For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அஸ்தமனத்தை நோக்கி நகருகிறதா அஇஅதிமுக?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர் மணி

தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அஇஅதிமுக மிக கடுமையானதோர் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் இதுவரையில் தன்னுடையை 45 ஆண்டு கால வரலாற்றில் சந்திக்காத சிக்கலை இன்று சந்தித்துக் கொண்டிருக்கிறது.

பெயர் சொல்லக் கூடிய அளவுக்கு உருப்படியான ஒரு தலைவர் கூட இன்று அஇஅதிமுக வில் இல்லை என்பதுதான் யதார்த்தம். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தல் இந்த நெருக்கடியை உச்சகட்டத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. ஜெயலலிதா இறந்த தால் நடக்கவிருக்கும் இடைத் தேர்தல் இது. கட்சியின் சின்னமான இரட்டை இலை தங்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறி ஓ பன்னீர்செல்வம் தரப்பும், 'இல்லை இல்லை' இரட்டை இலை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சசிகலா தரப்பு மறுபுறமும் மோதிக் கொண்ட நிலையில் விவகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்குச் சென்றது.

AIADMK counting its days!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் இந்த இடைத் தேர்தலில் இரண்டு தரப்புக்கும் இல்லை என்று தீர்ப்பளித்து விட்டது. மேலும் அஇஅதிமுக என்ற பெயரையும், அதன் கொடியையும் கூட யாரும் பயன்படுத்துக் கூடாதென்றும் தெளிவுபடுத்தி விட்டது. இதன் காரணமாக சசிகலா தரப்புக்கு 'தொப்பி' சின்னமும், ஓபிஎஸ் தரப்புக்கு இரட்டை விளக்கு சின்னத்தையும ஒதுக்கி விட்டது. இது ஒரு தாற்காலிகமான ஏற்பாடுதான்.

"இரண்டு தரப்பும் 20,000 பக்கங்களுக்கு மேற்பட்ட ஆவணங்களை தங்களது ஆதரவு ஆவணங்கள் என்று சமர்பித்துள்ளன. இவற்றை முழுமையாக படித்து பார்க்க கால அவகாசம் தேவைப்படுவதால், தாற்காலிக ஏற்பாடாக சின்னம் முடக்கப் படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. இது சசிகலா தரப்புக்கு அதிகப்படியான கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அதிக அளவில் எம்எல்ஏ க்கள் மற்றும் எம் பி க்கள் சசிகலா தரப்பிடம் இருப்பதால் நிச்சயம் தங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்து விடும் என்று சசிகலா தரப்பு நம்பிக்கையுடன் காத்திருந்தது. ஆனால் ஓபிஎஸ் தரப்புக்கு அந்த மாதிரியான எந்த நம்பிக்கையும் இல்லாததால் சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னம் போய்ச் சேராதது அளவற்ற மகிழ்ச்சியையே அவர்களுக்கு கொடுத்திருக்கிறது.

ஓபிஎஸ் மற்றும் சசிகலாவைத் தவிர மறைந்த ஜெயலலிதா வின் அண்ணன் மகள் தீபாவும் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் ஒரு வேட்பாளராக நின்று கொண்டிருக்கிறார்.
இந்தத் தேர்தலில் அஇஅதிமுக தங்களுக்கே சொந்தம் என்று போட்டியிடும் மூன்று தரப்பிலும் ஏதாவது ஒரு தரப்பு வெற்றி பெற்றாலும் அஇஅதிமுக வில் மீண்டும் ஒரு இலை துளிர்க்கும் என்று நாம்பலாம். ஆனால் மூன்று தரப்பும் தோற்கடிக்கப்பட்டு திமுக வென்றால் என்ன நடக்கும்? இதுதான் மில்லியன் டாலர் கேள்வியாகும்.

கடந்த காலங்களில் அஇஅதிமுக பிளவுபட்ட போதெல்லாம் அதனை தூக்கி நிறுத்த செல்வாக்கு மிக்க தலைவர்கள் இருந்தார்கள். 1987 ல் எம்ஜிஆர் மறைந்த போது ஜெயலலிதா இருந்தார். மூன்றாண்டு போராட்டத்திற்கு பிறகு அஇஅதிமுக வை ஆட்சிக் கட்டிலில் அவர் அமர வைத்தார். எம்ஜிஆர் மறைந்த பிறகு அஇஅதிமுக எத்தனை முறை தோற்றாலும், மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சியை அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்.

ஆனால் இந்த முறை நிலைமை முற்றிலும் வேறானதாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்குமான தலைவராகத்தான் எம்ஜிஆ ரும், ஜெயலலிதாவும் இருந்தனர். இவர்களது ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் எல்லா ஜாதி, மதங்களிலும் இருந்தனர். அனைத்து தரப்பு மக்களிட மும் இவர்கள் இருவருக்கும், ஆங்கிலத்தின் சொன்னால் acceptability இருந்தது. ஆனால் அத்தகைய தலைவர் ஒருவர் கூட இன்றைய அஇஅதிமுக வில் இல்லை. இது தவிர சசிகலா அவசர அவசரமாக கட்சியின் பொதுச் செயலாளராக ஆனதும், பின்னர் துரித கதியில் முதலமைச்சராக முயற்சித்ததும் அஇஅதிமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை பல மடங்கு அதிகரித்தது. சசிகலா உச்ச நீதி மன்றத் தீர்ப்பால் சிறைக்கு அனுப்பப்பட்டு விட்டார். இன்னும் பத்தாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. சிறைக்கு போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக தன்னுடைய அக்காள் மகன் டிடிவி தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமித்து விட்டும் சென்று விட்டார் சசிகலா. ஆகவே இன்று முழுக்க, முழுக்க கட்சி சசிகலா தரப்பிடம் சென்று விட்டது.

எடப்பாடி பழனிசாமி எத்தனை காலம் தான் தாக்குப் பிடிப்பார்? இன்று தலைமை செயலக வட்டாரங்களுடன் சிறிதளவு தொடர்பில் உள்ளுவர்கள் கூட உண்மையான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிடையாது ... மாறாக ச சிகலா வின் ரத்த சொந்தங்கள்தான் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். இது நிர்வாகம் சம்மந்தப் பட்டது மக்களிடம் போய் வாக்குகளை கேட்கப் போவது யார்? எம்ஜிஆரும், ஜெயயலலிதாவும் வாக்குகளை அள்ளுபவர்கள் vote catchers என்று பெயர் பெற்றவர்கள். அது போன்ற ஒருவர் இன்று அஇஅதிமுக வின் எந்த அணியிலும் இல்லை. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் வாக்குகளையும் பெற்றவர்கள் தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும். இன்று அப்படிப்பட்ட தலைவர் யார் இருக்கிறார் அஇஅதிமுக வில்? ஆர் கே நகர் இடைத் தேர்தலில் அஇஅதிமுக வெல்லலாம், தோற்கலாம். ஆனால் விஷயம் அதனுடன் முடிந்து போகப் போவதில்லை. இன்னும் நான்காண்டு ஆட்சிக் காலம் இருக்கிறது. மேலும் அரசியல் என்பது ஏதோ வருடத்திற்கு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்வது போன்றது கிடையாது. ஒவ்வோர் பட்ஜெட்டும் அடிப்படையில் ஆளுங் கட்சியின் ஓர் அரசியில் அறிக்கைதான். அதாவது a political statement. அப்படியென்றால் அந்த அரசியலை யார் வடிவமைக்கப் போகிறார்கள்?

இதுதான் இன்றைக்கு நடுநாயகமாக எழும்பி நிற்கும் கேள்வியாகும். ஜெயலலிதா கடைசி வரையில் பாஜக வை அரசியில் ரீதியில் எதிர்த்தே நின்றார். பாஜக வின் எந்த உரட்டல், மிரட்டலுக்கும் அவர் அசைந்து கொடுத்தது கிடையாது. ஆனால் தற்போதய அஇஅதிமுக அப்படியிருக்குமா? ஜெ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்த போது ஜெ உயிருடன் இருந்தபோது மிகக் கடுமையாக எதிர்த்த உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்பு திட்டம் போன்றவற்றில் தமிழகம் இணைந்து கொண்டது. அரசியல் ரீதியில் மோடி அரசுக்கு 'பக்க வாத்தியம்' வாசிக்கும், கட்சியாகத்தான் தமிழகம் இருக்கப் போகிறது என்பது தற்போது தெள்ளத் தெளிவாகியே விட்டது.

அனைத்து சமுகத்து மக்களின் அங்கீகாரத்தை பெறாத ஒருவர் தமிழ்நாட்டை ஒரு போதும் ஆள முடியாது. தற்போது அஇஅதிமுக வில் இருக்கும் மிகப் பெரிய சிக்கலே இதுதான். தனக்கு அடுத்து யாரும் கட்சிக்கு வாரிசாக வர முடியாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் ஜெ கடைபிடித்த அணுகுமுறைக்கான விலையை இன்றைக்கு அஇஅஇதிமுக கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் ஜெ திறம்பட எதிர்ப்பார். தற்போதய தலைமையால் இவை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்கள்.

தற்போதைக்கு தமிழக முதலமைச்சராக இருப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய சவால் என்பது மோடி அரசின் நெருக்கடிகளோ, சிவில் சமூகத்தின் எதிர்ப்போ கிடையாது. மாறாக சசிகலா குடும்பத்திலிருருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அதிகார மையங்கள் ஆடிக் கொண்டிருக்கும் ஆட்டம்தான். குறைந்த பட்சம் நான்கு அரசியல் மையங்கள் இன்று நிழல் முதலமைச்சராக திரைக்கு பின்னாலிருந்து நிருவாகத்தில் தாங்கள் விரும்புவதை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இது ரொம்ப நாள் ஓடாது. ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் வெடித்து நடுத் தெருவுக்கு வரும். இந்த அதிகார மையங்களை எடப்பாடி பழனிசாமியோ அல்லது அவரது இடத்தில் வந்தமர காத்து கிடப்பவர்களோ எப்படி சமாளிக்கப் போகிறார்கள்?

அரசியல் சாசனத்திற்கு வெளியில் இருந்து கொண்டு கட்சியையும், ஆட்சி நிர்வாகத்தையும் ஆட்டு விப்பவர்களை சமாளிப்பது என்பது எந்த முதலமைச்சருக்கும மிகப் பெரிய சவால்தான்.

இதுதான் அஇஅதிமுக என்ற பெரிய கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான சோதனையால் தமிழகத்திற்கு வந்திருக்கும் மிகப் பெரிய கேடு. இந்தக் கேட்டினால் வரும் விளைவுகளை, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை தமிழகம் விரைவில் சந்திக்க தூவங்கும். ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய இந்த துர்ப்பாக்கிய அரசியல் நிகழ்விலிருந்து தப்பிக்கத் தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் கள யதார்த்தம்.

டிசம்பர் 5 ஜெ மறைவுக்குப் பிறகு இன்று வரையில் நடந்தவற்றை வைத்துப் பார்த்தால் ஒன்று நிச்சயமாக தெறிகிறது. அஇஅதிமுக என்ற பெரிய கட்சி தனது அஸ்தமனத்தை நோக்கி, மெதுவாக ஆனால் உறுதியாக அடி எடுத்து வைக்கத் துவங்கியிருக்கிறது என்பதுதான் அது.

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவர் அஇஅதிமுக வை கால் நூற்றண்டு காலம் வெற்றிகரமாக வழி நடத்தினார். இன்று கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் அப்படி எந்த தலைவரும் இல்லை. ஆகவே அதற்கான விலையை அஇஅதிமுக கொடுக்கப் போகிறது என்பது தெளிவாகவே தெறிகிறது!

English summary
After the demise of CM Jayalalithaa, AIADMK party is struggling to suvive with out capable leader.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X