தங்கம்போல் தொடர் விலை உயர்வு ..சேலத்தில் தக்காளி திருடிய ‛டிப்டாப்’ இளைஞர்! ஸ்கூட்டரில் ‛எஸ்கேப்’
சேலம்: தங்கம் விலையேற்றம் போல் சமீபத்தில் தக்காளியின் விலை புதிய உச்சம் தொட்டதால் சேலம் அருகே டிப்டாப் உடையில் வந்து தக்காளி கிரேடை நைசாக திருடி செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளின் விலை புதிய உச்சம் தொட்டது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 யை தாண்டியது. அதன்பிறகும் விலையேற்றம் நிற்கவில்லை.
தங்கம் போல் தொடர்ந்து தக்காளி விலை ஏறி வந்தது. அதிகபட்சமாக ரூ.110 வரை சில இடங்களில் விற்பனையானது. இதனால் இல்லத்தரசிகள் சிரமப்பட்டனர். மேலும், சமையலில் தக்காளி பயன்பாட்டை குறைத்தனர்.

வெங்காயத்தை போல் தக்காளி
சில மாதங்களுக்கு முன்பு வெங்காயத்தின் விலை விண்ணை தொட்டதுபோன்று தக்காளியின் விலை தமிழகத்தில் உச்சமடைந்தது. தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழையால் தக்காளி வரத்து குறைந்து வந்தது தான் தக்காளி விலை ஒரு கிலோ ரூ.100யை கடந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.

சேலம் பகுதியில் திருட்டு
இந்த நிலையில் தக்காளி விலையேற்றத்தை பயன்படுத்தி சில இடங்களில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறின. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சுற்று வட்டார பகுதிகளில் தக்காளி திருட்டு அதிக அளவில் நடைபெற்றது. குறிப்பாக இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனது. இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்கூட்டரில் வந்து கைவரிசை
இந்த நிலையில் பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு மளிகை கடையில் முன்பு இருந்த தக்காளி கிரேடை யாரோ மர்மநபர் திருடி சென்றார். தக்காளி திருடும் ஆவலில் இருந்த அந்தபகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை பார்க்கவில்லை. இதனால் தக்காளி திருடும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதில்டிப்டாப் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்து கடை முன்பு நிற்கிறார். சுற்றி அனைத்து இடங்களிலும் பார்த்த அந்த நபர் ஆட்கள் வரவில்லை என்பதை அறிந்து கடை முன்பு இருந்த தக்காளி கிரேடை திருடி ஸ்கூட்டரில் வைத்து அங்கிருந்து வேகமாக புறப்பட்டு செல்கிறார்.

யார் அந்த நபர்?
இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. முதற்கட்டமாக கடை உரிமையாளர் மற்றும் தக்காளி வியாபாரிகள், தக்காளி திருடிய டிப்டாப் இளைஞரின் வீடியோவை வைத்து பல்வேறு இடங்களில் அவரை தேடி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் தற்போது தக்காளி விலை படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.