For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமஜெயம் கொலை வழக்கு... உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகிறது சி.பி.சி.ஐ.டி.

Google Oneindia Tamil News

திருச்சி : தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில், முக்கியமான சிலரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே ராமஜெயத்தின் உறவினர்கள் மற்றும் நண்பர்களாக இருந்தவர்களிடம் சிபிசிஐடி போலீஸார் மிகவும் மென்மையாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ramajayam

கொலை செய்யப்பட்ட ராமஜெயத்தின் இரண்டு உள்ளங்கைகளிலும் கருப்பு மை காணப்பட்டதாகவும், அது, அவரது விரல் ரேகைகளைப் பதிவு செய்வதற்காக செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, விரல் ரேகை பதிவு என்பது சொத்து பரிவர்த்தனைக்காகவே மேற்கொள்ளப்படும். எனவே, ராமஜெயத்தின் கொலை சொத்துகளுக்காக நிகழ்ந்திருக்கவும் வாய்ப்பு அதிகம்.

சொத்துகளுக்காக நடந்த கொலை என்றால், ராமஜெயத்தின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாரேனும்கூட கொலையை செய்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், ராமஜெயத்தின் உறவினர்களிடமோ அல்லது அவரது நண்பர்களிடமோ இந்தக் கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

உயர் நீதிமன்றம், ‘இந்தக் கொலை வழக்கை அறிவியல்பூர்வமாக சிபிசிஐடி விசாரிக்கவில்லை' என சுட்டிக்காட்டிய பிறகும், உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட அறிவியல்பூர்வ விசாரணை நடவடிக்கை எதையும், இதுவரை இந்த வழக்கில் அதிக சந்தேகத்துக்குரிய நபர் களிடமோ, ராமஜெயத்தின் உறவினர்களிடமோ சிபிசிஐடி போலீஸார் நடத்தவில்லை.

இந்த வழக்கில் ராமஜெயத்தின் மனைவி லதா மட்டுமே தனது கணவர் கொலைக்குக் காரணமானவர்களை கண்டுபிடிக்கக் கோரி நியாயம் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். ஆனால், அவரது உறவினர்கள் பலர் இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

ராமஜெயம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நிறைய சொத்துகளை வாங்கியதாக பரவலாக பேச்சு இருந்தது. எனவே, சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது உறவினர்கள் அல்லது அவருக்கு நம்பிக்கையாக இருந்தவர்கள் கொலை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. அவரது சடலத்தில் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டிருப்பதற்கான தடயங்கள் காணப்படுவதால், இந்தக் கொலை சொத்துக்காக நடந்ததாகவே தெரிகிறது.

ராமஜெயம் பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்தது போன்ற ஆவணங்கள் அல்லது பதிவு செய்யாத சொத்து பரிவர்த்தனை ஆவணங்களை எழுதிக் கொடுத்ததுபோல், சொத்துகளை எழுதி வாங்கிய பிறகு அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

ஏனெனில், சொத்துகளை எழுதி வாங்க கட்டைவிரல் ரேகையை பதிவு செய்தால் போதும். உள்ளங்கை உள்ளிட்ட கையின் பிற இடங்களில் கருப்பு மை இருந்தது, போலீஸை திசை திருப்புவதற்காககூட செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்நநிலையில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி எஸ்.நாகமுத்து முன்பு சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. டி.எஸ்.அன்பு ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கொலையில் தொடர்பு உள்ளதாக சந்தேகித்து சிபிசிஐடி விசாரித்து வருபவர்களில் சிலர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுகின்றனர். அவர்களை உண்மை கண்டறியும் சோதனை மூலம் பரிசோதிக்க வேண்டியுள்ளதால் மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்ற நீதிபதி இறுதி வாய்ப்பாக மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து, ராமஜெயத்துக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாராகி வருகின்றனர். இதற்கான அனுமதி கேட்பு மனு திருச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Cbcid produced statements and requested more time, claiming that the suspects should be subjected to lie detector tests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X