• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சம்பளம் போடப்போகிறார்கள்.. ஏ.டி.எம்.களில் பணத்தை ரெடியாக வையுங்கள்: ராமதாஸ்

|

சென்னை: மாத இறுதியில் அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் ஊதியம் பெறவுள்ள நிலையில் அனைத்து ஏடிஎம்களிலும் தாராளமாக பணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இயன்ற அளவு தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

ATM must ensure the availability of generous amounts: Ramadoss

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பணப் புழக்கம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மக்களின் இந்த பாதிப்பும், அவதியும் அடுத்து வரும் நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்துடன் ரூ.500, ரூ.1000 தாள்கள் செல்லாது என்று கடந்த 8- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அன்றிரவு முதலே இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததால் பணப்புழக்கம் அடியோடு நின்று போனது. இதனால் பொது மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பணம் எடுக்க முடியாமல் தடுமாறி வந்தனர்.

கடந்த 8- ஆம் தேதி முதல் வங்கிக் கிளைகளில் வாரத்திற்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரமும், ஏ.டி.எம்.களில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ.2000 மட்டுமே எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 14- ஆம் தேதி முதல் இந்த உச்சவரம்பு முறையே ரூ.24000 ரூ.2500 என அதிகரிக்கப்பட்டது. ஆனால் வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் போதிய பணம் இல்லாததால் இந்த அளவு பணத்தை மக்களால் எடுக்க முடியவில்லை.

ரூ.500 ரூ.1000 தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரையிலான காலத்திற்கும் இனி வரும் காலத்திற்கும் இடையில் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

இம்மாதம் 8-ஆம் தேதி தான் ரூபாய் தாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே அம்மாதத்திற்கான ஊதியத்தைப் பெற்று வீட்டு வாடகை செலுத்துதல், வீட்டுக்குத் தேவையான மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்குதல் போன்ற பணிகளை முடித்து விட்டனர். இவற்றை செய்வதற்கு தேவையான பணம் அவர்களிடம் போதிய அளவில் இருந்தது.

ஆனால், இப்போது அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மாத ஊதியதாரர்களிடம் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லை. ஒன்றாம் தேதி பிறந்தவுடன் மாத வாடகை, பள்ளிக் கட்டணம், தனிப்பயிற்சி கட்டணம், போக்குவரத்துச் செலவு, மளிகைச் செலவு என ஏராளமான செலவுகள் அணிவகுத்துக் காத்திருக்கின்றன. அதற்கான பணத்தை அவர்கள் மாத ஊதியத்திலிருந்து தான் எடுத்தாக வேண்டும்.

அமைப்பு சார்ந்த பணிகளில் உள்ளவர்களில் 75 விழுக்காட்டினரின் ஊதியம் வங்கிகளில் வரவு வைக்கப்படும் நிலையில், அவர்களால் வழக்கம் போல பணம் எடுக்க முடியுமா? என்பது தான் பெரிய கேள்விக்குறியாகும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையையும் இந்திய ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் என குறைந்து ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடிப் பேர் வரை தங்களின் அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏ.டி.எம் மையங்களிலும் குவியும் நிலை அடுத்த இரண்டு நாட்களில் ஏற்படப் போவது உறுதி ஆகும்.

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு நீக்கப்பட்டிருப்பதாகவும், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இன்னும் அதிக பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ஆனால், அதன் உத்தரவு தெளிவாக இல்லை.

அதுமட்டுமின்றி, வாரத்துக்கு ரூ.24000 வரை பணம் எடுக்கலாம் என்று உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த காலத்திலேயே அதை வழங்க வங்கிகளில் போதிய பணம் இல்லை.

வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக ரூ.4000 மட்டுமே வழங்கப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கிக்கு எழுதியக் கடிதத்தில் வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்திருந்தது.

வங்கிகளுக்கு கூடுதல் பணம் வழங்கப்படாத நிலையில், ஒன்றாம் தேதி முதல் அதிகரிக்கவுள்ள வாடிக்கையாளர்களின் பணத் தேவையை வங்கிகள் எவ்வாறு சமாளிக்கப் போகின்றன? என்ற வினாவுக்கு விடையில்லை.

வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாததால் தமிழகத்தின் பல இடங்களிலும் சாலை மறியல், வங்கி அதிகாரிகளுடன் மோதல், ஏ.டி.எம். எந்திரங்கள் மீது தாக்குதல் என வன்முறைகள் நடந்துள்ளன. ஒன்றாம் தேதிக்கு பிறகும் பணப் பஞ்சம் நீடித்தால் இந்த வன்முறைகள் அதிகரித்து சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்களில் ஒன்றாம் தேதி முதல் தாராளமாக பணம் வழங்கப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய- மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும்.

அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊதியத்தில் ரூ.3000 ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், பணம் வசூலிக்கும் மத்திய- மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களின் ஊதியத்தில் இயன்ற அளவு தொகையை ரொக்கமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
chennai: ATM must ensure the availability of generous amounts PMK founder Ramadoss demanded in a statement issued today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more