For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 பேரும் பெண் குரலில் பேசி கேலி செய்தார்கள், கொன்றேன்: கல்பாக்கம் பாதுகாப்பு அதிகாரி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கல்பாக்கம்: தினந்தோறும் செல்போனில் பெண் குரலில் பேசி கேலி செய்தனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலினால் சுட்டுக் கொன்றுவிட்டேன் என்று கல்பாக்கம் அணுமின்நிலைய ஊழியர் குடியிருப்பு பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே சதுரங்கப்பட்டினம் கடற்கரை பகுதியில் மத்திய அரசின் அணுசக்தி துறை சார்பிலான சென்னை அணுமின்நிலையம், இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம் ஆகிய நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இந்த நிறுவனங்களில், மத்திய தொழிற்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கான குடியிருப்பு கல்பாக்கத்திலும், அணுபுரம் கிராமத்திலும் உள்ளன.

CISF man who killed three was stressed: Police

துப்பாக்கியால் சுட்ட வீரர்

கல்பாக்கம் ஊழியர் குடியிருப்பில் புதன்கிழமையன்று அதிகாலை 4.50 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விஜய் பிரதாப்சிங் (52) என்ற வீரர் தான் வைத்திருந்த நவீன ரக துப்பாக்கியால், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஏட்டு மோகன்சிங் (வயது 57) என்பவரை சுட்டு கொன்றார்.

மூவர் சுட்டுக்கொலை

சத்தம் கேட்டு அவரை பிடிக்க வந்த சேலம் மாவட்டம் தளவாய்பட்டியை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் (58), மதுரை மாவட்டம் சின்னரெட்டி பாளையத்தை சேர்ந்த ஏட்டு சுப்புராஜ் (57) ஆகியோரையும் விஜய்பிரதாப்சிங் அதே துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

2 பேர் படுகாயம்

மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப்சிங் (57) வயிற்றில் குண்டு காயம் அடைந்தார். காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கோவர்த்தன பிரதாப்சிங் (42) என்ற காவலர் தவறி விழுந்து காயம் அடைந்தார்.

படை வீரர்கள் முகாமில்

இவர்கள் இருவரும் கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பிறகு கோவர்த்தன பிரதாப் முகாமுக்கு திரும்பினார். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மோகன்சிங், கணேசன், சுப்புராஜ் ஆகியோரின் உடல்கள், படை வீரர்கள் முகாமில் வைக்கப்பட்டது.

உடலுக்கு அஞ்சலி

சென்னை அணுமின் நிலைய இயக்குனர் டி.ஜே.கோட்டீஸ்வரன், பாவினி திட்ட இயக்குனர் பிரபாத் குமார், மத்தியதொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி நாயக், சீனியர் கமாண்டர் காமு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

சொந்த ஊருக்கு உடல்கள்

பின்னர் மோகன்சிங் உடல் விமானம் மூலம் அவரது சொந்த ஊரான ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கணேசன், சுப்புராஜ் ஆகியோரின் உடல்களும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வேளைப்பளு அதிகம்

கைது செய்யப்பட்ட விஜய் பிரதாப்சிங் கல்பாக்கம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். அப்போது அவர், எனக்கு மனைவியும், 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். சமீபத்தில்தான் இடமாற்றலாகி இங்கு வந்தேன். ரோந்து பணியில் ஈடுபட்ட என்னை, ஏட்டு மோகன்சிங் கடுமையாக வேலை வாங்குவதுடன் அடிக்கடி கோபமூட்டும் விதமாக பேசினார்.

பெண் குரலில் பேசி கிண்டல்

செல்போன் மூலம் பெண் குரலில் பேசி தினமும் என்னை கேலி கிண்டல் செய்தனர். நான் மிகவும் வேதனை அடைந்தேன். மேலும் ஏட்டு மோகன்சிங் தினமும் என்னை அவதூறான வார்த்தைகளால் திட்டுவார். நான் தினமும் யோகாசனம் செய்வேன். விஷ்ணு கடவுளை வணங்குவேன். இதையும் மோகன்சிங், கணேசன், சுப்புராஜ் ஆகியோர் கிண்டல் செய்தனர்.

மன உளைச்சலால் சுட்டேன்

நான் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று சுப்புராஜ் உயர் அதிகாரியிடம் தவறான தகவல் கொடுத்தார். மனைவி குழந்தைகளை பிரிந்து மனகஷ்டத்துடன் வேலை பார்த்த நான், இவர்களின் தொல்லைகளை தாங்க முடியாமல் தவித்தேன். அவற்றை தாங்கமுடியாமல்தான், அந்த 3 பேரையும் நான் சுட்டேன் என்று கூறியுள்ளார்.

புழல் சிறையில் அடைப்பு

விசாரணைக்குப்பின் விஜய்பிரதாப்சிங்கை, போலீசார் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்படி விஜய்பிரதாப்சிங் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
The CISF Head Constable who allegedly shot dead three of his colleagues and injured two in their camp at Kalpakkam was in a depressed state of mind and also homesick, a senior police official said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X