For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகார் தேர்தல்: "அண்ணன் பிரதமர் மோடி"க்கு தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கரின் பகிரங்க கடிதம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பீகார் தேர்தலை முன்வைத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

அக்கடிதம் விவரம்:

அன்பிற்குரிய அண்ணன் பிரதமர் மோடி அவர்களுக்கு,

நமோஸ்கார். உங்களுக்கு ஹிந்தியில் சொன்னால் தானே பிடிக்கும்.

நான் ஷாங்காய் சென்றதில்லை, ஆனால் நல்ல காலமாய் அகமதாபாத் வந்திருக்கிறேன். அதனால் சீனாவில் உள்ள ஷாங்காய் பேருந்து நிலையத்தை, அகமதாபாத் பேருந்து நிலையம் என்று உங்கள் டிஜிட்டல் டீம் சொன்ன போது நான் நம்பவில்லை.

ஆனால் தேசம் நம்பியது. உங்களைக் காட்டி எதைச் சொன்னாலும் நம்பும் நிலையில் நாடு இருந்தது.

ஒரு ஆபத்பாந்தவன் வரமாட்டானா என வட இந்தியா காத்திருந்தது.

DMK Mla wrie a letter to PM Modi on Bihar verdict

நீங்கள் 'டிஜிட்டல் கிருஷ்ணனாய்' குதித்தீர்கள். "சம்பவாமி யுகே யுகே" என எங்கும் பஜனை ஓங்கி ஒலித்தது.

வடக்குடன், தெற்கும் லேசாய் அசைந்து விட்டது. 'டீ ஆற்றியவன் பிரதமர் ஆகக்கூடாதா?' என டேக் லைன் பிடித்தீர்கள்.

நம் மக்கள் மனம் இளகியது. "கொடுப்பதை மெஜாரிட்டியாய் கொடுங்கள்",என்றீர்கள். அள்ளி, அள்ளி கொடுத்தார்கள் மக்களும், மகா மெஜாரிட்டியை.

இது தான் சந்தர்ப்பம் என அமித்ஷாவை கொண்டு வந்து இறக்கினீர்கள். இளையோருக்கு வாய்ப்பு என்று, மூத்த தலைவர்களை தட்டி எறிந்தீர்கள்.

கட்சியை வளைத்துக் கைக்குள் கொண்டு வந்தீர்கள். மாநில முதல்வர்களாக கைப் பிள்ளைகளை இருத்தினீர்கள்.

வழக்கம் போல் மக்கள், இது உங்கள் 'விஸ்வரூபம்' எனக் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். வெளிநாட்டு பயணம் கிளம்பினீர்கள்.

இந்தியா திரும்பி, விமான சக்கர சூடு ஆறுவதற்குள், அடுத்த நாட்டு பயணத்தை அறிவித்தீர்கள். உலகம் உங்கள் கண் அசைவுக்கு காத்திருக்கிறது என்றார்கள்.

நீங்கள் 'உலகத் தலைவராய்' உயர்வதாக உளம் மகிழ்ந்தார்கள் மக்கள். 'மான் கீ பாத்' என்று ரேடியோவில் பேசியதை, தன்னிடம் நேரடியாக பேசியதாக நம்பினார்கள்.

DMK Mla wrie a letter to PM Modi on Bihar verdict

'ஸ்வச் பாரத்' மூலம் இந்தியாவின் அத்தனை அழுக்குகளையும் அகற்றி விடுவீர்கள் என நினைத்தார்கள்.

ஓபாமாவை கவர நீங்கள் போட்ட பத்து லட்ச ரூபாய் கோட் தான், உங்கள் 'எளிமையை' பறைசாற்றியது.

அதானியை உடன் அழைத்து சென்று, ஆஸ்திரேலியாவில் நிலக்கரி வயலை பிடித்துக் கொடுத்து, பாரத ஸ்டேட் வங்கியை ஆஸ்திரேலியாவிற்கே வரவைத்து 5,000 கோடி கடன் வாங்கிக் கொடுத்த போது தான், நீங்கள் "ஏழைப் பங்காளன்" என்பதை நிரூபித்தது.

அப்புறம் தான் இந்தியனின் மயக்கம் தெளிந்தது.

சிவராஜ் சௌகானின் மத்தியப் பிரதேச வெற்றியையும்,

ராமன் சிங்கின் சட்டிஸ்கர் வெற்றியையும்,

உங்கள் கணக்கில் நீங்களே சேர்த்துக் கொண்டீர்கள்.

மற்ற மாநிலங்களின் ஆளுங்கட்சி தோல்விகளை உங்கள் வெற்றி என்றே கொண்டாடினார்கள்.

இப்போது பிகார் தோல்வியை யார் கணக்கில் சேர்க்கப் போகிறீர்கள்?

மக்கள் உங்களுக்கு கொடுத்த வேலை, நாடாளுமன்ற தேர்தல் போது, நீங்கள் அள்ளி வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது. ஆனால் அது உங்களுக்கு கசக்கிறது.

கொடுத்த வாக்குறுதிப் படி, வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கவில்லை.

உள்நாட்டு ஏழை விவசாயிகள் நிலத்தை அடித்துப் பிடுங்க துடிக்கிறீர்கள்.

மதச்சகிப்புத் தன்மை என்பதை மொத்தமாய் துடைத்தெறிய பார்த்தீர்கள்.

செத்த சமஸ்கிருதத்தை பல்லக்கில் தூக்கிக் கொண்டு திரிந்தீர்கள்.

வளர்ச்சி எனும் உங்கள் 'டிசைனர் பைஜாமா'வுக்குள் இருக்கும் முரட்டு ஆர்.எஸ்.எஸ் 'காக்கி டவுசர்' ரொம்பவே நீண்டு விட்டது பைஜாமாவைத் தாண்டி.

மோதும் இடம் பார்த்து மோத வேண்டும்.

நீங்கள் 33 பெரிய பேரணிகளை நடத்திய நேரத்தில், அந்தக் கூட்டத்தின் இண்டு இடுக்குகளில் புகுந்து வெளியே வந்து விட்டார் நிதிஷ்.

உலகத் தலைவராய் பிஹாரில் வாக்கு கேட்டீர்கள். "பிஹாரியா(நிதீஷ்), பஹாரியா (வெளியூர் ஆளா)" என்ற ஒற்றை வரியில் உங்கள் நீண்ட, நீண்ட உரைகளுக்கு பதில் கொடுத்து விட்டார் நிதீஷ்.

மனிதனை பார்க்க சொன்னால், மாட்டைக் கட்டிக் கொண்டு அழுதீர்கள்.

மக்கள் சாட்டையை எடுத்திருக்கிறார்கள்.

இந்துத்துவா கண்ணாடியை கழற்றி விட்டு தேசத்தை பாருங்கள். மக்களை கவனியுங்கள்.

பெரியார் தேசத்திலிருந்து
சிவசங்கர்.

English summary
DMK Mla SS Sivasankar wrote a letter to PM Modi which was viral sharing in facebook on Bihar verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X