For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காற்றில் வாளை வீசும் அ.தி.மு.க. அமைச்சர்கள்! ஆர்.கே. நகர் பிரச்சாரம் பற்றி கருணாநிதி விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும், ஆர்.கே.நகரில் முகாமிட்டுள்ளதால், ஆட்சி என்ற ஒன்று நடைபெறுகிறதா..இல்லையா என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

தி.மு.க. தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...

karunanithi

'தமிழ்நாட்டில் என்ன நடைபெறுகிறது? மக்களுக்கான ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா? அமைச்சர்கள் என்போர் தலைமைச் செயலகத்திற்கு வந்து நிர்வாகக் காரியங்களை ஆற்றுகிறார்களா? கோப்புகள் நகருகின்றனவா? அதைப்பற்றி யாருக்காவது அணுவளவேனும் கவலையோ, அக்கறையோ உண்டா?

ஏடுகளைப் பிரித்தால், அதிலே அத்தனை அமைச்சர்களும் முகம் காட்டுகிறார்கள்; அவர்கள் என்ன மக்கள் பணியா ஆற்றுகிறார்கள்? மக்களுக்கு சேவை செய்யத்தானே அவர்கள் எல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

ஆனால் அத்தனை அமைச்சர்களும் ஆர்.கே.நகரில் முகாமிட்டிருக் கிறார்கள்! அங்கே அவர்கள் இருக்கிறார்களோ? இல்லையோ; ஏடுகளிலே முகம் காட்டுகிறார்கள்.

ஒரு அமைச்சர் அந்தத் தொகுதியில் பொது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறார் என்று ஏட்டில் செய்தி போட வேண்டுமென்றால், அதற்கு ஒரு கட்டணம்! புகைப்படத்தோடு செய்தி வெளியிட வேண்டுமென்றால் அதற்கு வேறு கட்டணம்! அதற்கான "ஏஜெண்டு"களுக்கு தனிக் கமிஷன்!

எப்படியாவது தாங்கள் பிரச்சாரம் செய்வது தேவரீர் அம்மையாரின் திருக்கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுதான். "அம்மா" எந்த ஏட்டைப் படிக்கிறார்கள் என்று ஆய்ந்து பார்த்து, அந்த ஏட்டில், தாங்கள் இடையறாது தேர்தல் பிரச்சாரம் செய்வதாகச் செய்தி வர வேண்டுமென்றுதான் துடியாய்த் துடிக்கிறார்கள்!

ஆர்.கே. நகர்த் தொகுதியிலே அப்படி ஏதாவது கடுமையான போட்டியா? இவர்கள் வம்பே வேண்டாமென்று முக்கிய கட்சிகள் எல்லாம் ஒதுங்கிக் கொண்டன! எதிரியே இல்லாத தொகுதியில் இத்தனை அமைச்சர்களும் "சவடால்" வாக்கு கேட்டுப் பிரச்சாரமாம்! வெறும் காற்றில் வாளை வீசுவதைப் போல, வெற்று ஆடம்பரப் பிரச்சாரமாம்! இதற்காக அத்தனை அமைச்சர்களும் அங்கே குழு அமைத்து பட்டுவாடா செய்கிறார்களாம்!

ஏடுகளிலே இந்த அமைச்சர்களின் பிரச்சாரத்தைத் தவிர வேறு என்ன செய்தி வந்திருக்கிறது என்று பார்த்தால், மாலை ஏடுகளில் மட்டும், தாம்பரம், ஆதம்பாக்கத்தில் அடுத்தடுத்து 4 வீடுகளில் 60 சவரன் கொள்ளை - கொள்ளையர்கள் அட்டூழியம். (மாலைமுரசு) காரப்பாக்கத்தில் அம்மன் கோவிலில் 17 சவரன் நகை திருட்டு செங்கல்பட்டில் அடுத்து அடுத்து 3 வீடுகளில் 100 பவுன் நகை கொள்ளை. மார்வாடிப் பெண்ணிடம் செயின் பறித்த மர்ம ஆசாமிகள்! கைக் குழந்தையோடு புகார் கொடுக்க அலைந்த பரிதாபம். திருவண்ணாமலை அருகே செம்மரக் கட்டை ஏஜெண்ட் ஐம்பது இலட்சம் ரூபாய் கேட்டுக் கடத்தல் வீட்டின் பூட்டை உடைத்து 39 சவரன், பணம் கொள்ளை - ஆதம்பாக்கத்தில் பரபரப்பு வீடு புகுந்து 5 லட்சம் ரூபாய் பணம், நகை கொள்ளை
எஸ்.ஐ. வீட்டில் 11 பவுன் கொள்ளை - தாம்பரத்தில் துணிகரம் தென்சென்னையில் ஒரே நாளில் 3 வீடுகள் - கோவிலில் கொள்ளை இவை ஒரு நாள் மாலையில் மட்டும் வந்த செய்திகள்! இதில் என்ன ஆச்சர்யம்? ஒவ்வொரு நாளும் இப்படித்தானே செய்திகள் வருகின்றன என்று கேட்கலாம். ஆமாம், இப்படித்தான் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவனிக்கவோ, கருதிப் பார்க்கவோ, ஆட்சியாளர்களுக்குக் கால நேரம் இல்லை. ஏன் இல்லை, என்ன செய்கிறார்கள் என்றால், ஆர்.கே. நகர்த் தொகுதியில் இரவும் பகலும் இடைவிடாமல் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள்.

யாரை எதிர்த்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்? யாரையும் எதிர்த்து இல்லை என்றால், பின்னர் எதற்காகப் பிரச்சாரம்? அம்மாவை ஆதரித்துப் பிரச்சாரம்! எதிர்ப்பு தான் இல்லையே, பிறகு எதற்காகப் பிரச்சாரம் என்றால், என்ன செய்வது, எங்கள் அமைச்சர் பதவி நிலைக்க வேண்டாமா?

கடந்த ஏழெட்டு மாதமாக கோவில் கோவிலாகச் சுற்றி வந்தோம்; பூஜை புனருத்தாரணங்களில் ஈடுபட்டோம்; மொட்டை போட்டுக் கொண்டோம்; யாகங்கள் செய்தோம்; பால் காவடி தூக்கினோம்; வேப்பிலை ஆடை உடுத்தினோம்; வேண்டுதல் எல்லாம் "அம்மா" விடுதலைக்காகத்தான்; இல்லையில்லை; அமைச்சர் பதவி நிலைக்க வேண்டு மென்பதற்காகத்தான்! தற்போது அம்மா விடுதலையாகி விட்டதால், அம்மாவுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்துள்ளோம் என்பார்கள்.

ஆனால் நாட்டிலே என்ன நடைபெறுகிறது? தமிழகப் பொதுப்பணித் துறையில் 45 சதவீதம் வரை அதிகாரிகள் கமிஷன் கேட்பதாக, ஒப்பந்ததாரர்களே வெளிப்படையாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். "ப்ளக்ஸ் போர்டே" வைத்தார்கள். முதற்கட்டமாக பத்து ஊழல் அதிகாரிகளின் பெயர்களையே வெளியிட்டார்கள். லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கடந்த மே திங்கள் 9 ஆம் தேதியன்று புகார் மனுவே அளித்தார்கள். என்ன நடைபெற்றது? ஏதாவது விசாரணை நடந்ததா?

புகார் மனு கொடுத்த ஒப்பந்ததாரர்களையெல்லாம் தேடிப் பிடித்து சமரசம் பேசப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் சங்கமே இரண்டாக உடைக்கப்பட்டது. புகார் கொடுத்தவர்கள் மீதே சங்கத்திலே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து எந்த ஒப்பந்த வேலைகளும் தரக் கூடாது என்று பொதுப்பணித் துறைத் தலைமை வாய்மொழி உத்தரவே பிறப்பித்துள்ளது.

இவை மாத்திரம்தானா? அந்த ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே செய்த பணிகளையெல்லாம் எடுத்து ஆய்வு செய்து அவற்றின் மீது ஏதாவது குறை - குற்றம் கண்டுபிடிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக அஞ்ச மாட்டோம் என்று அந்த ஒப்பந்ததாரர்கள் கூறியுள்ளார்கள்.

ஆட்சியிலே தவறு நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டித் தட்டிக் கேட்டாலே, தண்டிக்கின்ற தறி கெட்ட ஆட்சிதான் தமிழகத்திலே நடைபெறுகிறது.

தமிழ்நாட்டு மக்களே! அனைத்துக் கட்சிகளிலும் இருக்கும் மனச்சாட்சி உள்ளவர்களே! உங்களிடம் கேட்கிறேன், ஒரு சில நிமிடங்கள் நினைத்துப் பாருங்கள்! தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? ஆட்சி என்று ஒன்று ஜனநாயக ரீதியாக நடைபெறுகிறதா?

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றத்தால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட பிறகு தமிழகத்திலே என்ன நடந்தது?

தமிழக முதலமைச்சர் என்று ஒருவர் - மக்கள் முதல்வர் என்று ஒருவர்! முதல் அமைச்சருக்கு உரிய அறையிலேகூட உட்காராத ஒரு முதலமைச்சர். முதலமைச்சர் என்று அழைத்துக் கொள்ளக்கூட கூச்சம் கொண்டதைப் போல காட்டிக் கொண்ட ஒருவர்.

தமிழக அரசு அலுவலகங்களிலும், கட்டிடங்களிலும் முதலமைச்சரின் படங்களைக்கூட மாற்றவில்லை. ஏன், இன்னும் சொல்லப்போனால், இந்த ஆண்டு பிறந்து ஆறு மாதங்களாகின்றன. இதுவரை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிய "டைரி" கூட அச்சடித்துத் தரவில்லை!

பேரவைச் செயலகம் என்று ஒன்று இயங்குகிறதா? பேரவைச் செயலாளர் என்று ஒருவர் இருக்கிறாரா? அவர் தான் ஆண்டுக்கணக்கிலே பதவி நீடிப்பு பெற்று ஆளுவோருக்கு ஆலவட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறாரே? அவர் எப்படி "டைரி" வெளியிடுவார்? வெளிவந்த அரசு காலண்டரிலே கூட முதலமைச்சர் படம் இடம் பெறவில்லை.

ஐந்தாறு மாதங்கள் முதல்வராக பன்னீர்செல்வம் பதவி வகித்தாரே, அந்த மாதங்களில் ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சி நடைபெற்றதா? அதிலே அவர் கலந்து கொண்டாரா? ஏதாவது ஒரு கட்டிடத்தையோ, பாலத்தையோ அவர் திறந்து வைத்தாரா? பிறகு எதற்காக அவர் முதலமைச்சர்?

நாடுதானா இது? இப்போது மட்டும் என்ன கிழிக்கிறது? அன்றாடம் முதலமைச்சர் ஜெயலலிதா மதியம் 1 மணி அளவில் தலைமைச் செயலகத்திற்கு வருவதும், காணொலி காட்சி மூலமாக தினமும் ஏதேதோ கட்டிடங்களைத் திறந்து வைத்ததாகவும், அமைச்சருடன் ஆலோசனை நடத்தியதாகவும் புகைப்படங்களுக்குக் காட்சி தந்து விட்டு, அவற்றை பத்திரிகைகளுக்கும் செய்தியாகத் தந்து விட்டு, 3 மணி அளவில் இல்லம் திரும்பி விடுகிறார்.

பொறுப்புக்கு வந்த இந்த 20 நாட்களில் இப்படி என்னென்ன செய்திருக்கிறார் என்றால்; 25-5-2015 அன்று பதவியேற்ற முதல் நாளில், தலைமைச் செயலாளரும், ஆலோசகரும் பக்கத்திலே நிற்க 3,047 கோடி ரூபாய் மதிப்பிலான ஐந்து திட்டங்களுக்கு முதலமைச்சர் ஒப்புதல் தந்து கையெழுத்திட்டார் என்ற செய்தி வந்தது.

தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முடிந்து, நிதிநிலை அறிக்கை படிக்கப்பட்டு பொது விவாதமும் முடிந்தது. ஆனால் இன்று வரை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவே இல்லை. மானியக் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் பல துறைகளில் பணிகள் நடைபெறாமல் முடங்கிக் கிடக்கின்றன.

முதலமைச்சர் அறிவித்த 3047 கோடி ரூபாய்க்கான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையிலே அறிவிக்கப்படவும் இல்லை. ஆனால் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் முடிந்த பிறகு, முதலமைச்சராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்றதும் அவசர அவசரமாக அறிவிப்புதான் வந்தது.

அடுத்தடுத்த நாட்களிலே என்ன நடைபெற்றது தெரியுமா? 27-5-2015 அன்று காவல் நிலையங்கள் - புதிய குடியிருப்புகள் போன்ற 444 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களையும்; 30-5-2015 அன்று 2,154.26 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான துணை மின் நிலையங்களையும்; 31-5-2015 அன்று 814 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டுக் குடிநீர் திட்டங்களையும்...

3-6-2015 அன்று நெடுஞ்சாலைத் துறை சார்பில் 389 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பாலங்களையும்; 4-6-2015 அன்று 111.24 கோடி ரூபாய் மதிப்பிலான மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களையும்; 9-6-2015 அன்று 100 கோடி ரூபாய் மதிப்பிலான பாசன மேம்பாட்டுத் திட்டங்களையும்; 10-6-2015 அன்று 281 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிக் கல்வித் துறை - பள்ளிக் கட்டிடங்களையும்...

11-6-2015 அன்று நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் 123.08 கோடி ரூபாய் மதிப்பிலான நகராட்சி, பேரூராட்சிகளுக்கு புதிய அலுவலகங்கள், சுகாதார வளாகங்கள், பூங்காக்கள், சாக்கடை திட்டங்களையும்...

15-6-2015 அன்று 62 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 80 மாணவர் விடுதிகளையும் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்ததாக அன்றாடம் ஏடுகளின் வாயிலாக செய்திகள் வந்து கொண்டே உள்ளன. இன்று வரை ஜெயலலிதா திறந்து வைத்த திட்டங்களின் மதிப்பு என்று கூட்டிப் பார்த்தால், 4,898.47 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களைத் தொடங்கி வைத்து இருக்கிறார்.

ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றவுடன்தான் இந்தக் கட்டிடங்கள் எல்லாம் திடீரென்று கட்டப்பட்டு முடிவடைந்தனவா? ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டவை என்றால், பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது, அவைகளையெல்லாம் திறக்காமல், இத்தனை நாட்களாக வெறுமனே அந்தக் கட்டிடங்களையெல்லாம் பயன்படுத்தாமல் போட்டு வைத்திருந்தது ஏன்?

மக்கள் கொட்டிக் கொடுத்த வரிப் பணத்தைச் செலவு செய்து கட்டப்பட்ட கட்டிடங்கள்தானே அவைகள்? எத்தனை நாட்களாக அந்தக் கட்டிடங்கள் எல்லாம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் வெறுமனே போடப்பட்டிருந்தன? இதற்கெல்லாம் யார் காரணம்?

அதுமாத்திரமல்ல; இன்னும் ஒரு வேடிக்கை! போடியில் அரசு பொறியியல் கல்லூரியை ஜெயலலிதா திறந்து வைத்ததாக ஏடுகளிலே செய்தி வந்துள்ளது. ஆனால் இந்தக் கல்லூரி ஆறு மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்டு நடந்து வருகிறதாம்! எப்படிப்பட்ட வேடிக்கை வினோதங்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியிலே அரங்கேறுகின்றன என்பதற்கு இவைகள் எல்லாம் தக்க எடுத்துக்காட்டுகளாகும்!

கடந்த ஆண்டுகளில்தான் எந்த அமைச்சரையும் விட்டு ஓர் அறிவிப்பினைக்கூட செய்ய விடாமல் தடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதாவே 110வது விதியின் கீழ் அனைத்துத் துறை அறிவிப்புகளையும்தானே செய்ததாக விளம்பரப்படுத்திக் கொண்டார். இப்போதும் அதே பாணியில் திறக்கப்பட்ட கட்டிடங்களையெல்லாம் திறந்து வைத்ததாக ஒரு நாடகம் நாட்டுக்குத் தேவைதானா?

நான் கேட்கிறேன். கடந்த நான்காண்டு கால ஆட்சி யில் நடைபெற்ற தவறுகளைப் போல, முறைகேடுகளைப் போல வேறு எந்த ஆட்சிக் காலத்திலாவது நடைபெற்றது உண்டா?

அமைச்சர்கள் செய்த தவறுகள் காரணமாக ஜெயலலிதா பதில் சொல்ல முடியாமல், எத்தனை முறை அமைச்சர்களை மாற்றி அமைத்தார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியாதா? நடவடிக்கை எடுத்த அமைச்சர்களில் சிலரை மீண்டும் அமைச்சராக ஆக்கியது ஏன்? அவர்கள் செய்த தவறுகளை மக்கள் மறந்து விட்டதாக எண்ணமா? அல்லது முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டு விட்டனவா? தவறு செய்ததற்காக அமைச்சர்கள் மாற்றப்படவில்லை என்றால், அந்த அமைச்சர்கள் நீக்கப்பட என்ன காரணம்? வாக்களித்த மக்களுக்குத் தெரிந்து கொள்ளும் உரிமை இல்லையா?

ஆவின் பாலில் ஊழல் நடைபெற்றது என்பதற்காக அமைச்சர் ஒருவரை நீக்கியதோடு அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டாரே, அந்த வழக்கு என்னவாயிற்று?

மூத்த அரசுஅதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு சிலரை பதவியில் நியமிக்க வலியுறுத்தி, அதன் காரணமாக அந்த அதிகாரி தன் குடும்பத்தினரை நடுத்தெருவில் விட்டு விட்டு ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரே, அதற்காக ஒரு அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்தார்களே, அந்த வழக்கு என்னவாயிற்று?

முத்துக்குமாரசாமி சாவுக்காக ஒரு அமைச்சர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதுமா? அமைச்சரவை என்றால் கூட்டுப் பொறுப்பு அல்லவா? இந்த ஒட்டு மொத்த அமைச்சரவையும் முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்குப் பதில் சொல்ல வேண்டாமா? ஆனால் இப்போது என்ன நடக்கிறது? அந்த வழக்கையே நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி நடைபெறுகிறதா? இல்லையா?

செம்மரக் கடத்தல் வழக்கு என்ன ஆயிற்று? அதிலே சம்மந்தப்பட்ட அரசியல் பிரமுகர்கள் யார் யார்? அந்த வழக்கையும், திசை திருப்புவதற்கான முயற்சி நடைபெறுகிறதா இல்லையா?

ஆனால் இப்படிப்பட்ட தவறுகளையெல்லாம் மறைத்துவிட்டு இடைத் தேர்தலில் வெற்றி பெற என்ன அவசரம்? ஒரு தொகுதி, காலியான இடம் என்று அறிவித்து, அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஒரு சில நாட்களிலேயே அறிவித்த முன்மாதிரி இதற்கு முன்பு எப்போதாவது நடைபெற்றிருக்கிறதா?

ஜெயலலிதாவுக்குப் பதிலாக, பினாமி முதலமைச்சராகச் செயல்பட்டவரும், இன்று ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்திலே இருப்பவருமான பன்னீர் செல்வத்தின் தம்பி பற்றி எப்படிப்பட்ட புகார் வந்தது?

தற்கொலை செய்து கொண்டு மாண்ட தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒரு பூசாரி தன் கைப்பட தன் சாவுக்குக் காரணம், அமைச்சரின் தம்பி ராஜாதான் என்று எழுதி வைத்து விட்டுப் போயிருக்கின்ற வழக்கு என்னவாயிற்று? அந்த ராஜாவுக்கு கடந்த ஆண்டு ஜெயலலிதா கையால் சிறந்த நகர் மன்றத் தலைவர் விருதே வழங்கப்பட்டது. அவரிடமிருந்து நகர் மன்றத் தலைவர் பதவியைப் பறிக்கிறார்கள், அவர் கைது செய்யப்படுகிறார் என்றெல்லாம் செய்தி வந்ததே? என்னவாயிற்று? மறைக்கப்பட்டு விட்டதா?

மற்றொரு அ.தி.மு.க. நகர்மன்றத் தலைவி மீது போலி ஆவணங்களைக் காட்டி நில மோசடி செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றமே, அவர் மீது நடவடிக்கை எடுக்க நேற்று உத்தரவிட்டிருக்கிறது.

இதெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு நேர்ந்திருக்கும் தலைக்குனிவு நிகழ்வுகள் இல்லையா? இவ்வாறு எத்தனை புகார்களை, ஊழல்களை, முறைகேடுகளை, ஜனநாயகத்திற்கும் மக்களுக்கும் விரோதமான விபரீதச் செயல்களை எடுத் துரைப்பது? அய்யய்ய! சொல்ல வெட்கமாகுதே!

மேல் முறையீட்டில் நீதிபதி குமாரசாமி அளித்த விடுதலையின் காரணமாக ஜெயலலிதா குற்றமற்றவர் என்று தற்காலிகமாகக் கூறப்பட்டாலும், டான்சி வழக்கிலே உச்ச நீதிமன்ற நீதிபதி கேட்டதைப் போலக் கேட்கிறேன். மனசாட்சிப்படி ஜெயலலிதா குற்றமற்றவர்தானா?

குமாரசாமி அவர்களின் தீர்ப்பில் உள்ள கூட்டுத் தொகை தவறுக்கு யார் பொறுப்பு? அந்தக் கூட்டுத் தொகை சரிதானா? இதுபற்றிய விளக்கத்தை இதுவரை ஜெயலலிதாவோ, அவருடைய கட்சியினரோ அளித்திருக்கிறார்களா? ஆனால் இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், அவசர அவசரமாகப் பதவியேற்பு - இடைத் தேர்தல் அறிவிப்பு - அதிலே போட்டி என்பதெல்லாம் தமிழ்நாட்டு மக்களை இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்ற இறுமாப்புதானா?

ஆனால் இவை பற்றியெல்லாம் தமிழகத்திலே உள்ள நடுநிலை நாளேடுகள் என்று சொல்லிக் கொள்பவை ஜனநாயகத்தைப் போற்றி மக்கள் நலனைக் காத்திடும் பொருட்டு வாயைத் திறக்கின்றனவா என்றால், அதுதான் கிடையாது; மவுன விரதத் தில் மகிழ்ச்சி கொள்கின்றன! வாழ்க தமிழகத்தின் பத்திரிகாதர்மம்! வளர்க துக்ளக் தர்பார்!''

English summary
DMK leader Karunanithi Asked A Government is running in Tamilnadu Or not?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X