செம்பரம்பாக்கம் நீர் குடித்த சென்னைவாசிகளே... இனி கல்குவாரி தண்ணீர் வருது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் குடித்து பழகிய சென்னைவாசிகள் இனி கல்குவாரி தண்ணீர் குடிக்கப் போகிறார்கள். கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையால் சென்னையில் ஏரிகள், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னையே மிதந்தது. லட்சக்கணக்கான லிட்டர் மழைநீர் கடலில் வீணாக கலந்தது.

இதற்கு நேர்மாறாக கடந்த ஆண்டு பருவ மழை பொய்தது. கடும் வெயில் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டதாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன.

வீராணம் ஏரியும் வறண்டு காணப்படுவதால் அங்கிருந்தும் குடிநீர் கிடைக்கவில்லை. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் தினமும் 200 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது.

குடிநீர் தேவை

குடிநீர் தேவை

புறநகர் பகுதிகளில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீர் லாரிகள் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்படுகிறது. வேறு எந்த நீர் ஆதாரங்களும் கிடையாது என்பதால் சென்னையின் குடிநீர் தேவையை சமாளிப்பது குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

மெட்ரோ வாட்டர்

மெட்ரோ வாட்டர்

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தெருக்களில் குடங்களுடன் அலையும் நிலை காணப்படுகிறது. 4 நாட்களுக்கு ஒருமுறைதான் மெட்ரோ வாட்டர் வருகிறது. அதை நீண்ட வரிசையில் நின்று மக்கள் பிடித்து செல்கின்றனர்.

தினமும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்க 850 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை வெறும் 550 மில்லியன் லிட்டர் வரை மட்டுமே விநியோகிக்கப்பட்டது.

எஸ்.பி வேலுமணி

எஸ்.பி வேலுமணி

மாங்காடு அருகே, சிக்கராயபுரத்தில் உள்ள கல் குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீரை சுத்திகரித்து சென்னையின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தும் பணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பருவமழை குறைவு, கடும் வெப்பம் போன்ற காரணங்களால் இந்த ஆண்டு சென்னை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளிலும், வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருக்கின்றது.

140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி

140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி

கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை குறைவாக இருந்ததால் குடிநீர் ஆதாரங்களில் நீர் இருப்பு கடுமையாக குறைந்தது. எனவே, புறநகர் பகுதிகளில் இருக்கும் மரபான நீர் ஆதாரங்களுடன் கல்குவாரிகளில் தேங்கியுள்ள மழைநீர், விவசாய கிணறுகள் போன்ற மரபு சாராதவற்றில் இருந்தும் தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டது.

கல்குவாரி தண்ணீர்

கல்குவாரி தண்ணீர்

இதையடுத்து முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே சிக்கராயபுரத்தில் உள்ள 22க்கும் மேற்பட்ட குவாரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பல அடி ஆழத்தில் உள்ள குவாரியில் இருந்து தண்ணீரை எடுப்பது குறித்து பல்வேறு ஆய்வுகள், சோதனைகள் செய்யப்பட்டன. தேங்கியிருக்கும் நீரின் தரத்தை கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட், அண்ணா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல், புவி அமைப்பியல் துறை உட்பட பல துறை நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.

தண்ணீர் சுத்திகரிப்பு

தண்ணீர் சுத்திகரிப்பு

கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை அருகே உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து, சென்னை நகருக்கு விநியோகம் செய்ய உகந்தது என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. குவாரிகளில் இருந்து தண்ணீரை பம்ப் செய்து குழாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.

தினசரி 3 கோடி லிட்டர்

தினசரி 3 கோடி லிட்டர்

இதிலிருந்து தினசரி 3 கோடி லிட்டர் வீதம் சுமார் 300 கோடி லிட்டர் நீர் 100 நாள்களுக்கு பெற திட்டமிடப்பட்டன. இப்பணிகள் 13.63 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின்னர் இப்பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.

தண்ணீரின் தரம்

தண்ணீரின் தரம்

தற்சமயம் 600 மிமீ விட்டமுள்ள டிஐ இரும்பு குழாய்கள் 2900 மீட்டர் நீளத்துக்கும் 600 மிமீ விட்டமுள்ள பிளாஸ்டிக் குழாய்கள் 900 மீட்டர் நீளத்துக்கும் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் பம்ப்செட் மற்றும் ஜெனரேட்டர் இயந்திரங்கள் கல்குவாரியில் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட நீரின் தரம் திருப்திகரமாகவும் உள்ளது என்று கூறியுள்ளார்.

கல்குவாரி தண்ணீர் குடிக்கலாம் வாங்க!

கல்குவாரி தண்ணீர் குடிக்கலாம் வாங்க!

தற்போது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் கிடைக்கும் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. மீதி குடிநீர் லாரிகள் மூலம் ஏரியா வாரியாக விநியோகித்து சமாளித்து வருகின்றனர். இதனால் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. எனவே, எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி கிடக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீரை எடுத்து அதை சுத்திகரித்து குடிநீராக்குவதற்கான முயற்சியில் சென்னை குடிநீர் வாரியம் ஈடுபட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three crore liters of water per day will be supplied from quarries for 100 days, till the city receives rains and its reservoirs get filled. In total, 300 crore liters will be sourced from over 20 quarries in and around Mangadu, officials said.
Please Wait while comments are loading...