ரோகித், கோலியை வெளியேற்ற முடிவு.. திட்டத்தை போட்ட கம்பீர், அகர்கர்.. ஜெய்ஷா சிக்னலுக்கு வெயிட்டிங்!
மும்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை ராஞ்சி மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான இரு அணிகளின் வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் திரும்பி இருப்பதால், ரசிகர்களிடையே அவர்களின் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கடைசியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அசத்தலாக விளையாடி இருந்தனர். இதனால் இருவரும் அதே ஃபார்மில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். இதனிடையே விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டிக்கு பின், தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
அந்த ஆலோசனையே விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் எதிர்காலத்தை பற்றியது தான். ஏனென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை இருவரும் இந்திய அணிக்காக விளையாட திட்டம் உள்ளது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இருந்து இருவரும் ஓய்வை அறிவித்துவிட்டனர்.
இதனால் அவர்களின் திட்டத்தை அறிந்து, அவர்களுக்கான பேக் அப் வீரர்களை தயார் செய்ய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது முதல் இரு போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அதனை ஒவ்வொரு தொடரிலும் இந்திய அணியால் ஏற்க முடியாது. இரு சீனியர் வீரர்களின் ஆட்டத்திற்கும் போதுமான கேம் டைம் இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.
இந்த ஒருநாள் தொடருக்கு பின் ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. அதன்பின் ஜூலையில் தான் இருவரையும் இந்திய அணியில் பார்க்க முடியும். இதனால் இடைப்பட்ட காலத்தில் விஜய் ஹசாரே, இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வைக்கலாமா என்று பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.
ஒருவேளை 2027 உலகக்கோப்பை தொடர் வரை இரு வீரர்களும் விளையாட விரும்பினால், பிசிசிஐ என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் இரு வீரர்களையும் இந்திய அணியால் பிளேயிங் லெவனில் செட்டில் செய்ய முடியுமா என்பதும் சந்தேகம்தான். இதனால் கம்பீர் மற்றும் அகர்கர் இருவருமே ஜெய்ஷாவின் பேச்சை கேட்டு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications