• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷ்ஷப்பா... இப்பவே கண்ணைக் கட்டுதே.. ரஜினி ரசிகர்களின் டெலிகேட் பொசிஷன்!

|

சென்னை: வைகைப் புயல் வடிவேலு பாஷையில் சொல்லணும்னா 'ரஜினி ரசிகர்கள் ரொம்ம்ம்...ப நல்லவங்க'

கடந்த பல ஆண்டுகளாக யார், எவ்வளவு அட்டாக் பண்ணினாலும் வலியை கொஞ்சமும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தங்கள் அபிமான நாயகனுக்கு முட்டுக்கொடுப்பதில் ரஜினி ரசிகர்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.

being a fan of rajinikanth is not so easy

கிட்டத்தட்ட 25 வருஷங்கள் இருக்கும். ரஜினி, தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது அவரது ரசிகமணிகள் துள்ளிக் குதிச்சாங்க. அதுமட்டுமா! தனது ஒவ்வொரு பட ரிலீசின்போதும் ரஜினி அரசியல் சரவெடிகளைக் கொளுத்திப்போட, ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள்.

''எப்ப வருவேன், எப்படி வருவேண்ணு தெரியாது'' என குழப்பியடித்து ''ஆனா வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்'' என பினிஷிங் டச் கொடுத்த ரஜினியை ஒரு அவதார புருஷனாகவே ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால் ரஜினி சொன்னபடி உருப்படியா ஏதாவது நடந்ததா என்றால்...அதுதான் இல்லை.

ஆம்....ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான 'இனிப்புச் செய்தி' ரசிகர்களுக்கு இன்னமும் கிடைக்கவில்லை. மாறாக 50ஐக் கடந்த அவர்களில் பலருக்கும் சர்க்கரை நோய்தான் பரிசாகக் கிடைத்திருக்கிறது. கூடவே பி.பி உள்ளிட்ட நோய்களும் போட்டிப் போட்டுத் தாக்கி வருகின்றன என்று ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

ரஜினி தொட்டதெல்லாம் துலங்கிய நாட்கள் உண்டு. ஆனால் யார் கண் பட்டதோ... அண்மைக்காலமாக அந்த மேஜிக் மிஸ்ஸிங். சமீபகாலமாக ரஜினியின் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. லிங்கா தொடங்கி தர்பார் வரை ரஜினியின் எந்தவொரு லேட்டஸ்ட் படமும் சொல்லிக் கொள்ளும்படியான வசூலைக் குவிக்கவில்லை. உனக்கு யார் சொன்னா, தர்பார் செம கலெக்ஷன்மா என்று முட்டுக் கொண்டு முந்திக்கொண்டு வருவோரிடம் விவாதிக்க ஒன்றுமில்லை. உண்மையில் ''ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டதே தவிர, கல்லா முழுமையாக நிறையவில்லை'' என கண்ணைக் கசக்குகிறது சினிமா வட்டாரம்.

தர்பார் நட்டத்தை ஈடுசெய்யக் கோரி அந்தப் படத்தின் விநியோகஸ்தர்கள் ரஜினி வீட்டிற்கு படையெடுத்திருக்கும் செய்தி, ரஜினியின் வயோதிக ரசிகர்களை மேலும் தள்ளாடச் செய்துள்ளது.

பொதுவெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் ரஜினி மீது தொடுக்கப்படும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க முடியாமல் ரஜினி ரசிகர்கள் ரொம்பவே திண்டாடி வருகின்றனர். விஜய்-யின் லேட்டஸ்ட் பட வசூல் இவ்வளவு, அஜீத் அள்ளிக் குவித்தது இத்தனை கோடி என அவர்களது ரசிகர்கள் புள்ளிவிபரங்களுடன் புட்டுப்புட்டு வைக்க, பல நேரங்களில் வெறும் வாயில் வடைசுட வேண்டிய பரிதாபத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

சினிமாவில்தான் இப்படியென்றால், அரசியல் தொடர்பாக ரஜினி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தங்களுக்குப் பேரிடியாக மாறி வருவதாக அவரது ரசிகர்கள் புலம்புகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வருவதால் யாருக்கு அதிக பாதிப்பு என்று ட்விட்டரில் கருத்து கணிப்பு நடத்தினால், ரஜினிக்கு தான் அதிக பாதிப்பு என்று நெட்டிசன்கள் உள்ளே புகுந்து கலாய்க்கின்றனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை ரஜினி தேவையேயில்லாமல் இப்போது பேச, தமிழுணர்வாளர்களும், பெரியார் தொண்டர்களும் ரவுண்டு கட்ட ஆரம்பித்தனர். ரஜினி வழக்கம்போல அமைதியாகிவிட அவரது ரசிகர்கள், பெரியார் தொண்டர்களுடன் மல்லுகட்ட வேண்டியதாகிவிட்டது.

''சம்மந்தம் சம்மந்தமே இல்லாமல் இப்ப இது பற்றி எதுக்கு பேசணும்!!" என நடுநிலையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினி ரசிகர்கள் வேறு வழியில்லாமல் அன்னா ஹசாரே வழியில் அமைதிகாத்து வருகின்றனர். அவசியம் நீங்க இப்படி ஒரு கருத்தை சொல்லியே ஆகணுமா என்று கேட்டால், தலைவர் சொல்லிட்டாரு.. அதுல என்ன தப்புன்னு.. எதிர்கேள்வி கேட்கிறார்கள்.

ஒரு பொது நிகழ்ச்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'முரசொலி' பற்றி ரஜினி கமெண்ட் அடிக்க, அறிவாலயம் கொதிக்க ஆரம்பித்தது. அறிவாலய தொண்டர்கள் ரஜினியின் சர்ச்சைக்குரிய பழைய கதைகளையெல்லாம் எடுத்துவிட, அதற்குப் பதிலளிக்க முடியாமல் ரொம்பவே திணறித்தான் போனார்கள் அவரது ரசிகர்கள். இதுக்குதான் எங்க ஆளு மாதிரி பேசணும். என்ன சொன்னாருன்னு அவரே விளக்கி சொன்னா தான் புரியும், இல்லேன்னா ஒரு பயலுக்கு புரியாது என் புன்முறுவல் பூக்கிறது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் தரப்பு. இதையே கான்செப்டா வெச்சி சில பல மீம்களையும் தயாரித்து பறக்கவிட்டார்கள் நெட்டிசன்கள்.

பட்ட காலிலே படும் என்பதற்கு ரஜினியும் விதிவிலக்கா என்ன!

வருமான வரித்துறை தொடர்ந்த ஒரு வழக்கில் '' பணத்தை வட்டிக்கு விட்டு கடனை அடைத்தேன்'' என ரஜினி சொல்லப்போக, நாலா பக்கமும் விமர்சனங்கள் தெறிக்க ஆரம்பித்தன. '' ஏம்பா சிஸ்டம், சரியில்லைண்ணு சொல்ற உங்க தலைவர் வட்டிக்கு விடலாமா!'' என பலரும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் ஜகா வாங்கினார்கள் ரஜினி ரசிகர்கள். போதாதக்குறைக்கு 'கந்துவட்டி கோவிந்தன்' ரேஞ்சுக்கு ரஜினியை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர் . ''வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டேங்கிறாரே... எவ்வளவுதான் முட்டுக் கொடுக்கிறது!'' என ரசிகர்களே புலம்பும் அளவிற்கு விவகாரம் வில்லங்கமானது.

'தலைவர், எதுவும் பேசாம அமைதியா இருந்தா ஏன் பேசலைண்ணு எல்லோரும் கேட்கிறாங்க. நாட்டு நடப்புகள் மீது அவருக்கு அக்கறையில்லையான்னு ஆளாளுக்குக் கிழிச்சி தொங்க விடறாங்க. சரி வம்பு எதுக்குண்ணு தலைவர் வாயைத் திறந்தால் பிரச்சனை வாண்டட் ஆ வந்து வண்டியில் ஏறுது. மொத்தத்தில் எங்களுக்கு நேரம் சரியில்லை. அவ்வளவுதான்'' என்பதாகவே பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் புலம்பித் தீர்க்கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ரஜினி தெரிவித்த கருத்துக்களுக்காக அவரை விசாரணைக்கு வரச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டிருப்பது, ரசிகர்களை பெரும் சோகத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கிறது.

13 பேரை பலி வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்திற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என ரஜினி சொன்னதை பெரும்பாலான அவரது ரசிகர்களே ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக விரோதிகள் காரணம் என்றால் யார் அந்த சமூக விரோதிகள், அவர்கள் பின்புலம் என்ன, அவர்களை எப்படி ரஜினி கண்டுபிடித்தார்! என பலரும் அப்போதே அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இது பற்றி ரஜினி மேற்கொண்டு விளக்கம் எதுவும் சொல்லவில்லை. ரஜினியே சொல்லாத நிலையில் ரசிகர்கள் வாயில் பெவிக்காலை ஒட்ட வேண்டியதாகிவிட்டது. ஆனால் தற்போது விசாரணை கமிஷன் முன்பு இது பற்றி விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு ஏற்பட்டிருக்கிறது. சினிமா மாதிரி பஞ்ச் டயலாக் பேசி, விசாரணை கமிஷனில் எதிராளியைத் திணறடிக்க முடியாத நிலையில் தலைவர் வாயிலிருந்து அடுத்ததாக எந்த வம்பு வரப் போகிறதோ! என நடுங்கும் குளிரில் பதைபதைப்புடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். (எதிர்பார்ப்புக்கேற்ப.. இன்னிக்கு காலையிலேயே புது வம்பை விதைத்து விட்டுப் போயிருக்கிறார் நம்ம தலைவர்!)

சூப்பர் ஸ்டார் வாயைத் திறந்தாலே பிரேக்கிங் நியூஸ் கார்டை எடுத்து கையில் வைத்துக் கொண்டு தயாராக இருக்கின்றன செய்திச் சேனல்கள்.

முறைப்படி கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே இத்தனை பிரச்சனைகளும், சிக்கல்களும் என்றால்...கட்சி தொடங்கிய பிறகு என்னாகுமோ! என்கிற கவலையில் ஆழ்ந்திருக்கும் பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் புலம்பல் இப்படித்தான் இருக்கிறது

'' ஸ்ஸ்ஸ் அப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே!''

- கௌதம்

 
 
 
English summary
Being a fan of Actor Rajinikanth is not so easy and this story discussing about that.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X