For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுவிலக்கு கொள்கைக்கு போட்டி போடும் கட்சிகள்... ஸ்டாலினிடம் அன்புமணி கேட்கும் 10 கேள்விகள்

Google Oneindia Tamil News

சென்னை : மதுவிலக்கை நீக்கி 2 தலைமுறைகளை தி.மு.க. சீரழித்தற்கு மன்னிப்பு கேட்பீரா என்று மு.க.ஸ்டாலினிடம் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருப்பதாகவும், இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அன்புமணி கூறியுள்ளதாவது..

anbumani

அன்புள்ள தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம்... நலம், நலம் வாழ வாழ்த்துக்கள்!

உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘‘சொன்னதை செய்யும் கழக அரசு முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும்'' என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

அதைப் படித்ததும் தி.மு.க.வின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன். இவை மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால் இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?

2. 1971 ஆம் ஆண்டில் மூதறிஞர் இராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?

3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று பேரறிஞர் அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று தந்தை பெரியார் கூறினார். ஆனால், தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை... வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?

4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?

5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கலைஞருக்கு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று மருத்துவர் அய்யா அவர்களுக்கு வாக்குறுதி அளித்த கலைஞர், அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கலைஞர் இப்போது மட்டும் நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?

6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கலைஞர் அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?

7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?

8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?

9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாற்றும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?

10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள். 2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில் 150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே.... இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?

- இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன்.

தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பெண்கள் மற்றும் குழந்தைகளும் மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கிய உங்களையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த நீங்கள் இப்போது மது விலக்கு பற்றி பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான் என்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது. இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.

பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அ.தி.மு.க.வும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
Anbumani asked 10 Questions to Stalin about liquer free policy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X