For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்னும் எத்தனை நாட்களுக்கு தாக்குப் பிடிக்கும் தமிழகத்தின் அஇஅதிமுக அரசு?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்ததன் 50 வது ஆண்டுதான் 2017. ஆம். 1967 ல் திமுக விடம் ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி இந்த அரை நூற்றாண்டு காலத்தில் ஒரு முறை கூட ஆட்சிக் கட்டிலின் அருகில் கூட வரவில்லை. இந்த ஐம்பாதாண்டுகளில் இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி மாநில அரசை ஆளாமல் இருக்கவில்லை. இந்த பொன் விழாவை காங்கிரஸ் அல்லாத கட்சிகளும், தமிழ் தேசியத்தை தழுவிக் கொண்டிருக்கும் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் தமிழகம் மிகப் பெரியதோர் அரசியல் சிக்கலில், குழப்படியில் மாட்டித் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஓடி விட்டன. ஆனால் ஒரு ஸ்திரமற்ற, பலவீனமான அரசுதான் அஇஅதிமுக அரசு என்ற உண்மை தற்பொழுதுதான் பெரும்பாலானோருக்கும் ஏற்படத் துவங்கியிருக்கிறது. ஜெ மறைந்த சில நாட்களில் சசிகலா வை கட்சியின் பொதுச் செயலாளராக அஇஅதிமுக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது. எம்ஜிஆர் மறைந்த போது அஇஅதிமுக இரண்டாக பிளவுபட்டது. அந்த துர்சம்பவம் இப்போது நடக்கவில்லை என்று பெருமையாக வியாக்கியானம் பேசியவர்கள் இன்று ஏமாற்றத்தை தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.

ADMK Govt counting its days!

ஓ பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக வைத்துக் கொண்டே தமிழகத்தை இன்னும் மீதமிருக்கும் நான்காண்டு ஆட்சிக் காலத்தை ஓட்டி விடலாம் என்றே பலரும் கனவு கண்டு கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டார் ஓபிஎஸ். அவர் திடீரென்று ஒரு நாள் இரவு ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்து 30 நிமிடங்கள் தியானம் செய்ததன் விளைவு அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு மாநில அரசியலை இட்டுச் சென்றது. பெரும்பான்மை இல்லாததால் எடப்பாடி பழனிசாமியிடம் முதலமைச்சர் பதவியை காவு கொடுத்தார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி பதவியேற்பதற்கு சில நாட்கள் முன்னர்தான் சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு நான்காண்டு சிறை தண்டனை வழங்கி அவர்கள பெங்களுர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அனுப்பி வைத்தது. அதன் பின்னர் தான் அஇஅதிமுக வில் 'ஆட்டம்' துவங்கியது என்று நாம் உறுதியாக சொல்லலாம். 122 எம்எல்ஏ க்கள் ஆதரவில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தில் எடப்பாடி வெற்றி பெற்றார். ஓபிஎஸ்ஸூக்கு வெறும் 12 எம்எல்ஏ க்கள்தான் ஆதரவு கொடுத்தனர். இனிமேல் எல்லாம் சுமுகமாக நடைபெறும் அஇஅதிமுக மீதமிருக்கும் நான்காண்டுக்கும் மேற்பட்ட ஆட்சிக் காலத்தை கழித்து விடும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

ஆனால் அதிலும் பெருஞ் சிக்கல் தோன்றியது. தான் சிறைக்குப் போவதற்கு முன் டிடிவி தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளாராக ஆக்கி விட்டுப் போனார் சசிகலா. இனிமேலாவது ஸ்திரத்தன்மை அரசுக்கு ஏற்பட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் ஒரு தரப்பில் எழுந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20 அமைச்சர்கள் எடப்பாடி வீட்டில் கூடி சசிகலா குடும்பத்திற்கு கட்சியில் இனி மேல் இடமில்லை. பிரிந்து கிடக்கும் இரண்டு பிரிவுகளும் இனிமேல் ஒன்று சேரப் போகிறோம். அப்போது தான் முடக்கப் பட்ட இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைக்கும் என்றெல்லாம் கிட்டத்தட்ட எல்லா அமைச்சர்களும் பேசத் துவங்கினர். இணைப்புக்கான பேச்சு வார்த்தைக்காக இரு தரப்பும் குழுக்களையும் அமைத்தனர்.

பேச்சுவார்த்தையின் முதல் கட்டத்தில் சுமுகமாக இருந்தார் ஓபிஎஸ். ஆனால் அடுத்த நாளே தானே முதலமைச்சராகவும், கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருக்க வேண்டும் என்றும், சசிகலா தரப்பிலிருந்து எவரும் கட்சியில் இருக்க கூடாதென்றும் நிபந்தனை விதித்ததை அடுத்து தற்பொழுது இணைப்புக்கான முயற்சிகள் முட்டுக்கட்டையாகிப் போய் கிடக்கின்றன.

எடப்பாடி தரப்பு இதற்கு காரணம் பாஜக வின் நிர்ப்பந்தம்தான் என்று அழுத்தமாக கூறுகிறது. "இன்று ஓபிஎஸ் பாஜக வின், குறிப்பாக மோடியின் கட்டளைகளுக்கு கீழ் படியும் ஒரு மனிதராகத்தான் இருக்கிறார். அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் ஒன்று சேருவதை பாஜக தலைமை, குறிப்பாக மோடி விரும்பவில்லை. காரணம் 2019 மக்களவைத் தேர்தலின் போது எந்த மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க பிராந்திய கட்சிகள், தலைவர்கள் இருக்க கூடாதென்றே பாஜக தலைமை விரும்புகிறது. 'மோடியா இல்லை இந்த லேடியா?' என்று 2014 மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா விட்ட சவால் மோடியால் ஜீரணிக்க முடியாத சவால். ஒருபோதும் ஒன்றுபட்ட அஇஅதிமுக உருவாவதை, கட்சி பலம் பெறுவதை, இரட்டை இலை சின்னம் அஇஅதிமுக வுக்கு கிடைப்பதை பாஜக அனுமதிக்கப் போவதில்லை. அதனால்தான் எடப்பாடி தரப்பால் ஏற்றுக் கொள்ள முடியாத நிபந்தனைகள மேலும் மேலும் ஓபிஎஸ் ஏற்றிக் கொண்டே போவது,'' என்கிறார் எம்ஜிஆர் காலத்தில் செல்வாக்கு கொண்ட அமைச்சராக இருந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.

இன்று எந்தெந்த முறைகளில் எல்லாம் அஇஅதிமுக வை இம்சிக்க முடியுமோ அந்த விதங்களில் எல்லாம் பாஜக இம்சித்து கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகள் தூங்கிக் கொண்டிருந்த டிடிவி தினகரனுக்கு எதிரான இரண்டு அந்நிய செலவாணி மோசடி வழக்குகள் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டு விட்டன. "இந்த இரண்டு வழக்குகள் போகும் போக்கைப் பார்த்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் தீர்ப்பே வந்து விடும் போல தெரிகிறது,'' என்கிறார் அமலாக்கப் பிரிவிலிருந்து ஓய்வு பெற்ற உயரதிகாரி ஒருவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இரண்டு வழக்குகளின் ஆரம்பக் கட்டத்தில் விசாரணை அதிகாரிகள் குழுவிலிருந்தவர்தான் இவர்.

திடீரென்று டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்குகளை முடுக்கி விடுகின்றனர். தேர்தல் கமிஷனுக்கு இரட்டை இலை சின்னத்தை தங்கள் அணிக்கு அளிப்பதற்காக ஒரு ப்ரோக்கருக்கு கோடிக்கணக்கில் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்தார் என்றெல்லாம் வழக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. டிடிவி தினகரன் நாட்டை விட்டு தப்பிப் போகாமல் இருப்பதற்காக இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் உஷார் படுத்தப் பட்டிருக்கின்றன. இந்தளவுக்கு மத்திய அரசு வேகமாக செயல்படுகிறது என்றால் இதன் நுண் அரசியலை நாம் புரிந்து கொள்ளலாம்.

அஇஅதிமுக வின் இரண்டு அணிகளும் ஒன்றிணைவது பிரச்சனையை தீர்த்து விடும் என்று சிலர் நம்புகிறார்கள். இது ஒரு அபத்தமான எதிர்பார்ப்புதான் என்றே விவரம் அறிந்த அரசியல்வாதிகளும், பத்திரிகையாளர்களும் கருதுகின்றனர்.

"ஆட்சியை நடத்துவது என்பது ஒன்றும் அவ்வளவு சுலபமானதல்ல. அதுவும் தமிழ் நாடு போன்ற நாட்டின் முன்னணி பொருளாதார வளங் கொண்ட மாநிலத்தில் புரளும் கரன்சி நோட்டுகள் பற்பல கோடிகளாகும். இதில் 'பசையுள்ள' இலாக்காக்களை தங்களுக்கு வேண்டுமென்றே பெரும்பாலான அமைச்சர்கள் விரும்புகிறார்கள். இதனை எப்படி முதலமைச்சர் பதவியில் இருப்பவர் சமாளிக்கப் போகிறார்? ஜெ இருந்த போது அடங்கி கிடந்த மாதிரி தற்போது எந்த அஇஅதிமுக எம்எல்ஏ வும் இருக்க மாட்டார். இங்குதான் சிக்கலே உருவாகும். அதுவும் நான்காண்டுகள் மீதம் இருக்கின்றன எனும் போது நிலைமை எவ்வளவு மோசம் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளலாம்,'' என்கிறார் ஓய்வு பெற்ற தலைமைச் செயலாளர் ஒருவர்.

இது தவிர, இன்னும் சொல்லப் போனால் யார் முதலமைச்சராக வந்தாலும் அவர்கள் எதிர் கொள்ளும் மிகப் பெரிய சவால் மன்னார்குடி குடும்பத்தில் இருக்கும் குறைந்தது அரை டஜன் அதிகார மையங்களை அவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான். ஏற்கனவே டிடிவி தினகரனுக்கு எதிராக சசிகலா வின் தம்பி திவாகரன் மற்றும் இளவரசியின் மகன்கள் போர்க் கொடி தூக்கி விட்டதாகவும், இது எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் போகக் கூடிய மோதலாக என்றும் கட்சி முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர்.

"சசிகலா சிறைக்கு போகாமல் இருந்திருந்தால் கூட ஓரளவுக்கு ஸ்திரத்தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கலாம். தற்போது அதுவும் சாத்தியமில்லை. டிடிவி தினகரன் பெருந்தன்மையாக தான் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளுவதாகக் கூறுகிறார். இது வேறு செயல் திட்டத்துக்கு அவர் தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதன் அறிகுறிதான் என்றே நான் கருதுகிறேன்,'' என்கிறார் ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஒருவர்.

சுருக்கமாகச் சொன்னால் அஇஅதிமுக வின் இரண்டு அணிகள் ஒன்று சேர்வதாலோ அல்லது மன்னார்குடி குடும்பம் முற்றிலுமாக அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுவதால் மட்டுமோ பிரச்சனைகள் தீரப் போவதில்லை. அஇஅதிமுக வின் அனைத்து தரப்பும், அனைத்து ஜாதிகளை சேர்ந்தவர்களும் ஏற்றுக் கொள்ளும் தலைவர் என்று ஒருவரும் இன்று அஇஅதிமுக வில் இல்லை. இந்த பிரச்சனை அவ்வளவு சுலபத்தில் தீரக் கூடிய பிரச்சனையும் இல்லை.

இதில் கூடுதலான பிரச்சனை, இன்னும் சொல்லப் போனால் பிரதான பிரச்சனை மோடியின் ஆளாகவே மாறிப் போன ஓபிஎஸ் ஸின் நடவடிக்கைகள். அன்புநாதன் வீட்டில் நடந்த ரெய்டுகள், தலைமை செயலாளர் அலுவலகத்தில் நடந்த ரெய்டுகள், அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான ரெய்டுகள் இவை எல்லாமே தமிழக ஆளும் கட்சியை மிரட்டிப் பணிய வைப்பதற்கான ரெய்டுகள்தான் என்பதை புரிந்து கொள்ள ஒருவருக்கு கொலம்பசின் அறிவு தேவையில்லை. சாதாரண அறிவு இருந்தாலே கூட போதும்.

இந்திய அரசின் அனைத்து விசாரணை அமைப்புகளும் இன்று தமிழ் நாட்டின் மீது தனிக் கவனம் செலுத்தி ஆளும் அஇஅதிமுக அமைச்சர்கள் மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் செய்த ஊழல்கள் மற்றும் இதர சட்ட விரோதமான காரியங்களை கிண்டி கிளறிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் மோடிக்கு எதிராக அரசியல்ரீதியாக எந்த ஒரு சிறு அறிக்கைக் கூட விடுக்காமல் அமைதி காக்கிறது ஆளும் அஇஅதிமுக. பச்சையாகச் சொன்னால் மோடி அரசு பிளாக் மெயில் செய்தே தனக்கு வேண்டிய காரியங்களை இன்று தமிழ் நாட்டில் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஒன்று நிச்சயம். இது போன்ற காரியங்கள் நீண்ட நாட்கள் நடக்க முடியாது. ஒரு கட்டத்தில் விவகாரங்கள் வெடித்து சிதறும். ஆளும் அஇஅதிமுக அதன் உள் முரண்பாடுகள் காரணமாகவே, புதிது புதிதாக பிரச்சனைகளைச் சந்திக்கும். ஒரு கட்டத்தில் இது ஆட்சிக் கவிழ்ப்பில் போய் முடியக் கூடிய சாத்தியங்களும் மிக மிக அதிகம். இது எப்போது நடக்கும் என்பது 'மோடி மஸ்தான்' வித்தையை பொறுத்தது தான்.

தமிழக அரசு இன்று தலையறுந்த கோழியாக head less chicken இருக்கிறது. பல அரசு செயலர்கள் தங்கள் இருக்கைகளுக்கு வருவதே இல்லை என்று ஒரு தொலைக்காட்சி விவாத த்தில் கூறுகிறார் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர்.
தேசியக் கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியை இழந்ததன் பொன் விழா ஆண்டில், இதுவரையில் கடந்த அரை நூற்றாண்டில் சந்திக்காத அரசியல் நெருக்கடியை, அரசியல் நிச்சயமற்ற தன்மையை தற்போது தமிழகம் சந்தித்துக் கொண்டிருப்பது தமிழகத்துக்கு காலம் தந்த பரிசு என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமையின் விளைவுகளை அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் தமிழகம் சந்திக்கும் என்பதுதான் மறுக்க முடியாத ஒரே யதார்த்தம்!

English summary
An analysis on current Tamil Nadu politics and the present ADMK govt's stability.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X