For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அர்ச்சனா ராமசுந்தரம் டிரான்ஸ்பர்: அதிமுக- பாஜக இணக்கத்துக்கு இன்னொரு உதராணம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சி.பி.ஐ.ன் முதல் கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்ட மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், பல்வேறு சட்ட சிக்கல்களை சந்தித்து ஓராண்டு காலம் போராடிய தற்போது தேசிய குற்ற ஆவண காப்பக இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த மாற்றத்தின் பின்னணியில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.

அர்ச்சனா ராமசுந்தரத்துக்கு வலுவான அரசியல் பின்புலம் உண்டு. அவர் கணவர் ராமசுந்தரம் ஐ.ஏ.எஸ் திமுக ஆட்சிகாலத்தில் அப்போதைய முதல்வருக்கு நெருக்கமாக இருந்தவர். தமிழக பொதுப்பணித் துறை செயலராக இருந்த அவர் சென்னையில், புதிய தலைமை செயலகம், ஓமந்தூரார் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட தறுவாயில், ராமசுந்தரம் தானாக பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Back ground story of Archana Ramasundaram IPS transfer.

கடந்த 1980ம் ஆண்டில், தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக போலீசில் பல பதவிகளை வகித்தவர். கடைசியாக, சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை இயக்குனராக இருந்த போது, 2014 பிப்ரவரியில், சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக அறிவிக்கப்பட்டார். 'மத்திய அரசு பணிக்கு செல்லும் முன், தமிழக அரசிடம் அனுமதி கேட்கவில்லை' என்று கூறி ஜெயலலிதா அரசு அவரை, பணியிடை நீக்கம் செய்தது.

அதுபோல, கூடுதல் இயக்குனராக அவரை நியமிக்கும் முன், மத்திய அரசிடம் ஆலோசிக்கவில்லை என, சி.பி.ஐ. இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்கா, சர்ச்சையில் சிக்கினார். இதனால், பல சட்ட சிக்கல்களையும், போராட்டங்களையும் அர்ச்சனா சந்தித்தார். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி, ஓராண்டாக அவருக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை.அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு நேற்று தெரிவித்து உள்ளது.

அர்ச்சனா ராமசுந்தரம் கடந்து வந்த பாதை:

  • அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டியதில் முறைகேடு என்று சொல்லி விசாரணை கமிஷன் அமைத்த முதல்வர் ஜெயலலிதா, அர்ச்சனாவை டம்மி பதவியான சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்துக்குத் தூக்கியடித்தார்.
  • புதிய தலைமைச் செயலகத்தில் ஊழல் நடந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக தகவல் தரும்படி ராமசுந்தரத்தை ஆளும் தரப்பு அணுகியபோது அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் அர்ச்சனா- ராமசுந்தரம் ஆகியோர் ஆளும் தரப்பின் கோபத்தை சம்பாதித்தனர்.
  • ஜெயலலிதா அரசில் வேறு எந்த முக்கியப் பொறுப்பும் கிடைக்காது என்று தெரிந்ததால், மத்திய அரசுப் பணிக்குப் போய்விட நினைத்தார். 2013ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதியன்று, மத்திய அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று அர்ச்சனா ராமசுந்தரம் எழுதிய கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததே அதிமுக அரசுதானாம்.
  • இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குநராக நியமித்து, மத்திய அரசு உத்தரவிட்டது. கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் எழுதிய அர்ச்சனா, தனது தந்தையார் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதன் காரணமாக உடனடியாக தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
  • இதனிடையே பிப்ரவரி 14ம் தேதி அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனத்தை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது.
  • அர்ச்சனா ராமசுந்தரத்தை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசு, தமிழக தலைமைச் செயலருக்கு 2014 பிப்ரவரி 24ம் தேதியன்று, கடிதம் எழுதுகிறது. அந்தக் கடிதத்துக்கு பதில் வராத காரத்தால், 10 மார்ச் மற்றும் 7 ஏப்ரல் அன்று மீண்டும் நினைவூட்டு கடிதம் எழுதப்படுகிறது.
  • 3 மாதங்களாகப் பணி விடுவிப்பு கடிதம் கேட்டு மாநில அரசிடம் அல்லாடினார் அர்ச்சனா. ஆனால், மாநில அரசு பதிலே அனுப்பவில்லை. முதல்வரை நேரில் சந்திக்க முயன்றார் அர்ச்சனா. ஆனால் அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை.
  • 2014 ஏப்ரல் 28 அன்று, வினீத் நாராயண் என்பவர், அர்ச்சனா ராமசுந்தரத்தின் நியமனம் விதிகளுக்கு புறம்பாக பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்கிறார். அந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை கடந்த ஆண்டு மே மாதம் ஒத்தி வைத்தது.
  • மத்திய அரசு 2014 மே 7ம் தேதியன்று அர்ச்சனா ராமசுந்தரத்தை பணியில் சி.பி.ஐ கூடுதல் இயக்குநராக பணியில் சேருமாறு உத்தரவு பிறப்பித்து அதன் நகலை தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் அனுப்பியது.
  • அதே நாளில் அர்ச்சனா ராமசுந்தரம், மத்திய அரசின் ஆணையின் நகலை உள்துறை செயலாளருக்கும், தலைமைச் செயலாளருக்கும், தமிழக டிஜிபிக்கும் இணைத்து, அவர் தானே பணியிலிருந்து விடுவித்துக் கொள்வதாகவும், மத்திய அரசுப் பணியில் சேரப்போவதாகவும் கடிதம் எழுதினார்.
  • 2014 மே 8ம் தேதியன்று காலை 11 மணிக்கு, சிபிஐயின் கூடுதல் இயக்குநராக பணியில் சேர்ந்தார் அர்ச்சனா ராமச்சுந்தரம். அதே நாளில், தமிழக அரசு, அர்ச்சனா ராமசுந்தரத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. தமிழகத்தில் சஸ்பெண்ட், டெல்லியில் செயல்பட முடியாத நிலை என திரிசங்கு நிலையில் ஆழ்ந்தார் அர்ச்சனா ராமசுந்தரம்.
  • தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பியாக ராமானுஜம் பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு நோ சொன்னதால், முதல்வர் ஜெயலலிதா அரசு கோபம் கொண்டது. இதனாலேயே அர்ச்சனாவை பணியில் இருந்து விடுவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
  • பாஜகவும், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அர்ச்சனாவை சிபிஐ பதவியில் உட்காரவிட மாட்டோம்' என்று அறிவித்திருந்தது. பதவிக்காக அர்ச்சனா ராமசுந்தரம் பல்வேறு சட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் பாஜக சொன்னது போலவே அர்ச்சனா ராமசுந்தரம் சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து தேசிய குற்ற ஆவண காப்பக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அர்ச்சனா ராமசுந்தரத்தின் பதவி மாற்றம் பின்னணியில் மிகப்பெரிய அரசியல் விளையாட்டுக்கள் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவேதான் சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் நாற்காலியில் அர்ச்சனா ராமசுந்தரத்தை அமரவிடாமலேயே வேறு பதவிக்கு மாற்றியுள்ளது மத்திய அரசு.
  • ஆளும் பாஜக அரசு தற்போது அதிமுக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இணக்கமான போக்கை கையாளுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதாவிற்கு பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும், தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களும் வாழ்த்துக்களை கூறினர். அதேபோல ராஜ்யசபாவில் மத்திய அரசின் கொள்கை முடிவுகளுக்கு அதிமுக எம்.பிக்கள் ஆதரவான போக்கை கடைபிடிக்கின்றனர்.
  • இந்த சூழ்நிலையிலேயே அர்ச்சனா ராமசுந்தரம் விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மத்திய அரசு நடந்து கொண்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறியுள்ளனர்.
English summary
Here is the back ground story of Archana Ramasundaram IPS transfer.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X