For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பல்லவ மல்லை... டிசம்பரில் ஒரு 'பேச்சுக் கச்சேரி'!

By Shankar
Google Oneindia Tamil News

- ஜெ. ராம்கி

சென்னையின் டிசம்பர் சீஸன் பற்றிய அறிமுகம் தேவையில்லை. கர்நாடக இசை ரசிகர்களுக்கு இதுவொரு வருடாந்திர திருவிழா. நவம்பர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதம் முழுவதும் சபாக்களில் கூட்டம் நிரம்பி வழியும். கச்சேரியில் கலந்து கொள்வதற்காக வெளிநாடுகளிலிருந்து பலர் பறந்து வருவதும் உண்டு. டிசம்பர் சீஸன் என்றாலே அது கர்நாடக இசை கச்சேரி மட்டும்தான் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தது.

A Talk Concert on Mamallapuram

கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறது. கர்நாடக இசை மட்டுமல்ல, தமிழ் இசை, புத்தகத் திருவிழா, உணவுத் திருவிழா என டிசம்பர் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நடைபெற ஆரம்பித்துள்ளன.

கலாச்சார திருவிழாவாக நடைபெறும் நிகழ்வில், தமிழ் பாராம்பரியத்தின் பல்வேறு அம்சங்களையும் முன்னிறுத்த வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.

கச்சேரி என்றாலே அது ஏன் இசைக் கச்சேரியாக மட்டும் இருக்கவேண்டும்? பாட்டும், இசையும் மட்டும்தானா கச்சேரி? தொடர் சொற்பொழிவுகள் கூட, கச்சேரிகள்தான். ஒரு மையக் கருத்தை முன்வைத்து தொடர் பேச்சுகள் மேற்கொள்வதுன் மூலம், பல்வேறு தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவாதங்களை ஆரம்பிக்க முடியும் என்று தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை நினைத்தது. அதன் காரணமாக ஐந்துண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதுதான் பேச்சுக் கச்சேரி.

கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வரலாற்று அறிஞர்கள், ஓவியக் கலைவர்கள், தொழில் நுட்பாளர்களை அழைத்து பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் சங்க இலக்கியங்களிலிருந்து தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2011 டிசம்பரில் முதல் பேச்சுக் கச்சேரி ஆரம்பமானது. குறுந்தொகையின் சிறப்புகள் பற்றிய அறிமுகத்தை தந்து பேச்சுக் கச்சேரியை தொடங்கி வைத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்.

A Talk Concert on Mamallapuram

அர்ச்சுனன் தபசு என்னும் புகழ்பெற்ற மாமல்லபுரத்தின் புடைப்புச் சிற்பம் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு புதிய பார்வையை முன்வைத்து இரண்டு மணி நேரம் பேசினார் முனைவர் பாலுசாமி. அவரைத் தொடர்ந்து ஸ்தபதி உமாபதி ஆசார்யா, உலோகத்தில் திருமேனி செய்யும் நுட்பம் குறித்து விரிவாக பேசியவர், தான் உருவாக்கிய கஜசம்ஹாரமூர்த்தி சிலை உருவாக்கம் குறித்தும், அதன் சிறப்புகளை பேசினார்.

கங்கை கொண்ட சோழபுரத்தின் சிலைகள் குறித்தும், கோயிலின் கட்டமைப்பு, அதன் பின்னணி, சோழர்களின் வரலாறு பற்றிய புதிய பார்வையோடு முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் ஒரு உரையை நிகழ்த்தினார்.

முதலாண்டு பேச்சுக் கச்சேரியின் நிறைவு நாளில், ஸ்வர்ணமால்யா, தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி நடத்திய நாயக்க மன்னரான ரகுநாத நாயக்கரின் வாழ்க்கையை விவரிக்கும் ரகுநாதப்யுதயமு என்னும் தெலுங்கு நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினார்.

இலக்கியம், வரலாறு, நுட்பம், நாடகம் என்று பல்துறைகளை கொண்ட கச்சேரியாக முதலாண்டு பேச்சுக் கச்சேரி நிறைவு பெற்றது. இரண்டாவது ஆண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் கவனம் செலுத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. அதன் படி, டிசம்பர் 2012ல் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்திய ஓவியங்களின் நிலை பற்றிய பேச்சுக் கச்சேரி நடத்துவது என்று முடிவெடுக்கப்ப்ட்டது.

இந்தியாவில் ஓவியக் கலை எப்படிப் பரிணமித்தது, வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து பின் நவீனத்துவ காலம் வரை எப்படிப் பயணித்தது என்பது குறித்த தன்னுடைய பார்வையை பகிர்ந்து கொண்டார் ஓவியர் சந்துரு. கற்கால ஓவியங்கள் முதல் பிற்காலத்தில் தஞ்சை பெரியகோயிலில் கிடைத்த ஓவியங்கள் வரை பல்வேறு ஓவியங்களின் சிறப்புகள் அலசப்பட்டன.

பனமலை மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ள பல்லவர் கால ஓவியங்களின் சிறப்புகளையும், அவை எப்படி அஜந்தா ஓவியங்களின் தொடர்ச்சியாக கருத வேண்டியிருக்கிறது என்பதையும், சித்தன்னவாசலில் காணப்படும் ஓவியங்களுக்கு முன்னோடி எதுவென்பதையும் தன்னுடைய பேச்சில் விவரித்தார் பேராசியர் சிவராமகிருஷ்ணன்.

A Talk Concert on Mamallapuram

சித்திர சூத்திரத்தின்படி, ஒருவர் சிற்பம் செதுக்கக் கற்றுக்கொள்வதற்கு முன், ஓவியம் வரையக் கற்றுக்கொள்ள வேண்டும். ஓவியம் வரைவதற்குமுன், நாட்டியம் கற்றுக் கொண்டிருக்கவேண்டும். நாட்டியம் கற்றுக்கொள்ள ஒருவருக்கு வாத்திய இசை தெரிந்திருக்க வேண்டும். அதற்கோ வாய்ப்பாட்டு தெரிந்திருக்க வேண்டும் என்று ஓவியக் கலையின் சிறப்பை விவரித்து, ஆயக் கலைகளில் ஓவியக் கலை ஒரு உச்சம் என்பதை பேச்சில் தொட்டுக் காட்டினார்கள்.

இரண்டாமாண்டு பேச்சுக் கச்சேரி, இந்திய ஓவியங்கள் குறித்த ஆழமான பார்வையை முன்வைத்தது. அடுத்தடுத்து வரும் கச்சேரிகளில் இலக்கியம், ஓவியம் தவிர ஏதாவது ஒரு புராதன இடத்தை எடுத்துக்கொண்டு அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும், சிறப்பையும் விளக்குவதன் மூலம் இன்னும் நிறைய பேரை கவரமுடியும் என்பது தெரிய வந்தது, மாமல்லபுரம், ஸ்ரீரங்கம், மதுரை, கழுகுமலை போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பற்றி அடுத்தடுத்த பேச்சுக் கச்சேரிகளில் பேச முடிவு செய்யப்பட்டது.

2013 டிசம்பரில் மூன்றாவது பேச்சுக் கச்சேரி நிகழ்ந்தபோது, ஸ்ரீரங்கம் குறித்த உரைகள்
இடம்பெற்றன. ஸ்ரீரங்கம் கோயிலின் வரலாறு, பாண்டியர்கள் காலம் முதல் இஸ்லாமியர் ஆட்சி வரையிலான பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கிய 500 ஆண்டுகால வரலாற்றை முனைவர் சித்ரா மாதவன் பேசினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோயிலின் கட்டிட அமைப்பு, சிறப்புகளை கட்டிட பொறியாளர்கள் தங்களது பார்வையாக முன்வைத்தார்கள். பின்னர், ஸ்ரீராமானுஜருக்கும் ஸ்ரீரங்கத்திற்கும் உள்ள சம்பந்தம், ஸ்ரீராமானுஜர் காலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் திருவிழாக்கள், ஸ்ரீரங்கம் கோயிலுக்கே உரிய நடைமுறைகள் குறித்து பேசப்பட்டது.

ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் மூலமாக கிடைக்கும் செய்தியை தமிழ்நாடு தொல்லியல் துறையைச் சேர்ந்த ஸ்ரீதரன் பகிர்ந்து கொண்டார். இறுதி நிகழ்ச்சியாக ஸ்ரீரங்கம் அரையர் சேவையை தழுவிய நாட்டிய நாடகம் ஸ்வர்ணமால்யாவால் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

பல்லவ மல்லை

இந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுக் கச்சேரியில் பல்லவ மல்லை என்னும் மாமல்லபுரத்தின் சிறப்புகளை முன்வைக்கும் பேச்சுகள் இடம்பெற்றன. மாமல்லபுரத்தில் காணக் கிடைக்கும் புடைப்புச் சிற்பங்கள், கடற்கரை கோயில்கள், பஞ்ச பாண்டவர் கோயில்கள் பற்றி முனைவர் சித்ரா மாதவன் பேசினார். அதைத் தொடர்ந்து மாமல்லபுர சிற்பங்கள் குறித்த ஒப்பீட்டை பேராசிரியர் சிவராகிருஷ்ணன் எடுத்துக்கொண்டார். அர்ச்சுனன் தபசு புடைப்புச் சிற்பத்தில் உள்ள சிற்பங்களையும் அவற்றின் அழகு, சிறப்பு, அவை வெளிப்படுத்தும் உணர்வுகளையும் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

மாமல்லபுரத்தின் கிடைத்த சமஸ்கிருதக் கல்வெட்டுகள் வழியாக, மாமல்லபுரத்தின் வரலாற்றை முன்னிறுத்தினார் முனைவர் சங்கர நாரயணன். அவரைத் தொடர்ந்து வந்த ரங்கரத்தினம் கோபு, 2000 ஆண்டு கால மாமல்லபுரத்தின் வரலாற்றையும், வெளிநாட்டு ஆய்வாளர்களின் குறிப்புகள், அவர்கள் மாமல்லபுரத்தில் தங்கியிருந்து மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியும் சுவராசியமாக பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக, மகேந்திர பல்லவனின் பகடியான மத்தவிலாசத்தை தழுவி எழுதப்பட்ட நாட்டிய நாடகத்தை நடிகை ஸ்வர்ணமால்யா அரங்கேற்றினார்.

மாமல்லபுரத்தில் காணப்படும் பல்வேறு சக்தி வடிவங்களை குறிப்பிட்டு ஒரு உரையை நிகழ்த்தினார் முனைவர் பாலுசாமி. மகிஷனை வதம் செய்யும் போர்க்களக் காட்சியின் சிறப்புகளை குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தார்.

மாமல்லபுரத்தின் முக்கியமான சிற்பத் தொகுதிகளான வராகம், திரிவிக்ரம மூர்த்தி,
அனந்தசயனப் பெருமாள் குகைக் கோயில் சிறப்புகளை தன்னுடைய பேச்சில் விவரித்தார் பேராசிரியர் சுவாமிநாதன். மாமல்லை மீதான ஆழ்வார்களின் பாசுரங்கள் பற்றி மதுசூதன் பேசியதைத் தொடர்ந்து, மாமல்லையில் கிடைத்த ராஜராஜன் காலத்திய தமிழ்க் கல்வெட்டுகள் குறித்து ஸ்ரீதரனும் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதி நிகழ்வாக, முனைவர் நாகசாமியின் உரை இடம்பெற்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் மாமல்லபுரம் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் குறிப்பிட்டு பேச்சை ஆரம்பித்தவர், முழுநிலவு தினம், அடைமழை பெய்யும் தினம் என வெவ்வேறு தினங்களில் பார்த்து ரசிக்கவேண்டிய இடம், மாமல்லபுரம் என்பதை குறிப்பிட்டார், 1800 தொடங்கி, மாமல்லபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளையும் அதன் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக் குறிப்பிட்டவர், மாமல்லபுரத்தில் இனியும் நிகழத்த வேண்டிய ஆய்வுகள் பல மிச்சமிருக்கின்றன. அதுவரை மாமல்லபுரத்தின் கலாச்சாரக் சுவடுகளை கட்டி காப்பாற்ற வேண்டிய தேவையிருப்பதாக கூறி உரையை நிறைவு செய்தார்.

இவ்வாண்டு நடைபெற்ற பேச்சுக் கச்சேரியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள். கச்சேரியின் முடிவில் மாமல்லபுரத்தின் புராதானத்தை பாதுகாக்க சில ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இதுதொடர்பான மாமல்லை கலாச்சார குழு ஒன்று உருவாக்கப்பட்டு அடுத்த கட்ட பணிகளை ஆரம்பிக்கும் என்று தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டது.

English summary
J Ramki's write up on the Talk Concert about Mamallapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X