For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக ஆட்சியில்தான் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது: கருணாநிதி விளக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேதான் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில், ''10-8-2016 அன்று தமிழக சட்டப் பேரவையில், திமுக சார்பில் உரையாற்றிய கீதாஜீவன், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தியது திமுக அரசுதான் என்று கூறிய போது, அதிமுக அமைச்சர்கள் குறுக்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது என்று மறுத்திருக்கிறார்கள்

DMK party is given 33 percent reservation for women

.அப்போது எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் தந்து தேர்தலை நடத்தியது திமுக ஆட்சிதான் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சில தகவல்களை இந்த நேரத்தில் நினைவுபடுத்தினால் பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன்.

ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990ஆம் ஆண்டு இறுதியில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை.

1996ஆம் ஆண்டு, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6இல், "அடுத்து அமைக்கப்படும் திமுக அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்" என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

அவ்வாறு அறிவித்ததற்கிணங்க 96ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான வேட்பு மனு செப்டம்பர் 3ந்தேதி முதல் 10ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு முறையில் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 மாநகராட்சிகள், 104 நகராட்சிகள், 635 பேரூராட்சிகள், 12,584 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு 96ஆம் ஆண்டு அக்டோபரில் 9 மற்றும் 12ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவதென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.

மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்றும் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28இல் பெண்களுக்கு 10 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649இல் பெண்களுக்கு 242 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106இல் பெண்களுக்கு 35 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 என்றும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டன.

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் 8-9-1996 அன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகர மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், மதுரை மாநகர மேயர் பதவிக்கு பெ.குழந்தைவேலு, சேலம் மாநகர மேயர் பதவிக்கு டாக்டர் சூடாமணி ஆகியோர் பெயர்கள் முதல் பட்டியலிலேயே வெளியிடப்பட்டன.

அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஜெயக்குமாரும், மதுரை மாநகராட்சிக்கு காளிமுத்துவும் நிறுத்தப்படலாம் என்று ஏடுகளில் எல்லாம் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து 9-9-1996 அன்று சென்னை மாநகர மேயர் பதவிக்கு திமுக சார்பில் மு.க. ஸ்டாலினும், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும் மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை மேயர் பதவிக்கு தமிழக ஜனதா கட்சித் தலைவராக அப்போதிருந்த சந்திரலேகாவும், மதிமுக சார்பில் எஸ்.எஸ். சந்திரனும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர்.

ஆனால் இரண்டொரு நாட்களிலேயே அதிமுக திடீரென ஒரு முடிவினை எடுத்தது. சென்னை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் ஸ்டாலினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, மேயர் தேர்தலில் தனது வேட்பாளராக ஜெயக்குமாரை அறிவித்து, வேட்பு மனுவையும் தாக்கல் செய்த பிறகு, அதிமுக வேட்பாளர் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை அதிமுக ஆதரிக்கும் என்றும் இரண்டு கட்சிகளும் இணைந்து ஸ்டாலினை எதிர்த்தால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்றும் திட்டமிட்டு அறிவித்தார்கள்.

தாங்கள் போட்டியிலிருந்து விலகியது மாத்திரமல்லாமல், திமுகவைத் தவிர்த்த ஏனைய கட்சிகளும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு ஜனதா வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றும், திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.

சந்திரலேகா மீது திராவகம் வீசியவர் ஜெயலலிதாதான் என்று வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தனது வேட்பாளருக்கு ஜெயலலிதா ஆதரவு தருகிறார் என்றதும் அதனை ஏற்றுக் கொண்ட விசித்திரத்தை அப்போது தமிழ்நாடு கண்டது.

சென்னை மேயர் தேர்தலில் பிரச்சாரம் மிகவும் கடுமையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து எப்படியாவது ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டுமென்ற வெறியோடு பணியாற்றிய போதிலும், ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு கேட்பதிலேயே குறியாக இருந்தார்.

சென்னை மேயர் தேர்தல் நடைபெற்று இருபதாண்டுகளுக்குப் பின்னர் அந்தத் தேர்தல் நடைபெற்றதால் பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. மேலும் முதல் முறையாக மேயரை வாக்காளர்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்ற முறை அப்போதுதான் நடைபெற்றது.

ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பத்திரிகையாளர் சோ தனது துக்ளக் இதழில் "சென்னை மேயர் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? ஏன்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, "ஸ்டாலினுக்கு. அவருக்கு எதிராக நிற்பவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இருப்பதற்குள் நல்ல வேட்பாளர் ஸ்டாலின்தான் என்ற முடிவுக்கு நான் வருகிறேன்.

அவர், கருணாநிதியால் திணிக்கப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. இருபதாண்டுகளாக அரசியலில் இருக்கிறார். கட்சியில் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இப்போதும்கூட மக்கள் ஆதரவிருந்தால்தான் அவர் மேயராக முடியும். ஆகையால் இதில் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருப்பதாக நான் நினைக்கவில்லை. தன்னுடைய தொகுதியில் அவருக்கு நல்ல பெயரே இருக்கிறது. மேயர் தேர்தலில் என் ஓட்டு அவருக்கே" என்று சோ எழுதியிருந்தார்.

14-10-1996 அன்று உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணி அறிவிக்கப்பட்டன. திமுக, தமாகா கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலைப் பொறுத்த வரையில் சென்னையில் மொத்தம் 155 இடங்களில், திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 150 இடங்களிலும், அதிமுக 2 இடத்திலும், சுயேச்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றார்கள். ஏனைய மாநகராட்சிகளிலும் இதே போன்ற நிலைமை தான். அதுபோலவே தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 102 நகராட்சிகளில் திமுக 48 இடங்களிலும், தமாகா 28 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றன.

திருநெல்வேலியில் மேயராக திமுக வேட்பாளர் உமா மகேசுவரியும் - சேலத்தில் மேயராக திமுக வேட்பாளர் டாக்டர் சூடாமணியும், கோவையில் மேயராக தமாகா வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும், திருச்சியில் மேயராக தமாகா வேட்பாளர் புனிதவள்ளியும் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளிலும் திமுக, தமாகா கூட்டணியின் வேட்பாளர்களே மேயர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றனர்.

சென்னை மாநகராட்சி திமுகவின் பொறுப்பிலே இருந்த போதுதான், 1973ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நானே அதனைக் கலைப்பதாக பேரவையிலே அறிவித்தேன். அதே மாநகராட்சிக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பொறுப்பையேற்றது.

தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேதான். அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகித்திடும் நிலை உருவானது.

1989இல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது.

1990இல் திமுக ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

சலுகைகள் வழங்கிடும் நலத்திட்ட உதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை தரும் பல திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய திமுக ஆட்சியிலேதான், பெண்ணுரிமையைப் பறைசாற்றும் வகையில் இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்து, நிர்வாகத்திலும், உள்ளாட்சி மன்றப் பதவிகளிலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுப் பெண்ணின் பெருமை போற்றப் பட்டது.

வரலாற்று உண்மைகள் இப்படியிருக்க, அதிமுகவினர் எதைப் பேசினாலும் ஆமோதித்து அனுமதி அளித்திடும் பேரவைத் தலைவரை வசதியாக வைத்துக் கொண்டு, உலகம் பிறந்ததும் எங்களால்தான், நதிகள் ஓடுவதும் எங்களால்தான், நிலா காய்வதும் எங்களால்தான், நெருப்பு சுடுவதும் எங்களால்தான் என்று என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொள்ளாமல் எதையெதையோ பேசி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்!

எத்தனையோ நிகழ்வுகளைக் கண்ட சட்டப்பேரவை, இதையும் மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK party is given 33 percent reservation for women, karunanidhi says that
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X