For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியமே!- ஜெயலலிதா

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: இந்தத் தேர்தலில் அதிமுக அளித்துள்ள அனைத்து வாக்குறுகளுமே நிறைவேற்ற சாத்தியமானவைதான் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, நேற்று மாலை தஞ்சாவூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரித்தார்.

தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மைதானத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பேசியதாவது:

AIADMK election manifesto is 100 percent possible, says Jayalalithaa

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையைப் பற்றி பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் அ.தி.மு.க. மற்ற கட்சிகளைப் பார்த்து பயந்து போய் தேர்தல் அறிக்கையை இன்னமும் வெளியிடவில்லை என்று கூறி வந்தவர்கள் தான் இவர்கள். தற்போது அறிக்கை வெளியிட்டவுடன் மீண்டும் அதே கருத்தை தெரிவிக்கிறார்கள்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை அவர்களது ஒரே குறிக்கோள் மக்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை அபகரித்து விட வேண்டும் என்பது தான். எனவே தான், அவர்கள் தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்ப முயற்சித்து, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பற்றி ஏதேதோ பேசி வருகிறார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, மக்களை ஏமாற்றும் விதமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது தனயனோ, இது தி.மு.க. தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி என சொல்லி உள்ளார். இந்த குழப்பத்தை முதலில் தந்தையும், தனயனும், தங்களுக்குள் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிற எதிர்க்கட்சிகளும் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் போல மக்களை ஏமாற்றுவது தான் என தெரிவித்து வருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை ஏன் தற்போது தான் வெளியிடப்பட்டது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன். தி.மு.க. உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு தாங்கள் செய்த சாதனைகளாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. எனவே தான் அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரிவித்து தான் அவர்கள் பிரசாரத்தை மேற்கொள்ள முடியும்.

ஆனால் எங்களைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் நாங்கள் செய்துள்ள சாதனைகள், நிறைவேற்றியுள்ள மக்கள்நல திட்டங்கள் ஏராளம் ஏராளம். நாங்கள் எதுவுமே செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்யும் போது, முதலில் நாங்கள் செய்ய வேண்டியது என்ன? நாங்கள் என்ன சாதனைகளை நிகழ்த்தி உள்ளோம்; மக்களுக்கு என்ன திட்டங்களைக் கொடுத்துள்ளோம்; முந்தைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை எவ்வாறெல்லாம் நிறைவேற்றியுள்ளோம்; அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் என்னென்ன பணிகளை நிறைவேற்றியுள்ளோம் என்பதையெல்லாம் மக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும் என்பதால்தான், நான் தேர்தல் பிரசாரம் ஆரம்பிப்பதற்கு முன்னரே எங்களது தேர்தல் அறிக்கையை நான் வெளியிடவில்லை.

தற்போது உங்கள் பேராதரவால் நாங்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்ற பின், மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வோம்; என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் என்று தெரிவிக்கும் விதத்தில் எங்களது தேர்தல் அறிக்கையை 5-5-2016 அன்று நான் வெளியிட்டேன். தற்போது நாங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லாமல் சிலவற்றை வழங்குவோம் என்ற உறுதியை அளித்திருக்கிறோம் என்று பிற கட்சிகள் சொல்வதை நான் மறுக்கவில்லை. பிற கட்சிகள் அதற்கு கண்டனமும் தெரிவித்திருக்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.

எங்களது தேர்தல் அறிக்கையில் நாங்கள் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியமே.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தி.மு.க.வினர், பா.ம.க., மக்கள் நல கூட்டணியில் உள்ள கட்சிகள் என பலரும் என் மீது தனிப்பட்ட முறையில் குற்றச்சாட்டுகளை இதுநாள் வரை சொல்லி வந்தனர். எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசின் மீதும் குறைகள் சொல்வதோடு மட்டுமல்லாமல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். தற்போது அதையெல்லாம் நிறுத்திவிட்டு எங்களது தேர்தல் அறிக்கையை பற்றி மட்டுமே பேசி வருகின்றனர். இதில் உள்ள வாக்குறுதிகள் நிறைவேற்ற இயலாதவை என இவர்கள் எல்லோரும் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மக்களை ஏமாற்றப்பார்க்கிறார். இந்த அம்மையார் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது. அந்த அம்மாவை நம்பி ஏமாந்து போகாதீர்கள் என்று திரும்பத்திரும்பக் கூக்குரல் இடுகின்றனர்.

எந்த ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்னாலும், அதைப் பற்றி 100 தடவை அல்ல ஆயிரம் தடவை யோசித்து வாக்குறுதி கொடுப்பவள் தான் இந்த ஜெயலலிதா. என்னால் நிறைவேற்ற முடியும் என்றால் தான், நான் எந்த வாக்குறுதியையும் அளிப்பேன். இது தமிழக மக்களுக்கும் நன்றாக தெரியும். எங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.

மக்கள் நலனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள்தான். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் விரோத செயல்களின் உச்சத்திற்கே சென்று இந்த தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்திற்கே தி.மு.க. சென்றுள்ளது. இவர்கள் தான் மக்களின் எதிரிகள். அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.

இந்த தஞ்சை மண் தனது பிறந்த இடம் என பெருமை பேசும் கருணாநிதி இந்த தஞ்சை மண்ணுக்கு ஏதாவது செய்தாரா என்றால் எதுவும் இல்லை. தஞ்சை டெல்டா பகுதி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் கல்லணை கட்டிய கரிகால் சோழன். அந்த கரிகால் சோழனுக்கு ஒரு நினைவு மண்டபம் கூட கருணாநிதியால் கட்ட இயலவில்லை. 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கரிகால் சோழன் நினைவு மண்டபத்தை அமைத்தது நான் தான். மூச்சுக்கு முன்னூறு முறை தமிழ், தமிழ் என கருணாநிதி சொல்வது வெறும் வேஷம் தான்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்குவது காவிரி டெல்டா பகுதி. இந்த பகுதியின் ஜீவ நாடியாக உள்ளது காவிரி நதிநீர். கர்நாடக மாநிலத்துடன் நமக்குள்ள காவிரி நதிநீர் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பிரச்சினையாகும். இந்த பிரச்சினையில் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபடும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும்தான்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீத்தேன் திட்டத்தை தடுத்தது அதிமுக அரசுதான்

மீத்தேன் எரிவாயு திட்டம் வளமான டெல்டா பகுதிகளை வறண்ட பாலைவனமாக ஆக்கிவிடும் என்பதால் இதுகுறித்து விரிவாக ஆராய ஒரு குழுவினை நான் அமைத்தேன். அந்த குழுவின் அறிக்கை பெறப்பட்டு அதன் அடிப்படையில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது என்ற உத்தரவை எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு பிறப்பித்தது. கிரேட் எஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற நிறுவனமும் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிவிட்டது. விவசாயிகளுக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் யார் கொண்டு வந்தாலும் அதனை தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் நலன் காப்பது எனது தலைமையிலான அ.தி.மு.க.தான்".

English summary
AIADMK Chief and CM Jayalalithaa says that the election manifesto released by the party is 100 percent possible and practical.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X