For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காத தமிழகம். அரிசி விலை உயர்த்தி பழிவாங்கும் மத்திய அரசு.. சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் ஏற்கவில்லை என்பதால் அரிசியின் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Centre hike Rice price: Seeman condemns

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஒட்டு மொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் சலனமில்லாது தமிழர்களுக்கு இன்னொரு வஞ்சகத்தை இழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழகமும், கேரளாவும் மட்டும்தான் அதனை ஏற்க மறுத்தன. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்பிருந்தே தமிழகத்திலும், கேரளாவிலும் பொது வழங்கல் விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் பொருட்களைத் தாராளமாக வழங்கி வந்ததே இதற்குக் காரணமாகும்.

மத்திய அரசின் நிதி நெருக்கடியைத் தாங்க முடியாது தற்போது கேரளா, உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்கத் தயாராகிவிட்டது. அவர்களோடு தமிழகத்தையும் பணிய வைக்கும் முயற்சியில் மத்திய அரசு தற்போது களமிறங்கியிருக்கிறது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 2,03,64,386 குடும்ப அட்டைதாரர்களில் 1,91,53,352 குடும்ப அட்டைதாரர்கள் இலவச அரிசியைப் பெற்று வருகிறார்கள். ஆனால், இலவசமாக வழங்கி வரும் அரிசியை மத்திய அரசிடமிருந்து வெவ்வேறு விலைகளில்தான் தமிழக அரசு வாங்கி வருகிறது. அதாவது, வறுமைக்கோட்டுக்கு கீழுள்ளோர்க்கு வழங்கப்படும் அரிசியின் விலையை ரூ 5.65க்கும், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளோருக்கு வழங்கப்படும் அரிசியின் விலையை ரூ 8.30க்கும் மத்திய அரிசித் தொகுப்பிலிருந்து தமிழக அரசு பெற்று வருகிறது.

இதில் வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளோருக்கான அரிசியின் விலையை ரூ 8.30லிருந்து, மூன்று மடங்கு உயர்த்தி ரூ. 22.54 என விலையை நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. அரிசிக்காக ரூ. 3458.50 கோடி உட்பட உணவுத் தானியத்திற்காக ரூ. 5,300 கோடியை தமிழக அரசு செலவழித்து வரும் நிலையில் அரிசியின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதால், ஏற்கனவே நிதிநெருக்கடியில் திணறி வரும் தமிழக அரசு அதற்காக மேலும் நிதி ஒதுக்குவது என்பது குதிரைக்கொம்புதான்!

மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றாது தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசைப் பணிய வைக்கவும், பழி வாங்கவுமே இந்த விலை உயர்வை மத்திய அரசு ஏவியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போய் விவசாயக் குடும்பங்கள் நலிவுற்று வறுமையில் வாடிவரும் நிலையில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியும் நிறுத்தப்படுவது வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவதற்கு ஒப்பானதாகும்.

ஒருவேளை, உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றினால்கூட இப்போது பயன்பெறுகிற அளவுக்கு அந்தத் திட்டத்தின் மூலம் மக்கள் பயனடைய மாட்டார்கள். ஏனென்றால், அத்திட்டத்தின் மூலம், 50.55 விழுக்காடு குடும்ப அட்டைதாரர்களே பயன்பெற முடியும். இதனால், ஏற்கனவே, அதன் மூலம் பயன் பெற்றுவரும் கோடிக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும்.

எனவே, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மக்கள் தொடர்ந்து பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டும், தமிழக மக்களின் நலனை எண்ணியும் மத்திய அரசானது தனது விலையுயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஒருவேளை இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் ஒருநாள் தமிழ்த் தேசிய இன மக்களின் ஒட்டுமொத்த வெறுப்பின் விளைச்சலை இந்தியா மொத்தமாக அறுவடை செய்ய வேண்டி வரும் என எச்சரிக்கிறேன் என்று சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar leader Seeman condemned Central government to hike Rice price for Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X