For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் 15 தீர்மானங்கள் - பகுதி 1

Google Oneindia Tamil News

திருச்சி: திமுகவின் திருச்சி மாநில மாநாட்டில் இன்று 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் குறித்த விவரம்

1. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுக

அறிஞர் அண்ணா அவர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம், தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக, மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உச்சநீதி மன்றத்தின் உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், மத்திய அரசு சேது சமுத்திரத் திட்டப் பணிகள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வழியில் தொடரலாம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளது.

DMK conference resolutions

தென் மாவட்ட மக்களின் முன்னேற்றத்திற்கான சேது சமுத்திரத் திட்டத்திலும் முன்னுக்குப் பின் முரணாக ஜெயலலிதா கருத்துக்களைச் சொல்லிக் கபட நாடகம் ஆடுகிறார். 2001ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் - சேது சமுத்திரத் திட்டத்தை வலியுறுத்திச் சொல்லிவிட்டு; தற்போது அந்தத் திட்டத்திற்கெதிராக ஜெயலலிதா அரசு உச்ச நீதி மன்றத்திலேயே மனு தாக்கல் செய்திருப்பது தென்மாவட்டங்களின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி, மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்கும் இந்த மாபெரும் திட்டத்தை முடக்கி தமிழர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாகும். பிற்போக்குச் சக்திகளின் முயற்சிகளை முறியடித்து, தாமதமாகி வரும் சேதுக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தி முடித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆ ண்டிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பாக, திட்டப்பணிகள் தொடங்குவதற்குச் சாதகமாக பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டுமென மத்திய - மாநில அரசுகளை இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது.

2. கச்சத்தீவு பிரச்சினை

இந்திய நாட்டின் இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட கச்சத்தீவின் உரிமையை இலங்கை நாட்டுக்கு விட்டுக் கொடுப்பது சம்பந்தமான பிரச்சினை நாடாளு மன்றத்தில் முறைப்படி விவாதிக்கப்பட்டோ, அரசியல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டோ, அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட ஒப்பந்தம் அல்ல என்பதால் அது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், எனவே அந்த ஒப்பந்தம் செல்லாது என்றும் தெரிவிக்க வேண்டுமென்று """"டெசோ"" அமைப்பின் மூலமாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலே இருக்கும்போது, கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடை செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் கச்சத் தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.

3. ஈழத் தமிழர் பிரச்சினை

இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலை, மற்றும் இன அழிப்புக் கொடுமைகளைக் கண்டித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் மீண்டும் அமெரிக்கா வருகின்ற மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இப்பிரச்சினையில் இலங்கை அரசு மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று கடந்த 2009 முதல் உலகத் தமிழ்ச் சமுதாயமும், சர்வ தேச சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
கடந்த காலத்தில் இரண்டு முறை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவினால் முன்னெடுத்துச் செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொண்ட பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன் இலங்கையில் நடந்த இனஅழிப்புக்கு சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அதை பிரிட்டிஷ் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் என்று உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கை தமிழ்ச் சங்கம், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்பாட்டுக் குழுமம் மற்றும் உலகத் தமிழ் அமைப்பு ஆகிய அமைப்புகள் கடந்த 22.1.2014 அன்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு எழுதிய வேண்டுகோள் கடிதத்தில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளன.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கை அதிபர் இராஜபக்சேயின் செயலாளர் லலித் வீரதுங்கா அமெரிக்காவினால் முன்மொழியப்படும் தீர்மானத்தை முறியடிக்க ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் ஆதரவு திரட்ட, தங்கள் நாட்டுப் பிரதிநிதிகள் வெவ்வெறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது மனித உரிமையில் நாட்டமும் நம்பிக்கையுமுள்ள அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும்.
இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு; சுதந்திரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று இம்மாநில மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

4. நதிகள் தேசிய மயமும், இணைப்பும்

2002ஆம் ஆண்டில் இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நதிநீர் தேசிய மயம் - நதிநீர் இணைப்பு தொடர்பான பொதுநல வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினைத் தொடர்ந்து, இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கி இந்தியாவின் வடபாகத்தில் உள்ள கங்கை - மகாநதியை தென் பகுதியில் ஓடிக்கொண்டிருக்கும் கிருஷ்ணா, பெண்ணாறு, காவேரி, வைகை, தாமிரபரணி, நெய்யாறு ஆகிய நதிகளுடன் இணைத்திட வேண்டுமென்றும், கேரள மாநிலத்தில் மேற்கு நோக்கி பாய்ந்து, அரபிக் கடலில் வீணாகும் அச்சங்கோவில் - பம்பா நதிகளை தமிழ்நாட்டோடு இணைத்திட வேண்டுமெனவும், இந்த நடவடிக்கைகளுக்கு வடிவம் கொடுப்பதற்கும் நிறைவேற்ற வழிவகைகள் காண்பதற்கும், நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை உருவாக்கி அதற்குரிய திட்டச் செலவையும் ஒதுக்கீடு செய்து, இந்தியாவில் கிடைத்திடும் முழு அளவு நீரின் பயன்பாட்டை உயர்த்தி, உரிய நீர் மேலாண்மை மூலம் இந்திய வேளாண்மையின் தரத்தையும் உற்பத்தியையும் அதிகரித்து வேளாண் பெருங்குடி மக்களைக் காப்பாற்றவும், அனைத்துப் பகுதிகளிலும் குடி நீர்த் தேவையை முழுமையாக நிறைவு செய்திடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை இம்மாநில மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

5. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு

இந்திய நாட்டில் சுமார் 50 ஆயிரம் கோடி மதிப்புள்ளதும், மக்கள் தொகையில் இருபது கோடி மக்களுக்கு உணவு அளிப்பதுமான இந்தியாவின் சில்லரை வணிகத்தை கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் ஒற்றை இலச்சினை சில்லரை வணிகத்தில் நூறு விழுக்காடு அந்நிய மூலதனத்தையும், பல இலச்சினை சில்லரை வணிகத்தில் 51 விழுக்காடும் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்தது. இதனால் நாடு முழுவதும், ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக உள்நாட்டுத் தொழிலையும், விவசாயத்தையும், பாதுகாப்பதாகச் சொல்லி மத்திய அரசு சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகள் வருமாறு :-
1. அந்நிய நிறுவனங்கள், தாம் விற்பனை செய்யும் பொருட்களில் குறைந்தபட்சம், 30 விழுக்காடு, இந்தியாவில் உள்ள சிறு தொழிற்கூடங்களில் இருந்து வாங்க வேண்டும்.

2. தங்களது முதலீட்டில் 50 விழுக்காடு தொகையை, குளிரூட்டப்பட்ட கிடங்குகள் போன்ற பின்புல கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஒதுக்க வேண்டும்.

3. 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே பன்னாட்டு வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும் என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை சில அன்னிய நிறுவனங்கள் ஆட்சேபித்ததால், பன்னாட்டு வணிக நிறுவனங்கள், 10 லட்சம் மக்கள் தொகைக்கு, உட்பட்ட நகரங்களிலும் சில்லரை வணிக நிறுவனம் தொடங்கலாம் என்றும்; அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், தங்களுடைய முதலீட்டில், பாதியை, பின்புல கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டும் என்பது, அவர்களின் முதல் பத்து கோடிக்கு மட்டும் பொருந்தும் என்றும்; சிறு தொழில் முதலீட்டு வரையறையை 10 லட்சம் டாலரில் இருந்து இருபது லட்சம் டாலர். (13 கோடி ரூபாய்) என மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது.

இந்தச் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் இறங்குமானால், சில்லறை வணிகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்திற்கும், அதையே நம்பி யிருக்கும் பல கோடி பேர், தத்தளிக்கக்கூடிய நிலைமை உருவாகும் என்பதை உணர்ந்து, சில்லரை வணிகத்தில், அந்நிய முதலீடு என்பதை முற்றிலும் தடுத்திட வேண்டுமென, இம் மாநில மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

English summary
Here are the DMK conference resolutions adopted in the Trichy meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X