திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க ஆர்எஸ்எஸ் சதி... கே.எஸ்.அழகிரி பகிரங்க குற்றச்சாட்டு
சேலம்: இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. சிறு குறு நிறுவனங்கள் வளர்ச்சி இல்லாமல் உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
அதேபோல காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் ஜிடிபி 9.2 சதவிகிதம் வளர்ச்சியடைந்து இருந்ததாகவும், தற்போது 7 சதவிகிதத்திற்கு கீழே உள்ளதாகவும் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க ஆர்எஸ்எஸ் முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர் தோல்வி
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களில் கடும் தோல்வி, 2014 மற்றும் 2022க்கு இடையில் நடந்த 49 சட்டமன்றத் தேர்தல்களில் 39ல் தோல்வியடைந்தது ஆகியவை காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியலின் மிக மூத்த தலைவர்களை தங்களகத்தே கொண்டிருப்பது மட்டுமே கட்சியின் பெரும் பலமாக இருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இந்த மூத்த தலைவர்கள் பலர் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.

விமர்சனம்
இதன் உச்சக்கட்டமாக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது காங்கிரசுக்குள் மட்டுமல்லாது இந்திய தேசிய அரசியலில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு கட்சியை விட்டு விலகும் தலைவர்கள் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தே விலகுகின்றனர். தனது ராஜினாமா குறித்து அவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "ராகுல் காந்தி முதிர்ச்சியில்லாமல் நடந்து கொள்கிறார்" என குலாம் நபி ஆசாத் விமர்சித்திருந்தார்.

பேட்டி
இந்நிலையில் கட்சியை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு ராகுல் தலைமையில் பெரும் சுமையாக ஏறியுள்ளது. எனவே வரும் செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ளப்பட இருந்தாலும், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த நடைப்பயணம் கைகொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியளித்துள்ளார்.

நடைப்பயணம்
பேட்டியில் அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியதாவது, "வரும் 7ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைப்பயணத்தை தொடங்குகிறார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் போன்ற நடை பயணம் இது. தற்போது இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் உள்ளது. சிறு குறு நிறுவனங்கள் வளர்ச்சி இல்லாமல் உள்ளது.

பொருளாதார வளர்ச்சி
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 9.2 சதவிகிதமாக இருந்த ஜிடிபி வளர்ச்சி தற்போது 7 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. வளர்ச்சி தரும் தொழில்களில் முதலீடு செய்ய வேண்டும். மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட வேண்டும். வெறுப்பு பேச்சு அதிகமாகி விட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நிரூபிக்க வேண்டும் அதற்குதான் இந்த நடைப்பயணம்" என்று கூறினார். மேலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தொடர் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

பிரித்தாளும் சூழ்ச்சி
அதாவது, "பாஜக ஆர்.எஸ்.எஸ் ரத்தமே மனிதர்களை பிரித்து பார்ப்பதுதான். இவர்களின் கொள்கையே வன்முறைதான். உணவு என்பது ஜனநாயகம் உரிமை. அதைக் கூட பிரதமர் முடிவு செய்ய வேண்டுமா? பாஜக/ஆர்எஸ்எஸ் அத்துமீறல் அதிகமாக உள்ளது. மக்கள் அதற்கு பதில் தருவார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது. தமிழக அரசு செயல்பாடு நன்றாக உள்ளது. ஓராண்டில் நிறைய சாதனைகள் நல்ல காரியங்கள் செய்கிறார்கள். தவறுகளை சுட்டிக் காட்டினால் உடனே நடவடிக்கை எடுக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications