திடீருன்னு தமிழ் புத்தாண்டு தேதி விஷயத்தை திமுக அரசு கையிலெடுத்தது ஏன் தெரியுமா? அண்ணாமலை பேட்டி
சேலம்: வெள்ள பாதிப்பு விவகாரத்தில் இருந்து மக்களை திசை திருப்பவே தமிழ்புத்தாண்டு தேதியை திமுக அரசு கையில் எடுத்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும், ரேஷன் கடைகள் வாயிலாக பொங்கல் பரிசு பை கொடுக்க உள்ள நிலையில், துணி பை வடிவமைக்கப்பட்டு அதன் மாதிரியை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற, வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
கருணாநிதி ஆட்சி காலத்தில் 2008ம் ஆண்டு, தை முதல் நாள்தான் தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார். பிறகு 2011ல், ஏப்ரல் 14ல் தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் அதாவது, சித்திரை 1ம் தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று, அப்போதைய அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இப்போது பொங்கல் பரிசு பையில் தமிழ் புத்தாண்டு என பொங்கல் நாளை குறிப்பிட்டுள்ள நிலையில், புத்தாண்டு தேதியை மீண்டும் திமுக அரசு மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அண்ணாமலை பேட்டி
இந்த நிலையில், சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை திமுக அரசு முறையாக செயல்படுத்தாமல் தன்மீது உள்ள தவறை மறைக்க கடந்த அதிமுக அரசு மீது குறை சொல்லக் கூடாது.

முறைகேடுகளுக்கு ஆதாரம் தேவை
உரிய ஆதாரம் இன்றி கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது. தொடர்புடைய அரசு அதிகாரிகள் விசாரணை செய்து தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், இது அரசியல் குற்றச்சாட்டு இல்லை என்று மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலை
தமிழகத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டுகள் நடத்தப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை குறைக்க மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் விலையை கொண்டு வந்தால் நிச்சயம் ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய்க்கு கீழ் வரும்.

ஸ்டாலின் சைக்கிள் பயணம்
முதலமைச்சர் ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்யும்போது அதிகளவில் போலீஸ் பாதுகாப்பு போடுவதை தவிர்த்து விட்டு மக்கள் பணிக்கு அனுப்பினாலே, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கும். அமைச்சர்களின் பாதுகாப்பு பணிக்காக மட்டுமே தமிழக காவல்துறையை பயன்படுத்தக் கூடாது.

வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு விவகாரத்தில் தோல்வியடைந்து விட்டதால், அதிலிருந்து, மக்களை திசை திருப்புவதற்காகவே திமுக அரசு தற்போது தமிழ் புத்தாண்டு தேதியை கையில் எடுத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன், பாஜக கூட்டணி தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications