For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு- மே 7-ல் தி.க. ஆர்ப்பாட்டம்: கி. வீரமணி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மே 7-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை:

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை இவ்வாண்டு முதலே செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.

இதுகுறித்து ‘விடுதலை'யில் விரிவாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளோம். (12.4.2016).

DK opposes Medical Entrance Exam

இதில் மிக முக்கியமாகக் கவனிக்கத் தக்கவைகளும், வினாக்கள் எழுப்பத்தக்கவைகளும் ஏராளம் உள்ளன.

  • மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வினை நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்கு சட்டப்படியான அதிகாரம் கிடையாது என்று இதே உச்சநீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியுள்ளதே (18.7.2015) அதற்கு முரணாக அதே உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பது சரியானதுதானா? முரண்பாடு அல்லவா?
  • மாநில அரசுகள், தம் நிதியில் மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கும்நிலையில் அதனை அகில இந்தியத் தொகுப்புக்குக் கொண்டு செல்லுவது சரியா?
  • நெருக்கடி நிலைகாலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றதால் ஏற்பட்ட தீய விளைவு தானே இது!
  • +2 தேர்வு நடத்தி அதில் மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்ப்பதுதான் சரி - அதற்கு மேல் இன்னொரு தேர்வு எதற்காக? அப்படியென்றால் அரசு நடத்திய +2 தேர்வுக்கு என்னதான் மரியாதை?
  • தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வே சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அதனை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அகில இந்திய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சரியா? மாநில ஆட்சியின் உரிமையில் மத்திய அரசு சவாரி செய்ய உச்சநீதிமன்றம் வழி வகுத்துக் கொடுக்கலாமா?
  • இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வி திட்டம் இல்லாத நிலையில், எல்லோருக்கும் பொதுவாக ஒரு நுழைவுத் தேர்வை எப்படி நடத்திட முடியும்? இதில் பொது நியாயம் ஏதாவது இருக்கிறதா?
  • சி.பி.எஸ்.இ. அடிப்படையில்தான் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அப்படியானால் சி.பி.எஸ்.இ. முறையில் படிக்கும் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதற்குத்தான் இந்தத் திட்டமா?
  • உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் இன்னொரு புதிய ஆபத்தும் தலைக்கு மேல் கொடுவாளாகத் தொங்குகிறது. மாநிலத்தில் பெரும்பாலும் நடைமுறையில் உள்ள சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டி, பலவகையான பள்ளிகளையும் சி.பி.எஸ்.இ. முறையில் மாற்றிடத் தூண்டும் வேலையல்லவா இது?
  • ஏற்கெனவே தனியார்ப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. முறைக்கு அதிக எண்ணிக்கையில் மாறிக் கொண்டிருக்கும் பொழுது உச்சநீதிமன்றத்தின் நுழைவுத் தேர்வு உத்தரவால், நாடெங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பெருகுமா பெருகாதா?
  • சி.பி.எஸ்.இ. முறை செயல்படுத்தப்பட்டால், இந்தியும், சமஸ்கிருதமும் கொல்லைப்புற வழியில் நுழைவதற்கான ஏற்பாடா?
  • தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இரு மொழி திட்டத்தை ஒழிப்பதற்கான சூழ்ச்சியா?
  • நகர்ப்புறப் பள்ளிகளில் உள்ள வசதிகள் கிராமப் புறங்களில் உண்டா?
  • நுழைவுத் தேர்வுக்காக தனிப் பயிற்சிகளில் சேர்ந்து படித்திட பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு வாய்ப்பு உண்டா? கிராமப்புறங்களில்அத்தகு பயிற்சி நிறுவனங்கள்தான் இருக்கின்றனவா?
  • சமூகநீதிக் கொள்கை ஓங்கி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இருபால் மாணவர்கள் நுழைவுத் தேர்வு இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் சேர்ந்து வருவதை ஒழித்துக் கட்டும் பார்ப்பன ஆதிபத்திய சூழ்ச்சி இதன் பின்னணியில் இருக்கிறது என்று ஏன் கருதக் கூடாது?
  • +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் தகுதியில் குறைந்ததாக ஏதேனும் ஆதாரம் உண்டா?
  • ஆந்திர மாநிலமும், ஜம்மு காஷ்மீர் மாநிலமும் அகில இந்திய தொகுப்புக்கு இடம் வேண்டாம் என்று கூறித் துண்டித்துக் கொண்டுள்ளன. அந்த நிலையை எடுக்கத் தமிழ்நாடு அரசு யோசிக்க வேண்டும்.
  • இந்தப் பிரச்சினையில் இதுபோன்ற அறிவார்ந்த சமூகநீதியை உள்ளடக்கிய நியாயமான வினாக்கள் உண்டு.
  • தந்தை பெரியார் பிறந்த மண், திராவிட இயக்கம் வேரூன்றிய தமிழ் மண்ணுக்கே உரித்தான (Soil Psychology) சமூகநீதி மனப்போக்கு தழைத்தோங்கும் இந்தத் தமிழ்ப் பூமி, சமூகநீதிக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் ஏற்றுக் கொள்ளாது - ஏற்றுக் கொள்ளவே கொள்ளாது.
  • இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு - முதல் அமைச்சர் ஏன் கருத்துக் கூறவில்லை? மிக முக்கியமான சமூகநீதிப் பிரச்சினையில் அலட்சியம் காட்டலாமா?

மேற்கண்ட காரணங்களை வலியுறுத்தவும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கவும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை உச்சநீதிமன்றத்திற்கு வெளிப்படுத்தவும் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்யவும் வலியுறுத்தி திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பில் வரும் 7.5.2016 காலை 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் மானமிகு பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

English summary
Dravidar Kazhagam will hold protest against Common Entrance Exam for Medical studies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X