செல்லூர் ராஜு வர்றாரு..விஜயபாஸ்கர் வர்றாரு! பட்டியலை வாசித்த மருது அழகுராஜ்! பரபர அதிமுக!
சிவகங்கை : எடப்பாடி பழனிச்சாமி கார் ஓட்டுனர் கூட எங்கள் அணிக்கு வருவது நிச்சயம். விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உட்பட அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
அதிமுக அணிகள் இணைப்புக்குப் பிறகு அதிமுக முக்கிய பிரமுகராக உருவான மருது அழகுராஜ் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக போட்டியிட்டார்.
அதன் பின்னர் டாக்டர் நமது எம்ஜிஆர் பத்திரிகை சசிகலா, டிடிவி தினகரன் கைக்குச் சென்றதால், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து தொடங்கிய நமது அம்மா எனும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி நாளிதழில் 2018 முதல் 2022 வரை தலைமை செய்தி ஆசிரியராக இருந்தார்

அதிமுக
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வெடித்தபோது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணியால் நீக்கப்பட்டனர். இதையடுத்து நமது அம்மா நாளிதழின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து மருது அழகுராஜ் விலகுவதாக அறிவித்திருந்தார். ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்தார்.

மருது அழகுராஜ்
அதன்பின்னர் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக புகழேந்தி, மருது அழகுராஜ் நியமிக்கப்படுகிறார்கள் என ஓபிஎஸ் அறிவித்த நிலையில், மீண்டும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக பல இடங்களில் பேசி வருகிறார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே மருது அழகுராஜுக்கு பதவி அளிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதனை கச்சிதமாகவும் செய்து வருகிறார்.

முன்னாள் அமைச்சர்கள்
இந்நிலையில் அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மருது அழகுராஜ் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,"எடப்பாடி பழனிச்சாமி கார் ஓட்டுனர் கூட எங்கள் அணிக்கு வருவது நிச்சயம். விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உட்பட அனைத்து முன்னாள் அமைச்சர்களும் எங்கள் அணிக்கு வருவார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தின் அணி
முன்னாள் அமைச்சர்கள் எங்கள் அணிக்கு வர காரணத்தை எதிர்நோக்கி உள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தீர்ப்பு வந்துவிட்டால் அது நடந்து விடும். அதிமுகவில் தொண்டர் புரட்சி தொடங்கிவிட்டது. அது நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி அணியை வீழ்த்தும். ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் நேர்மையான கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். கூடிய விரைவில் பணத்திற்கு தலையாட்டாத நேர்மையான நிர்வாகிகளுடைய பொதுக்குழுகூட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications