For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டிய பேரொளி பத்மினி.. தமிழ்மண்ணில் தன்னையே கரைத்துகொண்ட நடிகை!

நாட்டிய பேரொளி பத்மினி பிறந்த நாள் இன்று.

Google Oneindia Tamil News

சென்னை: கலையே குடும்பம், கலையே வாழ்க்கை, கலையே மூச்சு, கலையே சகலமும் என்று வாழ்ந்த நாட்டிய பேரொளி பத்மினி பிறந்த நாள் இன்று.

சிறந்த நடனமங்கையாக இருந்தவரை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகம் செய்தது கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். தாய்மொழி மலையாளம் என்றாலும் இன்றைய தமிழர்களால் கூட பேச முடியாத அளவிற்கு நீண்டநெடிய வசனங்களை மனப்பாடம் செய்து - ஏற்ற இறக்கத்துடன் - பிசிறில்லாமல் - உச்சரிப்பு மாறாமல் - உணர்ச்சிப் பெருக்குடன் பேசிய அவரது அற்புதமான ஆற்றல் சாதாரணமானதல்ல.

இன்றைய இரண்டாம் தர, மூன்றாம்தர நடிகைகள் போல கதாநாயகிகள் என்று சொல்லிக் கொண்டு ஆபாச படமாகவும், அரை நிர்வாண ஓடமாகவும் - பின்னணி குரலில் ஒழுங்காக வாயசைக்கக்கூட முடியாமல் நடனம் என்ற பெயரில் வலிப்பு வந்தவர்போல் பேயாட்டம் போட்ட நடிகை அல்ல பத்மினி.
பரதநாட்டியம், கதகளி, குச்சிப்புடி என்று இந்தியாவின் பெரும்பான்மையான நடன உத்திகளை நுட்பமாக பயின்றவர். பரதம் உள்ளிட்ட அனைத்து நடனங்களையும் கற்றுத்தேர்ந்து கதாநாயகியாகவும் நடித்த நடிகைகள் இரண்டே பேர்கள்தான். ஒருவர் பத்மினி, இன்னொருவர் வைஜெயந்திமாலா.

சபாஷ் சரியான போட்டி!

சபாஷ் சரியான போட்டி!

"வஞ்சிக்கோட்டை வாலிபன்" படத்தில் இவர்கள் இணைந்து அரங்கேற்றிய போட்டி நடனம் வெள்ளித்திரையில் வரலாறாகிவிட்டது. பாடலின் நடுவே வரும் "சபாஷ்... சரியான போட்டி" என்ற அந்த வசனம்கூட இன்றைய இளையதலைமுறைகளால் பெரிதும் ரசிக்கப்படுபவை. இனி அது போன்ற நடனத்தை எக்காலத்திலும் நாம் பார்க்க முடியாது. இந்திய படங்களிலேயே மிகச்சிறந்த போட்டி நடனம் எது என்றால் இந்த பாடலை துணிச்சலோடும் கர்வத்தோடும் பெருமையோடும், சொல்லலாம். அமரதீபம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி, சித்தி, புனர்ஜென்மம், தில்லானா மோகனாம்பாள் போன்ற பல படங்கள் பத்மினியின் பண்பட்ட நடிப்பில் காவியங்களாயின.

தபால்தலை வெளியீடு

தபால்தலை வெளியீடு

அதனால்தான் அவருக்கு தபால் தலையை வெளியிட்டு சோவியத் யூனியன் பல்லாண்டுகளுக்கு முன்பே பெருமைப்படுத்தியது. ஒரு கலைஞர் - அதிலும் குறிப்பாக ஒரு பெண் கலைஞர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் பத்மினி. தான்தோன்றித்தனமாக உளறிக் கொட்டாமல் - காட்டுக் கூச்சல் போட்டு அமர்க்களம் செய்யாமல் - அரை வேக்காட்டுத்தனமாக அலட்டிக் கொள்ளாமல் தன்னடக்கம் கொண்ட நடிகையாக அவர் வாழ்ந்தார். அரசியல் ரீதியாக, ஒரே சமயத்தில் கருணாநிதியையும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் மதித்து போற்றிய அவரது பெருந்தன்மையை இன்றைய திரைப்பட நடிகைகள் கற்றுக் கொள்வது அவசியம்.

பக்குவப்பட்ட நடிகை

பக்குவப்பட்ட நடிகை

விரும்பி நேசித்த இளைஞனை திருமணம் செய்து கொள்ள முடியாமல். அவனது தந்தையையே மணந்து வாழ வேண்டிய அவலத்திற்கு நடுவில் - காதலனே மகனாக திரும்பி வந்த பிறகு - ஒரு பெண்ணின் இதயம் எந்த அளவிற்கு வேதனையால் வதைபடும் என்பதை "எதிர்பாராதது" படத்தில் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கும் பதமினியின் நடிப்பு அபாரமானது.கணவனின் சந்தேகத்திற்கு இரையாகி தன் மீதான பழியை துடைக்க போராடும் ஒரு பெண்ணின் மன உணர்வு எவ்வாறு இருக்கும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது "தெய்வப்பிறவி".நாட்டியத்தையும் நடிப்பையும் சரிபாதியாக கலந்து ஒரு சிறந்த பொழுது போக்கு படைப்பின் வெற்றிக்கு முக்கிய காரணியாக திகழ்ந்த திரைப்படம் தில்லானா மோகனாம்பாள்.. பல படங்களில் குணச்சித்திர நடிப்பை பதித்திருந்தாலும், தன்னால் கதாநாயகியாக மட்டுமல்ல பாட்டியாகவும் நடித்து தான் ஒரு பக்குவப்பட்ட நடிகை என்பதை "பூவே பூச்சூடவா" படத்தில் நிரூபித்தார்.

எந்த நிலையிலும் மரணமில்லை

எந்த நிலையிலும் மரணமில்லை

கோடி கோடியாய் சம்பாதித்தாலும் - சொர்க்க பூமி என்று போற்றப்படும் அமெரிக்காவிலேயே வாழும் வாய்ப்பு கிடைத்தாலும் - தாய் நாட்டில்தான் வாழ்வேன் - தமிழ்நாட்டில்தான் சாவேன் என்று கூறி அதேபோல தமிழ் மண்ணில் தன்னை கரைத்து கொண்ட தன்னிகரற்ற தேசபக்தர்தான் நடிகை பத்மினி. அவர் மறைந்தபோது நடிகர் கமலஹாசன் தனது இரங்கல் செய்தியில், "தொலைக்காட்சிகள் ஒரு வரப்பிரசாதம். பத்மினி அம்மா இறந்து போனார்கள் என்கிற உணர்வு கூட இல்லாமல் அவர் நடித்த படங்களையும், ஆடிய நடனங்களையும் நாம் பார்.த்து கொண்டு இருக்கலாம்" என்றார்.மக்கள் மனதில் ஆழப்பதிந்து போன யாராக இருந்தாலும் அவர்களுக்கு கவியரசு கண்ணதாசன் பாடியபடி "எந்த நிலையிலும் மரணமில்லை"தான். இது நாடு போற்றும் நாட்டிய பேரொளி பத்மினிக்கும் பொருந்தும்.

English summary
At the age of 17, Actress Padmini, Sivaji Ganesan, MGR, Gemini Ganesan are all leading actors in the film industry. Padmini has acted more than 250 films. Sivaji has acted in only 59 films.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X