For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமண விழா ப்ளக்ஸ் போர்டுகளில் என் படத்தை போடவேண்டாம்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Avoid my photos in wedding, ear piercing function posters, urges Vaiko
சென்னை: மதிமுகவினர் நடத்துகின்ற பொதுக்கூட்டங்களாயினும், திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளாயினும் என்னுடைய புகைப்படத்தை எந்த விளம்பரத் தட்டியிலும் பயன்படுத்தக் கூடாது என்று பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதி கேட்டு அரசியலில் அறப்போர் தொடங்கினோம். திராவிட இயக்கத்தில் மறுமலர்ச்சி காணத் தமிழகத்தில் அணி வகுத்தோம்.

அரசியல் அரங்கத்தில் ஏற்பட்டுவிட்ட ஆடம்பர விளம்பரச் சீர்கேட்டினை அகற்றும் முயற்சியாக நமது இயக்க நிகழ்ச்சிகளில் பெரியார், அண்ணா இருவரைத் தவிர்த்து எவருக்கும் கட் அவுட் வைக்கக் கூடாது; கட்சித் தலைவர்களின் காலில் விழும் கலாச்சாரம் அறவே கூடாது என்று பிரகடனம் செய்தோம்.

அதனையே பின்பற்றினோம். எனக்குக் கட் அவுட்கள் வைப்பதையோ, என் காலில் விழுவதையோ நான் அனுமதிக்கவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

காலம் செல்லச்செல்ல, தற்போது நிகழ்ச்சிகளுக்கு விளம்பரம் செய்வதில் வண்ணப்படங்களைப் பெரிய அளவில் பதிப்பித்து, விளம்பரத் தட்டிகள் வைப்பது புதிதாக ஆக்கிரமித்து விட்ட விளம்பரக் கலாச்சாரம் ஆகும்.

தலைமைக் கழகம் நடத்துகின்ற மாநாடு, பொதுக்குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பெரியார், அண்ணா திரு உருவப் படங்கள் தாங்கிய பேட்ஜ்கள் மட்டுமே அணிகிறோம்; என்னுடைய புகைப்படத்தைப் பதிக்க அனுமதித்தது இல்லை. அண்மையில் நடைபெற்ற பொதுக்குழுக் மேடையில் கூட பெரியார் அண்ணா படங்களை மட்டுமே இடம் பெறச் செய்தோம்.

காஞ்சி, நெல்லை, கரூர், விருதுநகர் மாநாடுகளில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா திருஉருவப் படங்களும், அவர்களின் மணி வாசகங்களும் இடம்பெற்ற விளம்பரத் தட்டிகளையே, பொது இடங்களில், பொது மக்கள் பார்வையில் படும்படியாக அமைத்து இருந்தோம். பொதுவுடமை இயக்க நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இயக்க நண்பர்களும், பொதுமக்களும் இதனை மிகவும் பாராட்டிச் சொன்னார்கள்.

நாட்டுக்கு, தமிழகத்துக்கு, இன்றையச் சூழலுக்குத் தேவையான கருத்துக்களை, பெரியாரும், அண்ணாவும் சொன்ன வாசகங்களை மக்கள் மனதில் பதியும் வண்ணம் நிகழ்ச்சிகளின்போது, சாலை ஓரங்களில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் இன்றி இடம்பெறச் செய்வது ஒன்றே சிறப்பு அளிக்கும்.

அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்றவாறு அம்மாதிரி விளம்பர தட்டிகளை ஏற்பாடு செய்யலாம். எனவே, இனிமேல் மதிமுகவினர் நடத்துகின்ற பொதுக்கூட்டங்களாயினும், திருமண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளாயினும் என்னுடைய புகைப்படத்தை எந்த விளம்பரத் தட்டியிலும் பயன்படுத்தக் கூடாது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் இவர்களின் படங்களை, அவர்கள் சொன்ன பொருத்தமான வாசகங்களை, சுவரொட்டியிலோ, விளம்பரத் தட்டியிலோ பயன்படுத்தலாம். அவற்றை ஏற்பாடு செய்யும் தோழர்களின் புகைப்படங்கள் அந்த விளம்பரத்தில் இடம்பெறக் கூடாது என வேண்டுகிறேன்.

கழகத் தோழர்கள் தங்கள் பெயர்களை, பொறுப்பில் இருந்தால் அப்பதவிகளை மாத்திரம் அதில் இடம் பெறச் செய்து மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் கொடி வண்ணத்தையும், பம்பரம் சின்னத்தையும் பயன்படுத்தி, ‘இவண் மறுமலர்ச்சி தி.மு.கழகம்' என்று அந்த விளம்பரங்களை அமைத்துக் கொள்ளலாம்.

அரசியல் கட்சிகளின் இன்றையத் தலைவர்களின் உருவப்படங்களோடு சாலை ஓரங்களில் விசுவரூபம் எடுக்கும் விளம்பரத் தட்டி கள், பொதுமக்கள் மனதில் இனம் புரியாத வெறுப்பை விதைக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டும், ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும், கண்ணியத்தையும் கடைப்பிடிக்கின்ற இயக்கம் நமது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த மதிப்பும் நல்லெண்ணமும் மக்கள் மனதில் ஏற்பட்டு இருப்பதைக் கருதியும், இந்த விளம்பரத்தட்டிகள் வைக்கும் விதத்திலும் நாம் ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிப்பதே சாலச் சிறந்தது என்பதை ஆழ்ந்து சிந்தித்து, தலைமை நிர்வாகிகளோடும், மாவட்டச் செயலாளர்களோடும் கலந்து ஆலோசித்து இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதற்குப் பின்னரும், என் புகைப்படங்களை பெரியதாக அச்சிட்டு விளம்பரத் தட்டிகள் வைக்கும் நிகழ்ச்சிகளில் நான் பங்கு ஏற்க இயலாத நிலை ஏற்பட்டுவிடாமல் தவிர்க்கும் விதத்தில், கழகக் கண்மணிகள் எனது வேண்டுகோளைச் செயல்படுத்த அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு வைகோ கூறி உள்ளார்.

English summary
MDMK chief Vaiko has asked his cadres not to use his photos in marriage, ear piercing function posters, banners.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X