எடப்பாடிக்கு செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க பொதுக்கூட்டங்கள்... தினகரன் திடீர் உத்தரவால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடப்பாடிக்கு எந்த செல்வாக்குமே இல்லை என்பதை அம்பலப்படுத்த மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த தமது ஆதரவாளர்களுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்தாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளிவந்த நாள் முதலாக, எடப்பாடி பழனிசாமி தம்மை பார்க்க வருவார் என எதிர்பார்த்தார் தினகரன். ஆனால் கட்சி அலுவலகத்துக்குள்ளேயே தினகரனை நுழைய முடியாத அளவுக்குச் செய்துவிட்டார் எடப்பாடி.

மேலும், பொதுச் செயலாளர் என்ற முறையிலாவது சசிகலாவைப் பார்க்க சிறைக்குச் செல்வார் எனவும் நினைத்தனர். அவர்களுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்காமல் ஒதுக்கி வைத்துவிட்டார் முதல்வர் பழனிசாமி.

வாரிசு அரசியல் முழக்கம்

வாரிசு அரசியல் முழக்கம்

தற்போது தினகரனுக்கு எதிராக 'வாரிசு அரசியல்' முழக்கத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள். இந்த அதிரடியை தினகரன் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை.

தொடர் ஆலோசனை

தொடர் ஆலோசனை

இதனிடையே அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் பேசுகின்றவர்கள், ஆர்.கே.நகர் தேர்தல் வரையில் உங்கள் கையைப் பிடித்து நடந்த எடப்பாடி, இன்று உங்களையே எதிர்க்கத் துணிந்துவிட்டார். சசிகலா குடும்பத்தை அழிப்பதற்கு, பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். இனியும் இவர்களை விட்டு வைப்பது நல்லதில்லை. இதுநாள் வரையில் சேர்த்த சொத்துக்களைக் காப்பாற்றவே, மோடி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுகிறார் எனக் கொதித்துள்ளனர்.

நம்மாலே முதல்வர் பதவி

நம்மாலே முதல்வர் பதவி

டெல்டா மாவட்டங்களிலும் தென்மாவட்டங்களிலும் உள்ள கட்சிக்காரர்களை நம்பக்கம் திருப்புங்கள். நான் சிறையில் இருக்கும்போது கூடிய கூட்டத்தில், ஒரு பகுதியினர் திரண்டு வந்தாலே போதும். சம்பத்தையும் புகழேந்தியையும் தொடர்ந்து பேசச் சொல்லுங்கள். நமக்குக் கூட்டம் கூடும்போதுதான், எடப்பாடிக்குப் பயம் வரும். நாம் நினைத்தால்தான், முதல்வர் பதவி என்பதை அவருக்குக் காட்ட வேண்டும் எனக் கொதித்திருக்கிறார்.

கொடும்பாவி எரிப்போமா?

கொடும்பாவி எரிப்போமா?

இதன் பின்னர் தினகரன் ஆதரவு நிர்வாகி ஒருவர், காட்டுமன்னார் கோவில் முருகுமாறன், கோ.அரி ஆகியோருக்கு நாம் யார் என்பதைப் புரிய வைக்க வேண்டும். சசிகலாவை எதிர்த்து தாறுமாறாக பேசுகிறார்கள். கட்சியே எடப்பாடி கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறார்கள். இவர்களது செல்போன் எண்களை பொதுவெளியில் பரப்பி, தொண்டர்கள் மூலமே கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். மாவட்டம்தோறும் எடப்பாடி பழனிசாமி கொடும்பாவி எரிப்பு நடவடிக்கையில் இறங்கினால்தான் சரிப்படும்' என்றெல்லாம் கொதித்திருக்கிறார்.

ஆட்சி கவிழ்ப்பு உறுதி

ஆட்சி கவிழ்ப்பு உறுதி

இறுதியாகப் பேசிய தினகரன், நான் குறித்த கெடுவுக்குள் எடப்பாடி இந்தப் பக்கம் வருகிறாரா என்று பார்ப்பேன். இல்லாவிட்டால், ஆட்சியைப் பறிக்க நீண்டநாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார். கட்சியில் இருந்து ஒதுங்குகிறேன் எனப் பேச்சுவாக்கில் தினகரன் கூறியதை வைத்தே, அவருக்கு எதிரான வலைப் பின்னலை அதிகரித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைத்து, பொதுச் செயலாளர் பதவியையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர் கொங்கு மண்டல அமைச்சர்கள். இதுதான் தினகரனால் தாங்க முடியவில்லையாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran ordered to his supporters to organizing public meetings against Chief Minister Edappadi Faction.
Please Wait while comments are loading...