"கெட் அவுட் ஸ்டாலின்" நாளை காலை 6 மணிக்கு பதிவிடுவேன்.. அண்ணா சாலையில் எங்கு வரணும்? அண்ணாமலை சவால்!
சேலம்: கெட் அவுட் மோடி என்று எக்ஸ் தளத்தில் திமுகவினர் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், நாளை காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று பதிவிடப் போவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அண்ணா சாலைக்கு வருமாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்றுள்ளதாக கூறிய அண்ணாமலை, நாள் மற்றும் இடத்தை குறித்து சொல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய கருத்துகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அதில், மத்திய அரசிடம் பேசி நிதி வாங்கி தர முடியவில்லை. இவர்கள் எல்லாம் சவால்விடுகிறார்கள். 2018ல் தமிழ்நாடு வந்த மோடி சுவற்றை உடைத்து கொண்டு திருட்டுத்தனமாக சென்றார்.

வீட்டில் சுவரொட்டி ஒட்டுவதாக அண்ணாமலை கூறி இருந்தார். முடிந்தால் வரச் சொல்லுங்கள்.. ஏற்கனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக கூறி இருந்தார். தைரியம் இருந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தார். அதுமட்டுமல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதிலை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் Get Out Modi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், தரமில்லாமல் பேசினால் தரமில்லாமல்தான் பதில் வரும். பிரதமருக்கு மரியாதை கொடுத்தால், அண்ணாமலை வாயில் இருந்து மரியாதையான வார்த்தைகள் வரும். நேற்று நாங்கள் தொடங்கி இருப்பது வெறும் ட்ரைய்லர்தான். தமிழ்நாட்டில் 3வது மொழி கட்டாயம் படிக்க வேண்டும் என்ற பாஜகவின் வார்த்தைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
மார்ச் 1ல் இருந்து பாஜக மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் அளிக்க போகிறோம். கல்விக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியை கொடுத்து கொண்டுள்ளார்கள். தமிழ்நாடு கல்விக்கு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் கொடுக்க வேண்டிய ஒரேயொரு நிதிதான் மத்திய அரசு வழங்கவில்லை. மற்ற திட்டத்திற்கான நிதி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னைக்கு எப்போது வருகிறேனோ, அன்றைய தினம் சொல்கிறேன்.. அண்ணா சாலையில் எங்கு வர வேண்டும் என்று திமுகக்காரர்கள் நாள், தேதி, இடத்தை குறிக்கட்டும். நான் தனியாளாக வருகிறேன்.. திமுகவின் மொத்த படையையும் வைத்து முடிந்தால் தடுத்து பாருங்கள்.. கெட் அவுட் மோடி என்ற வார்த்தையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தினார். இப்போது கெட் அவுட் மோடி ட்ரெண்ட் செய்கிறார்கள்.
நாளை காலை 6 மணிக்கு கெட் அவுட் ஸ்டாலின் என்று ட்வீட் போடுவேன். தமிழ்நாட்டில் இருந்து ஸ்டாலின் வெளியேற வேண்டும் என்று ட்வீட் போடுவேன். நாளை பாஜகவின் காலம். இரு நாட்களில் எவ்வளவு ட்வீட் போடுகிறீர்கள் என்பதை பார்த்து கொள்வோம். இதனை சவாலாகவே சொல்கிறேன். அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர்களின் பாணியிலேயே பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications