For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முறைகேடு- விசாரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

கோவையை அடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குநர், தேர்வு கட்டுப்பாடு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நியமனத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதால், உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனங்களுக்காக லஞ்சம் பெற்ற புகாரில் சமீபத்தில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக்கத்தில் மீண்டும் பணி நியமன முறைகேடு புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 முறைகேடு நடந்து உள்ளது

முறைகேடு நடந்து உள்ளது

அந்த அறிக்கையில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர், தொலைதூரக் கல்வி இயக்குனர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய பதவிகளுக்கான நியமனத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தகுதிகள் மற்றும் திறமைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேறு காரணிகளின் அடிப்படையில் முக்கியப் பதவிகளுக்கு ஆட்களை நியமித்தது கண்டிக்கத்தக்கது.

 பதிவாளர் நியமனம்

பதிவாளர் நியமனம்

புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் கோபிநாத் கல்விச் சாதனைகளுக்கு 49 மதிப்பெண்கள், நேர்காணலில் 23 மதிப்பெண்கள் என மொத்தம் நூற்றுக்கு 72 மதிப்பெண்கள் பெற்றதாகக் கூறி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கொடுமை என்னவென்றால், பதிவாளர் பதவிக்கான விண்ணப்பத்தில்,‘எழுதி வெளியான நூல்கள் மற்றும் தாள்கள்' என்ற பகுதியில் கோபிநாத் எதையும் குறிப்பிடவில்லை. நேர்காணலின் போதும் தாம் நூல்கள் எழுதி வெளியிட்டதற்கான ஆதாரங்களைக் காட்டவில்லை.

 தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர்

அதேபோல், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக தேர்வாகியுள்ள துரையரசன் 57.50 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக கணக்குக் காட்டப்படுகிறது. இவர் கல்விச்சாதனைக்கான 75 மதிப்பெண்களில் பாதிக்கும் குறைவாக 34.5 சதவீத மட்டுமே பெற்றுள்ளார்.
ஆனால், நேர்காணலில் அவருக்கு 25க்கு 23 மதிப்பெண் கொடுத்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்கான போட்டியில் முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

 நேர்காணலில் முறைகேடு

நேர்காணலில் முறைகேடு

தொலைதூரக் கல்வி இயக்குனர் முனைவர் ஆறுமுகம் மட்டுமே விண்ணப்பித்திருந்தார். ஒரு பதவிக்கு ஒருவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தால், அப்பதவிக்கு விளம்பரங்கள் மூலம் மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அதை புறந்தள்ளிவிட்டு ஆறுமுகத்தை போட்டியில்லாமல் நியமித்துள்ளது நிர்வாகம். இத்தேர்வுகள் நடந்த போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்விச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையிலான குழு தான் பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வந்தது. அவரது தலைமையிலான குழு தான் இந்த நேர்காணலையும் நடத்தியது.

 தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

நேர்காணல் குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரும் மதிப்பெண் வழங்கி, அவற்றின் சராசரி அடிப்படையில் தான் தகுதி கண்டறியப்பட வேண்டும். ஆனால், தேர்வுக்குழுவில் இருந்தவர்களில் சுனில் பாலிவால் தவிர வேறு எவரும் மதிப்பெண் வழங்கவில்லை. இதுவும் விதிகளுக்கு எதிரானது ஆகும். பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் நியமனம் பற்றிய அனைத்து விவரங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டுள்ளன. நேர்காணலின் வீடியோ பதிவை வழங்க பல்கலைக் கழகம் மிகவும் தாமதிப்பதாகக் கூறப்படுகிறது. அது அழிக்கப்பட்டால் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டுவிடும்.

 சுனில் பாலிவால் மீது நடவடிக்கை

சுனில் பாலிவால் மீது நடவடிக்கை

எனவே, பல்கலைக்கழக வேந்தரான ஆளுனர், நேர்காணலின் வீடியோ பதிவை கைப்பற்றி பார்க்க வேண்டும். அதில் ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தெரிவிக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் புதிதாக மதிப்பெண் வழங்கி, அந்த மதிப்பெண் மற்றும் கல்விச்சாதனைகளுக்காக வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பதவிகளுக்கு தகுதியான பேராசிரியர்களை ஆளுனரே தேர்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகம் சார்ந்த நியமனத்தில் ஊழல் செய்த உயர்கல்வி செயலாளர் சுனில் பாலிவாலை அப்பதவியிலிருந்தும், பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் சார்ந்த மற்ற பதவிகளில் இருந்தும் உடனடியாக அகற்ற ஆளுனர் ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Allegations in Trichy Bharathidasan University says Ramadoss. He also added that, TN Governor should take actions on the complaints on Job Allocation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X