For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடி மேல் அடி வாங்குவோர் பட்டியலில் இணைந்த தமிழர்கள்...!

Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திரப் படுகொலைகள் ஈர மனங்களைப் புண்படுத்தியுள்ளன. ஆந்திராவிடமிருந்து இப்படி ஒரு மோசமான செயலை தமிழகம் எதிர்பார்த்ததில்லை. காரணம், கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலமுறை பல சிரமங்களைச் சிக்கல்களைச் சந்தித்திருந்தாலும் கூட ஆந்திராவும், தமிழகமும் நட்பு பாராட்டியபடிதான் இருந்தன. அப்படிப்பட்ட ஆந்திரா, இன்று 20 தமிழர்களை சுட்டுப் பொசுக்கி ரத்த வெறியாட்டம் நடத்தியிருப்பது தமிழக மக்களை புரட்டிப் போட்டுள்ளது.

இந்த நேரத்தில் ஒரு விஷயம் மனதில் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை, தவிர்க்க முடியவில்லை.

The killing fields of Andhra Pradesh

இந்தியாவைப் பொறுத்தவரை சமூகத்தின் சில பிரிவினர் தொடர்ந்து அடி வாங்கியபடியே உள்ளனர். இதை யாருமே மறுக்க மாட்டார்கள். ஏழைகள், தலித் மக்கள், ஆதிவாசிகள். இது இந்தியாவின் வட கோடி முதல் தென் கோடி வரை நிரூபணமாகியபடியே உள்ளது. இந்தப் பிரிவினர் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான அடக்குமுறைகளைச் சந்தித்தபடியேதான் உள்ளனர்.

தலித் மக்கள் சந்திக்காத அடக்குமுறையே இல்லை. ஆதிவாசிகளின் நிலையைச் சொல்ல வேண்டாம். முஸ்லீம்கள் சந்திக்கும் சவால்களை புத்தகம் புத்தகமாக எழுதலாம். இந்த வரிசையில் தற்போது தமிழர்களையும் சேர்த்து விட்டார்கள் போலத் தெரிகிறது.

ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மூன்று மாநிலங்களுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டு இந்த தமிழ்நாடு படும் வேதனை, சோதனை எழுத்தில் அடக்க முடியாதது. இந்த பிரச்சினைகளுக்கு இதுவரை யாருமே தமிழகத்திற்குக் கை கொடுத்ததில்லை. சட்டம் மட்டுமே தமிழகத்திற்கு ஆறுதலாக இருந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுத்தான் கரையேற வேண்டியுள்ளது தமிழகம்.

அன்று கர்நாடகத்தில் மிகப் பெரிய இனக் கலவரம் வெடித்தது. தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு தமிழகத்திற்கு ஓடி வந்த அவலம் நடந்தேறியது. ஒரு நாட்டுக்குள்ளேயே இரு மாநில மக்களுக்கிடையே வெடித்த அந்தக் கலவரம், ஒரு இந்தியாவின் ஒரு சகோதரனை இன்னொரு சகோதரன் அடித்து வெளியேற்றிய அவலம் நடந்தேறியதை நாடு அமைதியாக வேடிக்கைதான் பார்த்ததே ஒழிய, அதைத் தடுக்க முன்வரவில்லை. கண்டிக்கவில்லை.

அதேபோலத்தான் கேரளாவில் தமிழர்கள் சந்தித்த அவலங்கள், அவமானங்கள் எக்கச்சக்கம். அப்போதும் கேரளாவை யாரும் கண்டிக்கவில்லை, கண்டனம் தெரிவிக்கவில்லை.

இன்று ஆந்திராவில் 20 தமிழர்களைக் கொன்று குவித்து விட்டிருக்கிறார்கள். இப்போதும் டெல்லி அமைதியாக இருக்கிறது. டெல்லி ஊடகங்கள் அமைதி காக்கின்றன. வாய் வலிக்க கத்தும் வட இந்திய டிவிக்கள் அமைதியாக இருக்கின்ரன. ஒட்டுமொத்த இந்தியாவும் அமைதியாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் சிலர் போராட்டம் நடத்தியபடி உள்ளனர். கிட்டத்தட்ட அந்த 20 பேரின் குடும்பங்களும் அனாதைகள் போன்ற உணர்வில் உள்ளனர் என்பதே உண்மை.. !

இந்தியாவில் காவல்துறையின் அடக்குமுறை என்பது மிகப் பெரிய விவாதத்துக்குரியது. ஒரு தவறை ஒடுக்க, அந்தத் தவறில் ஈடுபடும் சிலரை கொடூரமாக தண்டிப்பது என்பது காவல்துறையின் செயலாக உள்ளது. இந்த மாநிலத்தில்தான் என்றில்லை.. எல்லா மாநிலத்திலுமே அது இருக்கத்தான் செய்கிறது. சென்னையில், வட மாநிலக் கொள்ளையர்கள் 5 பேரை வீட்டுக்குள் வைத்து சென்னை போலீஸார் என்கவுண்டர் செய்தபோது ஈர உள்ளங்கள் துடித்தன.

அவர்கள் கொள்ளையர்களோ, கொலைகாரர்களோ.. அது வேறு.. ஆனால் மனிதர்கள். ஒரு மனித உயிரைப் பறிக்க இன்னொரு மனித உயிருக்கு யார் அதிகாரம் கொடுத்தது.. !

ஆந்திர மாநில காவல்துறையினருக்கு எப்போதுமே ஒரு ''நல்ல'' பெயர் உண்டு. இந்தியாவிலேயே மிக மோசமான காவல்துறையினர் என்ற பெயர் அவர்களுக்கு உண்டு. அவர்கள் நடத்திய படுகொலைகள், படு பாதகச் செயல்கள் எக்கச்சக்கம். தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்கள். நக்சலைட் வேட்டை என்ற பெயரில் அப்பாவிகளை அவர்கள் கொன்று குவித்தது, சித்திரவதை செய்தது எக்கச்சக்கம்.

ஆனால் நம் முன் எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வி என்னவென்றால் ராஜபக்சே போன்ற மிகப் பெரிய இனப்படுகொலையார்களுக்கு ராஜ வரவேற்பு கொடுத்து கெளரவித்த இந்த ஆந்திர அரசு, வயிற்றுப் பிழைப்புக்காக, 1000,5000 பணத்துக்காக மரம் வெட்ட வந்த தொழிலாளர்களை எப்படி இப்படிக் கொலை செய்யத் துணிந்தது என்பதுதான். உண்மையி்ல் இந்த செம்மரக் கடத்தலை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் அதில் ஈடுபட்டுள்ள அத்தனை முதலாளிகளையும் தெருவில் இழுத்து வந்து கட்டி வைத்து உதைத்திருக்கலாம்... முச்சந்தியில் நிறுத்தி அவமானப்படுத்தியிருக்கலாம்... ஆயுள் தண்டனை கொடுத்து சட்டப் பூர்வமாக தண்டித்திருக்கலாம்.. ஆனால் இதுவரை ஒரு முதலாளி கூட கைது செய்யப்படவில்லை. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

செம்மரக் கடத்தல்காரர்கள் என்ற பெயரில் ஆந்திர மாநில சிறைகளில் 4000க்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைபட்டுள்ளனர் என்ற ஒரு அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் சாதாரண மரம் வெட்டிகள். மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இவர்களை மோசடியாக அழைத்து வந்து செம்மரம் வெட்ட வைத்து சிக்கலில் மாட்டி விட்டு விடுகிறார்கள் ஆந்திர முதலாளிகள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இன்று இறந்தவர்கள் 20 சாதாரண தொழிலாளர்கள்.. அவர்களுக்கு சிம்பிளாக கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தி அனைவரும் அமைதியாக அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இதுவே இந்த 20 பேரும் வேறு மொழிக்காரர்களாக இருந்திருந்தால், வேறு மாநிலத்தவராக இருந்திருந்தால் இன்று இந்தியாவே அல்லோகல்லப்பட்டிருக்கும்.

எது எப்படியோ, சந்திரபாபு நாயுடு அரசு செய்த இந்த அக்கிரமக் காரியத்தை அவரது குருவும், தமிழர்கள் மீது அன்பு செலுத்தியவருமான என்.டி.ஆரின் ஆவி கூட நிச்சயம் மனிக்காது.

English summary
The police brutality in the state of Andhra Pradhesh has shown the ugly face of the police once again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X