈரோடு இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு குறித்தும் பேசினார். மேலும் பாஜக இந்தியை திணிக்க நினைத்தால் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

பாஜகவுக்கு அதேநிலைதான்
இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது: இந்தி மொழியை திணிக்கும் எந்த கட்சியும் தமிழகத்தில் வளராது. தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முயற்சித்த காங்கிரஸால் அதன்பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை. பாஜகவுக்கு இந்தியை திணிக்க முயன்றால் அக்கட்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் நிலை தான் ஏற்படும். ஒரு வார்டு கவுன்சிலரைக் கூட பெற முடியாது.

திமுக மீது அட்டாக்
தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் பழனிசாமியின் தவறான ஆட்சியால் திமுகவுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துள்ளது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றாமல் உள்ளது. மத்திய வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் தேர்வாகும் அளவு குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய தமிழ்நாடு அரசு எந்தத் திட்டத்தையும், முன்னேற்பாடுகளையும் செயல்படுத்தவில்லை. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோதெல்லாம், தனக்கு பிடித்த அமைச்சரவை இலாகாக்களை கேட்டுப் பெற்றதைத் தவிர தமிழர்களுக்காக எதையும் திமுக செய்ததில்லை.

ஈரோடு கிழக்கில் அமமுக போட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என திமுக முயற்சி செய்து வருகிறது. ஆனால் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக அத்தொகுதியில் அமமுக போட்டியிடுகிறது. அதேபோன்று வரக்கூடிய மக்களவை தேர்தலிலும், தமிழ்நாட்டில் இனி சட்டசபை தேர்தல் எப்போது நடந்தாலும் கூட அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டு முத்திரை பதிக்கும்'' என்றார்.

நாளை வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து டிடிவி தினகரன் நாளை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் அறிவிப்பு என்பது வெளியாகலாம். முன்னதாக ஈரோடு இடைத்தேர்தலில் தானும் கூட போட்டியிட வாய்ப்புள்ளது என டிடிவி தினகரனே கூறினார். இதனால் அவரும் இடைத்தேர்தலில் களமிறங்கலாம் என கூறப்படும் நிலையில் நாளைய அமமுக வேட்பாளர் அறிவிப்பு என்பது அதிக கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications