For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை சிறையில் அடைபட்டுள்ள 16 மீனவர்களை மீட்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 16 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி புதன்கிழமையன்று காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மீன்பிடித் தொழில் உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், மீனவ மக்களின் வாழ்வாதாரம், கிராமப்புற வேலை வாய்ப்பினை உருவாக்குதல், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருதல் ஆகியவற்றிலும் பெரும் பங்கினை வகிக்கிறது.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த தொழிலை மேற்கொள்ளும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறைபிடிக்கப் படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்திய மீனவர்கள் காலம் காலமாக பாக் ஜலசந்தியில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் அப்பாவி இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் அடைத்துக்கொண்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 30.7.2013 அன்று கைது செய்யப்பட்டனர். அவர்களது மூன்று படகுகளும் இலங்கை கடற் படையினரால் கைப்பற்றப்பட்டன. நீதிமன்ற விசாரணை முடிந்து அவர்கள் விடுவிக்கப்பட்டும், அவர்களது படகுகள் இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இதன் காரணமாக, தங்களுடைய மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில் அவர்களுக்கு மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதே நிலைமை தான் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 30.7.2013 அன்று காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் 13 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. நீதிமன்ற விசாரணை முடிந்தும் அவர்களுடைய படகுகள் இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

இதன் காரணமாக இந்த 13 மீனவர்கள் தாயகம் திரும்புவதிலும், மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதிலும் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 16 மீனவர்கள் இன்னமும் இலங்கை நாட்டு சிறையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இது மட்டுமல்லாமல், நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதன் மூலம், படகுகள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள லாயக்கற்றதாக ஆகிவிடும் சூழ்நிலையும் ஏற்படும்.

அண்மைக் காலமாக, இந்திய மீனவர்கள் விஷயத்தில் புதிய முறையை இலங்கை அரசு கையாண்டு வருகிறது. அதாவது, இந்திய மீனவர்களை விடுதலை செய்துவிட்டு, அவர்கள் வசம் இருக்கும் படகுகள், வலைகள் ஆகியவற்றை இலங்கை அரசு பறிமுதல் செய்துவிடுகிறது.

இதன் மூலம், இந்திய மீனவர்களின் மீன்பிடித் தொழிலையே தடுத்துவிடலாம் என்று இலங்கை அரசாங்கம் கருதுகிறதோ என்ற எண்ணம் மீனவ மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டிக்கும் வகையில், இந்திய தூதரகத்தின் மூலம் மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்குமேயானால், இந்திய மீனவர்களை குற்றவாளிகள் போல் நடத்தப்படுவது தடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இந்திய மீனவர்களையும், அவர்களுடைய படகுகளையும் உடனடியாக திருப்பித் தரக்கூடிய நிலை ஏற்படும். ஆனால் இது போன்ற உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுப்பதாகத் தெரியவில்லை.

இதன் காரணமாக, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 16 இந்திய மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை செய்யப்பட்ட 13 மீனவர்களின் படகுகள் இன்னமும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. இது குறித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டும், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்கமால் இருப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

எனவே, இந்தப் பிரச்சனையில் மெத்தனப் போக்கைக் கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், இலங்கை சிறையில் 50 நாட்களுக்கும் மேலாக வாடிக் கொண்டிருக்கும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 16 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், விடுவிக்கப்பட்ட 13 மீனவர்களின் படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் தேவையான தூதரக நடவடிக்கைகளை துரிதமாக எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டக் கழகத்தின் சார்பில் 26.9.2013 வியாழக் கிழமை அன்று காலை 10.30 மணி அளவில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மீனவர் பிரிவுச் செயலாளர் கே.கே. கலைமணி அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் ஏ. அன்பழகன், எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர் வி. ஓமலிங்கம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

English summary
ADMK will hold a protest against centre and Puducherry govt on Sep 26 in Karaikal, said ADMK supremo Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X