For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிடிகொடுக்காத தே.மு.தி.க... வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் அறிவாலயம், கமலாலயம்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணிகள் அமையத் தொடங்கிவிட்டன... ஆனாலும் பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க. எந்தப் பக்கம் சாயும் என்பதைப் பொறுத்துதான் தேர்தல் களம் பரபரக்கும்..

சட்டசபை தேர்தலை ஒன்றிரண்டு சிறிய கட்சிகளை இணைத்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதில் அ.தி.மு.க. முனைப்புடன் இருக்கிறது. அ.தி.மு.க. அணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன.

இந்த கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கப்பட்டு இரட்டை சிலை சின்னத்திலேயே போட்டியிட வைப்பது என்பது அ.தி.மு.க.வின் திட்டம். இந்த கட்சிகள் அல்லாமல் தமிழ் மாநில காங்கிரஸுக்கு 5 முதல் 8 இடங்களையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுத்து இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையையும் அ.தி.மு.க. நடத்தி வருகிறது. அதேபோல் மனித நேய மக்கள் கட்சியும் அ.தி.மு.க. அணிக்கு செல்லக் கூடும் என கூறப்படுகிறது.

தே.மு.தி.க, காங்.

தே.மு.தி.க, காங்.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தான் இப்போது அதன் கூட்டணியில் இருக்கிற கட்சி. தே.மு.தி.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை கூட்டணியில் இணைத்துவிட்டாலே போதும்... பலம் வாய்ந்த அணியாக அமைத்துவிடலாம் என்பது தி.மு.க.வின் கணக்கு.

பா.ஜ.க. வியூகம்

பா.ஜ.க. வியூகம்

பாரதிய ஜனதாவோ, தே.மு.தி.க, பா.ம.க. ஆகிய கட்சிகளை இணைத்துக் கொண்டு கூட்டணி அமைத்தால் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக 3வது அணியை உருவாக்கிவிடலாம் என கணக்குப் போடுகிறது..

மக்கள் நலன் கூட்டணி

மக்கள் நலன் கூட்டணி

அ.தி.மு.க, தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று அறிவித்தபடி உதயமாகி இருக்கிறது மக்கள் நலன் கூட்டணி. அத்துடன் த.மா.காவும் தே.மு.தி.க.வும் எப்படியும் தங்களது அணிக்கு வந்துவிடும்.. இதனால் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக 3-வது அணியாக உருவாகிவிடலாம் என நினைக்கிறது மக்கள் நலன் கூட்டணி.

பாமக

பாமக

பா.ம.க.வைப் பொறுத்தவரையில் அன்புமணியை முதல்வராக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி என்று அறிவித்துப் பார்த்தும், சில சமரசங்களுக்கு தயார் என ஏலம் விட்டுப் பார்த்தும் இன்னமும் போணியாகவில்லை.. எந்த ஒரு கட்சியும் பா.ம.க.வுடன் கரம் கோர்க்க முன்வரவும் இல்லை. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது பா.ஜ.க.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் கூட்டணி; இல்லையேல் தனித்தே போட்டி என்று தடலாடி காட்டி வருகிறது காங்கிரஸ். இருந்தபோதும் தி.மு.க அணிக்கு காங்கிரஸ் செல்லவே அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

தே.மு.தி.க...

தே.மு.தி.க...

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது; அ.தி.மு.க. மீண்டும் வெல்லக் கூடாது என்பதற்கான எத்தகைய தியாகத்தையும் செய்ய தயார் என்று அவ்வப்போது 'சுதி' மாற்றிப் பேசிவருகிறது தே.மு.தி.க. பா.ஜ.க.வோ, தே.மு.தி.க. எங்களது கூட்டணியிலேயே நீடிக்கிறது என்று கூறிக் கொண்டே இருக்கிறது.

தே.மு.தி.க.வைப் பொறுத்தவரையில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகியோர் எடுக்கும் முடிவு மட்டுமே கட்சியின் நிலைப்பாடு. தே.மு.தி.க.வுக்கு எதிர்காலம் என்ன என்பதைக் காட்டிலும் தங்கள் குடும்பத்துக்கு என்ன ஆதாயம் என்பதைப் பொறுத்தே இவர்களது முடிவு அமையும். லோக்சபா தேர்தலின் போது எப்படியும் சுதீஷை ராஜ்யசபா எம்.பி.யாக்கி மத்தியில் அமைச்சராக்கிவிடும் பா.ஜ.க. என்று ரொம்பவே எதிர்பார்த்தது தே.மு.தி.க. ஒன்றரை ஆண்டுகாலம் உருண்டோடியதைத் தவிர அதற்கான எந்த ஒரு சிக்னலுமே தெரியவில்லை.

கமலாலயமும் அறிவாலயமும்

கமலாலயமும் அறிவாலயமும்

இதனால் பா.ஜ.க. மீது வெறுப்பாக இருந்தாலும் தங்களுக்கான வாய்ப்பும் கதவுகளும் மூடப்படவில்லை என்பதில் திடநம்பிக்கையோடு காத்திருக்கிறது தே.மு.தி.க. தமிழக சட்டசபை தேர்தல் "அறுவடைக்கு" பின்னர் உங்களுக்கு "ஆதாயம்" கிடைக்கும் என பா.ஜ.க. உறுதிமொழி கொடுத்தால் தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே தே.மு.தி.க. நீடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இந்த துருப்புச் சீட்டை கையில் வைத்துக் கொண்டு பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் காத்தே கிடக்கிறது.

அதே நேரத்தில் அ.தி.மு.க.வை வீழ்த்த எங்களுடன் கூட்டணி சேருங்கள்; ஆட்சி அதிகாரத்தில் பங்கு; முக்கிய அமைச்சரவை இலாக்காகள் ஏன் துணை முதல்வர் பதவியும் தருகிறோம் என பா.ஜ.கவை விட பெரிய "தீனியை" தி.மு.க. வீசினால் தே.மு.தி.க. என்கிற மீன் சிக்கவும் வாய்ப்பிருக்கிறது... கடைசி நேரத்தில் இந்த வலையை விரிக்க தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயமும் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த இரண்டு வாய்ப்புகளே பெரிய ஆதாயம்தான் என்பதால் தேர்தல் நெருங்கும் வரை 'கமுக்கமாக' இருந்தால் இந்த பேரம் இன்னும் அதிகரிக்கும் என கூட்டணிக்கு பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருக்கிறது தே.மு.தி.க.

என்னா ஒரு வியூகம்!

English summary
Sources Said that DMDK may join DMK lead alliance or BJP's NAD for upcoming Tamilnadu assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X